Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " நசை பெரிது உடையார் "

 தமிழ் அறிவோம்!


" நசை பெரிது உடையார் "  



தலைவன் தலைவியைப் பிரிந்து  பொருள்தேடிச் சென்றிருக்கிறான் . தலைவனது பிரிவை எண்ணி தலைவி  வருந்துகிறாள். பயணம் மேற்கொண்டுள்ள தலைவன் தன்னை மறந்து விடுவானோ?  என் நினைவு அவனுக்கு இருக்குமோ? இருக்காதோ?  ஒருவேளை அவன் என்னை மறந்துவிட்டால் நான் என்ன செய்வேன்? என்று பலவாறாக எண்ணித் தன் தோழியிடம்  புலம்புகிறாள் தலைவி.  தன் தலைவனை நினைத்து நினைத்து  கண்ணீர்க் கடலில் மூழ்கியிருக்கும் தலைவியை,   யானைகளின் காதலோடு தலைவனின் காதலை ஒப்பிட்டு,  தோழி  ஆற்றுப்படுத்தும் அழகை குறுந்தொகை பாடல் மூலமாக இங்குக் காண்போம்.  


" நசைபெரிது உடையார் நல்கலு நல்குவர் 

பிடிபசி களைஇய பெருங்கை வேழம் 

மென்சினை யாஅம் பொளிக்கும் 

அன்பின தோழியவர் சென்ற வாறே " 


( பாலை பாடிய பெருங்கடுங்கோ , குறுந்தொகை - 37) 


தலைவர் நின்பால் மிகவும் அன்புடையவர். நீ விரும்புவதை அவர் செய்வார். அவர் ஒருநாளும் உன்னை மறக்க மாட்டார். அப்படியே அவர் உன்னை மறந்தாலும் அவர் சென்ற வழி இருக்கிறதே அது அவருக்கு உன்னை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.  ஆம்,  அவர் சென்ற வழியில் பெரிய தும்பிக்கையை உடைய ஆண் யானைகளும் , பெண்  யானைகளும்  பல இருக்கும். பெண் யானையின் பசியைப் போக்க  மெல்லிய கிளைகளை உடைய யாமரத்தைப் பிளந்து அதன் பட்டையை உரித்துக் கொடுத்து அதை  தன்   பெண் யானையை உண்ணச் செய்தும்,  அதில் உள்ள நீரைப்  பருகச் செய்தும் தன் பெண் யானையின்  தாகத்தையும் , பசியையும்  போக்கும்.  அன்புடனும்,  காதலுடனும் அது செய்யும் செயலைக் கண்டதும் தலைவனுக்கு உன் நினைவு வந்துவிடும்.  அதனால் அவர் விரைவில் வந்துவிடுவார்.  நீ வருந்தாதே " என்று தலைவியைத் தேற்றுகிறாள் தோழி. 


ஆண்யானை தன் துணையான பெண் யானையின் பசியை எப்படி  அன்போடும் , காதலோடும்  போக்குகிறதோ, அதைப் போலவே  தலைவியின் நிலையை உணர்ந்துகொண்டு  தலைவன் விரைந்து

வருவான்.  தலைவியின் துயரைப் போக்குவான்  என்பதே இப்பாடலின் கருத்தாகும். 


இப்பாடலில் வரும் தலைவியைப் போல,   தன்  தலைவனை வெளியூருக்கும்,  வெளிநாட்டுக்கும் பொருள்தேட அனுப்பிவிட்டு அல்லலுறும் எண்ணற்ற தலைவிகள் இக்காலத்திலும் இருக்கிறார்கள். ஆனால்,  அவர்களை எல்லாம்  தேற்றிவிடத்தான் தோழிகள் கிடைப்பதில்லை. 

Source - https://tamilmoozi.blogspot.com/?m=1 


இவண் 

ஆ.தி.பகலன், 

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

செங்கல்பட்டு மாவட்டம்.

( அலைப்பேசி - 9965414583)

கருத்துரையிடுக

0 கருத்துகள்