தமிழ் அறிவோம்!
" எம்மை அறிந்திலிர் "
ஓர் ஊரில் தற்பெருமைக்காரன் ஒருவன் இருந்தான். " இந்த உலகில் தனக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. எல்லாமே எனக்குத் தெரியும் " என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்வான். ஒருமுறை அந்த ஊருக்கு வெளியூரில் இருந்து துறவி ஒருவர் வந்தார் .அந்த ஊரில் இருந்த மாணவர்களுக்குக் கல்வியும் , அறவொழுக்கமும் கற்பித்தார். அந்தத் துறவியிடம் மாணவனாய் சேர விரும்பினான் தற்பெருமைக்காரன்.
" துறவியே! நான் உங்களிடம் மாணவனாகச் சேர விரும்புகிறேன். எனக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. இந்த உலகில் நடக்கும் அனைத்துமே எனக்குத் தெரியும். இந்த ஊரில் உள்ள மாணவர்கள் எல்லோருமே உங்களிடம் கல்வி கற்க வந்துள்ளதால் நானும் உங்களிடம் கல்வி கற்க வந்துள்ளேன் " என்று செருக்குடன் கூறினான் தற்பெருமைக்காரன்.
அதற்கு அந்தத் துறவி, " உனக்கெல்லாம் கல்வி கற்றுத் தர முடியாது " என்றார். " ஏன் என்று கேட்டான்? " தற்பெருமைக்காரன். " தண்ணீர் இல்லாத வெற்றுக்குடத்தில்தான் நீர் ஊற்ற முடியும். நீர் நிரம்பி வழியும் குடத்தில் எப்படி நீர் ஊற்ற முடியும்? அதைப்போல எல்லாம் தெரிந்த உனக்குக் கற்றுத்தர என்ன இருக்கிறது? என்று கேட்டார் துறவி. இதைக் கேட்டதும் தற்பெருமைக்காரனின் செருக்கு அடங்கியது. " துறவியே! உங்கள் அறிவுரையைக் கேட்ட அடுத்த நொடியே நான் ஒரு வெற்றுக்குடம் என்பதை உணர்ந்து கொண்டேன். யாம்செய்த பிழையைப் பொறுத்துக்கொண்டு என்னை நிறைகுடமாக மாற்றுங்கள் " என்று வேண்டினான் தற்பெருமைக்காரன் .நாம் அறிவுடைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக்கூடாது. நாம் அறிவுடையவர் என்பதைக் கற்றறிந்த சான்றோர்தான் சொல்ல வேண்டும். அதுவே நமக்குப் பெருமையாகும்.
" எம்மை அறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று - தம்மை
அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள் ."
( நாலடியார் - 165)
" எம்மை நீங்கள் அறிய மாட்டீர் " எம்போல் சிறந்த அறிஞர் இல்லை " . " எமக்கு நிகர் இவ்வுலகில் யாரும் இல்லை. " என்று தம்மைத் தாமே மதிப்பிட்டுக் கொள்வது நல்ல கோட்பாடு அன்று. தன்னைத் தானே உயர்வாக எண்ணுவதும் பெருமை ஆகாது. அறம் அறிந்த சான்றோர் உம்மைப் பெரியோர் என மதிக்குமாறு நடந்து கொள்ளவேண்டும். இதுவே சரியான கோட்பாடு ஆகும்.
" தற்பெருமை
நம்மை துயத்தில் வைக்கும்!
தன்னடக்கம்
நம்மை உயரத்தில் வைக்கும்!
Source -தமிழ்மொழி
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)
0 கருத்துகள்