தமிழ் அறிவோம்!
" யாதுமாகி நின்றாய் நீ "
உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி மாண்டரின் ( சீன ) மொழியாகும். சீனாவின் மொத்த மக்கள் தொகை 140 கோடிபேர் . அத்தனை பேரும் பேசக்கூடிய மொழியாக இருப்பது மாண்டரின் மொழியாகும். அதற்குக் காரணம் " ஒரே நாடு ஒரே மொழி " என்ற திட்டம். இந்தத் திட்டத்தை உலகில் முதன்முதலில் கொண்டுவந்த நாடு சீனாதான். மொழி உணர்வு மூலமாகவே தேசிய உணர்வை வளர்க்க முடியும் என்பதை உலகிற்குச் சொன்ன நாடும் சீனாதான். அந்த நாட்டின் ஆட்சிமொழியாக , பேச்சு மொழியாக, கல்வி மொழியாக, உலகத்தையே உள்ளங்கையில் காணும் மொழியாக இருப்பது மாண்டரின் மட்டுமே. "அறிவுடையோர் ஆங்கிலம் அறியார், அறிவிலார் தாய்மொழி அறியார் " என்பதை உலகிற்கு சொன்னவர்கள் சீனர்கள். தாய்மொழியில் கல்விகற்றால் உலகையே வெல்லலாம் என்பதை எல்லோர்க்கும் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள் சீனர்கள். இன்று தமிழ்நாட்டில் உள்ளோர் " இந்தி தெரியாது போடா " என்று சொல்லிக் கொண்டு தாய்மொழியாம் தமிழும் தெரியாமல் ஆங்கிலம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சீனர்களோ " ஆங்கிலம் தெரியாது போடா " என்று சொல்லிக்கொண்டு தாய்மொழியாம் மாண்டரின் மொழியை மட்டுமே கற்றுக்கொண்டு உலகையே தங்கள் உள்ளங்கையில் சுருட்டி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தாய்மொழிப்பற்று என்றால் என்னவென்பதை சீனர்களிடம்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழை அழிப்பது இந்தியோ , வடமொழியோ அல்ல. அரசியல்வாதிகளும் , அறிவு இழந்த தமிழ் மக்களும்தான் . " ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் " என்ற பழமொழியைப் போல , " ஆங்கிலவழி வகுப்பு இல்லாப் பள்ளியில் படிக்கவேண்டாம் " என்ற புதுமொழியை உருவாக்கிவிட்டார்கள் தமிழர்கள். தமிழ்நாட்டில் தமிழ் வாழவேண்டும் என்றால், ஆங்கிலமும் வேண்டாம். இந்தியும் வேண்டாம் என்று குரல் கொடுப்போம். தமிழர்களுக்குத் தாய் ( தமிழ் ) மொழிக் கல்வியே வேண்டும் என்று சூளுரைப்போம். நீங்கள் உண்மையான தமிழரென்றால் உங்கள் பிள்ளைகளைத் தமிழ்வழிப் பள்ளிகளில் சேருங்கள். பெயர்ப் பலகைகளில் இந்தியை அழித்தது போதும். இனி கல்வி நிலையங்களில் ஆங்கிலம் உள்ளிட்ட அயல்மொழிகளை அழிப்போம். சீனர்களைப் போல தாய்மொழி உணர்வு பெற்று தமிழர்களாகிய நாமும் நம் தமிழ்மண்ணில் வேரூன்றி இருக்கும் அயல்மொழிகளை வேரோடு அறுப்போம். இனி "எங்கும் தமிழ். எதிலும் தமிழ் " என்ற நிலையை தமிழ் மண்ணில் உருவாக்குவோம். தமிழ்தான் நம்மை வாழ வைக்கும். தமிழ்தான் நம்மை ஆள வைக்கும்.
" நாடவரும் கல்லாதார் சிங்கமெனக் கல்வி கேள்விக்குரியர்
எல்லாரு நீயாய் இருந்தமையால் - சொல்லாரும்
என்னடிகளே உனைக்கண்டு ஏத்தின் இடர்தீரும் என்றுஉன்
பொன்னடிகளே புகலாப் போற்றினேன் "
( தமிழ்விடு தூது - 15, 16)
" எல்லாப் புலவர்களிடமும் , அவர்களை நாடிவரும் கல்லாதவர்களிடமும் , கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் எல்லோரிடமும் தமிழையே காண்கிறேன். தமிழே! நீ கல்லாதார்க்குச் சிங்காமெனத் திகழ்கின்றாய். உன்னைப் பணிந்து வணங்கினால் என் குறைகள் எல்லாம் நீங்கும் என்று கருதி உன் பொன்போன்ற திருவடிகளையே புகலிடமாகக் கொண்டு போற்றுகிறேன் " என்கிறது தமிழ்விடு தூது. தமிழர்களுக்கு யாதுமாகி ( எல்லாமுமாய்) இருப்பது தமிழ்மொழி மட்டுமே. அந்தத் தமிழ்மொழியைப் போற்றாமல் அயல்மொழிகளிடம் அடிபணிந்து கிடப்பது தன்மான உணர்வுள்ள தமிழர்க்கு அழகா?
தமிழ்தான் தமிழர்களின் புகலிடம்!
இதை உணர்ந்து கொண்டால் புகழ்வந்து சேரும் தமிழர்களிடம்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)
0 கருத்துகள்