தமிழ் அறிவோம்!
" புரிதல் இருந்தால் பிரிதல் இல்லை "
மேலை நாடுகளில் பின்பற்றப்படும் இல்லற வாழ்க்கை குறித்து கதை ஒன்று சொல்லப்படுவதுண்டு. ஒரு விளையாட்டுத் திடலில் மூன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அக்குழந்தைகளின் பெற்றோரும் அருகே அமர்ந்தபடி அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் . அப்போது ஒருவர் அங்கே வருகிறார். இவர்கள் உங்களுடைய குழந்தைகளா? என்று அங்கே அமர்ந்திருந்த அந்தக் குழந்தைகளின் பெற்றோரிடம் கேட்கிறார். அதற்கு அந்தக் குழந்தைகளின் தந்தை, " ஆம் , ஒன்று என்னுடைய குழந்தை. இன்னொன்று என் மனைவியின் குழந்தை. மூன்றாவதாக இருப்பது எங்களுடைய குழந்தை " என்கிறார். கேள்வி கேட்டவர் ஒன்றும் புரியாமல் குழம்பிப் போனார். " ஐயா, கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள் " என்றார். அதற்கு அந்தக் குழந்தைகளின் தந்தை, " எனக்கும் என் முதல் மனைவிக்கும் பிறந்த குழந்தையே என்னுடைய குழந்தையாகும். இங்கே அமர்ந்துள்ள என் இரண்டாவது மனைவிக்கும், அவளது முதல் கணவனுக்கும் பிறந்தது என் ( இரண்டாவது) மனைவியின் குழந்தையாகும் . எனக்கும், என் ( இரண்டாவது) மனைவிக்கும் பிறந்தது எங்களுடைய குழந்தையாகும் " என்று நீண்ட விளக்கமளித்தார்.
இதையெல்லாம் கேட்டதும், கேள்வி கேட்டவருக்கு தலை சுற்றியது. அங்கே தலை சுற்றி நின்றவர் இங்கே தமிழ்நாட்டைக் கொஞ்சம் சுற்றிப்பார்த்தால் போதும். உண்மையான இல்லற வாழ்க்கை எதுவென்பதை அவர் மட்டுமல்ல இந்த உலகமே புரிந்து கொள்ளும். இன்றைய சூழலில் 70 ஆண்டுகள் வரை மனிதர்கள் உயிர் வாழ்வதே வியப்புக்குரிய ஒன்றாகும். நம் தமிழ்நாட்டிலோ இல்லற வாழ்வில் 70 ஆண்டுகளைக் கடந்து கணவன் மனைவியாக மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் உண்டு . தன் கணவர், அகவை தொண்ணூற்றைக் கடந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததை ஏற்றுக்கொள்ள இயலாமல் அன்றைய பொழுதே மனைவியும் இறந்து போகிறார். இதுபோன்ற செய்திகளை அடிக்கடி நாளிதழில் நாம் பார்க்கிறோம். இதுதான் தமிழ்நாட்டின் இல்லற வாழ்க்கை முறை. இல்லற வாழ்வில் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், அதையெல்லாம் களைந்துவிட்டு கடைசிவரை கைகோர்த்து நிற்பதே உண்மையான இல்லற வாழ்க்கையாகும் . சிறுசிறு சண்டைகளுக்கு எல்லாம் மனமுடைந்து மணமுறிவு ( விவாகரத்து) கேட்கின்ற கேடுகெட்ட மனிதர்களாய் இங்கு பலர் வாழ்ந்து கொண்டிருப்பது வேதனைக்கு உரியதாகும். அடிக்கடி ஆடை மாற்றுவதைப் போல ஆளை மாற்றிக் கொண்டிருந்தால் இல்லறம் எப்படி இனிக்கும்? இன்பத்திலும், துன்பத்திலும் பங்குபெற்று வாழ்வின் இறுதிவரை துணையாக இருப்பதே உண்மையான வாழ்க்கைத் துணையாகும் . உயிர் பிரியும்வரை இணைந்து வாழ்வது தமிழர்களின் இல்லற வாழ்க்கை முறையாகும். உள்ளம் பிரியும்வரை இணைந்து வாழ்வது மேலை நாடுகளின் இல்லற வாழ்க்கை முறையாகும்.
தன் மனைவிமீது அளவற்ற அன்பு கொண்ட கணவன் ஒருவன், " என் உடலைவிட்டு என் உயிர் பிரிவதைக் கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், உன்னைவிட்டு பிரிவதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது " என்று தன் ஏக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலான பாடல் ஒன்றை இங்குக் காண்போம்.
" முன்னாள் இருவர்க்கும் யாக்கை ஒன்றாக முயங்கினமால் ;
பின்னாள் பிரியன் பிரியை என்றுஆயினம் ; பேசலுறும்
இந்நாள் கொழுநன் மனைவிஎன்று ஆயினம் ; இன்னமும்ஓர்
சின்னாளில் எப்படியோ ஐயநீ இன்று செப்புகவே "
( அந்தகக் கவி வீரராகவர் பாடல்கள் - 04)
" களவொழுக்கம் பூண்டிருந்த காலத்தில் நீயும், நானும் ஓருடல் ஈருயிர் என்று கூறுமாறு சேர்ந்து வாழ்ந்தோம். பின்னர்ச் சில நாள்களில் ஒருவர் மீது ஒருவர் 'அன்புடையவன், அன்புடையவள் ' என்று உரைக்கும்படி அன்பில் இரண்டறக் கலந்து வாழ்ந்தோம். இப்பொழுது நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறோம். இன்னும் சிறிது காலம் சென்றபின் நம்மில் ஒருவர் மறைந்து போனால் என்னவாகுமோ? என் மனைவியே நீ கூறுவாயாக " என்று கேட்கிறான் கணவன்.
" இல்லறம் என்பது
உடல் ஒன்றி வாழ்வதல்ல!
உள்ளம் ஒன்றி வாழ்வது!
இல்லறத்தில்
புரிதல் இருந்தால் பிரிதல் இல்லை!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)
0 கருத்துகள்