தமிழ் அறிவோம்!
" நகுதல் பொருட்டன்று "
" வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் " என்றார்கள் நம் முன்னோர்கள். சில இடங்களில், சில நேரங்களில் நாம் வாய்விட்டுச் சிரித்தால் நம் வாழ்க்கையே நம்மைவிட்டுப் போகும் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். " இடுக்கண் வருங்கால் நகுக " என்றார் வள்ளுவர். அதாவது, " துன்பம் வரும்போது சிரிங்க " என்கிறார். அதே வள்ளுவர்தான் ஓரிடத்தில் " சிரிக்காதீர்கள். சிரித்தால் துன்பம் வரும் " என்கிறார்.
" செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியார் அகத்து."
( குறள் - 694)
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே , மற்றவர்கள் செவியோடு நெருங்கிச் சென்று பேசுவதையும் , அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்க்க வேண்டும். அடக்கமென்னும் பண்பைக் காத்திடல் வேண்டும். பெரியவர்கள் முன்னால் காரணமின்றிச் சிரித்தால், தன்னைப் பற்றித்தான் ஏதோ சொல்லிச் சிரிக்கிறார்கள் என்று அவர்கள் தவறாக நினைக்கக் கூடும். அது அந்தப் பெரியவர்களின் மனத்தைக் காயப்படுத்தும். அவர்களின் மனவருத்தம் நமக்குப் பெருந்துன்பத்தைத் தரும். ஆகையால், பெருமைமிக்க பெரியோர் முன்னே தேவையின்றிச் சிரிக்கக் கூடாது என்கிறார் வள்ளுவர். பெரியவர்கள் முன்பு எப்படி நடந்துகொள்ள வேண்டும். எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே இன்றைய குழந்தைகள் வளர்கிறார்கள். வளர்க்கப்படுகிறார்கள். பெரியவர்கள் முன்பு பணிந்து பேச வேண்டுமே தவிர , பல்லைக் காட்டிக்கொண்டு பேசக் கூடாது. எதைப் பேசினாலும் சிரித்துச் சிரித்துப் பேசினால்தான் அழகு என்று எண்ணுகிறார்கள் இன்றைய இளம் தலைமுறையினர். மனிதர்க்கு அழகு சிரித்துப் பேசுவதல்ல . சிந்தித்துப் பேசுவது என்பதை நாம்தான் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
சிரித்துச் சிரித்துப் பேசுவதற்கும், மற்றவர்களை எள்ளி நகையாடுவதற்கும்தான் இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு நட்பு தேவைப்படுகிறது. சிரித்துப் பேசுவதற்கு மட்டுமே பயன்படும் நட்பு, நாம் சீரழிந்து போவதற்குக் காரணமாக இருக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. " அவன் என் நண்பன் .அப்படித்தான் செய்வான் " என்று சொல்லி உசுப்பேத்தி விடுபவன் நண்பன் இல்லை. " நீ என் நண்பன். நீ இப்படியெல்லாம் செய்யக்கூடாது " என்று அடித்துச் சொல்லியும், அழுத்தமாகச் சொல்லியும் அறிவுறுத்துபவனே நல்ல நண்பன்.
" நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு. "
( குறள் - 784 )
நாம் ஒருவரோடு நட்பு கொள்வது சிரித்து மகிழ்வதற்காக மட்டுமன்று. நண்பர் தவறு செய்யும் பொழுது கடிந்துரைத்து அறிவுரை கூறி நல்வழிப்படுத்த வேண்டும். நண்பன் தவறு செய்யும்போது இடித்துரைக்கவும், நல்வழிகளை எடுத்துரைக்கவும்தான் நட்பு பயன்பட வேண்டும் .
"வாய்விட்டு சிரிக்க வைப்பதல்ல நட்பு!
வாழ்க்கையில் நம்மை சிறக்க வைப்பதே நட்பு! "
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)
0 கருத்துகள்