Ad Code

Ticker

6/recent/ticker-posts

உலகில் வருவிருந்தோர் உண்டு

 தமிழ் அறிவோம்!


" உலகில் வருவிருந்தோர் உண்டு " 




ஔவையார் ஒரு சமயம் திருக்குடந்தை நகருக்குச் சென்றிருந்தார். அந்த ஊரில் செல்வந்தர் இருவர் வாழ்ந்து வந்தனர். அதில் ஒருவன் கொடையாளி. அவன் பெயர் மருத்தன். இன்னொருவன் மகா  கஞ்சன். அவன் பெயர் திருத்தங்கி. 


தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம் உணவளித்து மகிழ்ந்தான் மருத்தன். தன் ஊருக்கு வந்த ஔவையாரை நாடிச்சென்று வரவேற்று விருந்தளித்து இன்புற்றான் மருத்தன். அளவற்ற செல்வம் படைத்த திருத்தங்கியோ யாருக்கும்  எந்தவொரு உதவியையும் செய்யாதவன் ஆவான். இந்த இருவரின் குணநலன்களோடு   அவர்கள் வீட்டின் முற்றத்தில் நின்றிருந்த வாழைமரங்களை ஒப்பிட்டு  பாடல் ஒன்று பாடினார் ஔவையார்.


" திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும்

மருத்தன் திருக்குடந்தை வாழை - குருத்தும் 

இலையுமிலை பூவுமிலை காயுமிலை என்றும்

உலகில் வருவிருந்தோர் உண்டு. 


( ஔவையார் தனிப்பாடல் திரட்டு - 91)


செல்வம் குறையாமல் தங்கியிருக்கும் திருத்தங்கியின் வாழைமரமோ இனிதான பழக்குலையுடன்  மிகவும்  செழிப்பாக இருக்கிறது. எவருக்கும் எதுவும் கொடுக்காமல் இருக்கிறான். அதனால்தான்  அவன் வீட்டு வாழை செழிப்பாக இருக்கிறதாம். மருத்தன் வீட்டு வாழையோ செழிப்பில்லாமல்  வாடி வதங்கி உள்ளது. அவன் வீட்டு வாழையிலோ குருத்தும் இல்லை. இலையும் இல்லை. பூவும் இல்லை. காயும் இல்லை . உலகில் எந்நாளும் வருகின்ற விருந்தினருக்கு இல்லையென்று சொல்லாமல் வாழையின் பூக்கள் , காய்கள் அனைத்தையும் சமைத்து இலையில் பரிமாறி விருந்தளிக்கிறான். இதன் காரணமாகவே  மருத்தன் வீட்டு வாழைமரம் செழிப்பில்லாமல் வாடி வதங்கி இருக்கிறதாம் .  மருத்தனை  இகழ்வதுபோல புகழ்கிறார் ஔவையார். 


Source -தமிழ்மொழி


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்