தமிழ் அறிவோம்!
" எள் விழவும் இடமில்லை "
ஒர் இடத்தில் ஏற்படும் கட்டுக்கடங்காதக் கூட்டநெரிசலைச் சிறப்பித்துக் கூறுவதற்கு " எள் விழவும் இடமில்லை " என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள். இந்தச் சொற்றொடரையே " உழுந்து( உளுந்து) இட இடமில்லை " என்று மாற்றி பாடியிருக்கிறார் 'கவிச்சக்கரவர்த்தி ' கம்பர்.
' மிதிலை நகரில் சிவதனுசை முறித்து இராமன் வெற்றிகொண்டான் ' என்ற செய்தி தசரதருக்கு வருகிறது. தன் உற்றார் உறவினர் படைசூழ மிதிலை நகரம் செல்ல நினைக்கிறார் தசரதர். அவரது ஏவலர்கள் அனைவரும் பரிசுப் பொருட்களை ஏந்திக்கொண்டு , ஊழிக்காலத்தில் ஓங்கிப் பொங்கும் கடல்போல அவர்கள் மிதிலை நகரை நோக்கிச் செல்லத் தொடங்கினர். படை முழுவதும் சென்றதும் தன் அமைச்சர் பெருமக்களுடன் இறுதியாகச் செல்லலாம் என்று வெகுநேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார் தசரதர். படையின் முதல் வரிசை மிதிலை நகரைச் சென்றடைந்துவிட்டது. ஆனால் இறுதி வரிசை இன்னமும் அயோத்தியைத் தாண்டவில்லை. அந்த அளவுக்கு வரிசை நீண்டிருக்கிறதாம். எங்கு பார்த்தாலும் மனித தலைகளாய் இருந்தனவாம். மேலே இருந்து உழுந்து ( உளுந்து) போட்டால்கூட கீழே விழாதாம். அந்த அளவுக்கு மக்கள் நெருக்கமாக இருந்தார்களாம்.
" உழுந்துஇட இடம்இலை உலகம் எங்கணும்
அழுந்திய உயிர்க்கும்எலாம் அருட்கொம்பு ஆயினான்
எழுந்திலன் எழுந்துஇடைப் படரும் சேனையின்
கொழுந்துபோய்க் கொடிமதில் மிதிலை கூடிற்றே "
( கம்பர், கம்பராமாயணம் , பாலகாண்டம், எழுச்சிப்படலம் - 754)
"எள் போட்டால் எள் விழவும் இடமில்லை " என்பதுதான் வழக்கில் இருக்கும் சொற்றொடர். ஆனால், கம்பர் அதைப் பயன்படுத்தாமல் அதற்கு மாறாக உழுந்து ( உளுந்து) போட்டால் விழ இடமில்லை என்று கூறியிருக்கிறார் . அது ஏன் தெரியுமா?
அனைவரும் அணிவகுத்துச் செல்வது இராமனின் மணவிழாவைக் காணவும், அதன் வெற்றியைக் கொண்டாடவும்தான். அது ஒரு மங்கல நிகழ்ச்சி. ஆனால், எள் என்பது மங்கலமல்லாத நிகழ்ச்சிகளில் பயன்படுத்தக் கூடியதாகும். . அதாவது , நீத்தார்
கடனுக்கான சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப் கூடியது. எனவே, அதை ஒரு மங்கலகரமான நிகழ்வுக்காகச் செல்லும் இடத்தில் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவே " எள் விழவும் இடமில்லை " என்று சொல்லாமல் " உழுந்து இட இடம்இலை " என்று அறிவுநுட்பத்தோடு சொல்லியிருக்கிறார் கம்பர்.
Source -https://tamilmoozi.blogspot.com/?m=1
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)
0 கருத்துகள்