முகிலன், முழுமதி என்னும் இணையருக்கு கபிலன் என்றொரு மகன் இருந்தான். முகிலன் பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிட்டவன். நிரந்தர வேலையில்லை. கூலி வேலைக்குச் சென்று குறைந்த வருவாயைப் பெறுபவன்.. கடினமான சூழலில் குடும்பத்தை நடத்துபவன். மகன் கபிலனோ எட்டாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் படுசுட்டி.
விடுமுறை நாளில் தன் மனைவி முழுமதியையும், மகன் கபிலனையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா செல்கிறான் முகிலன். மகன் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தான். விலையுயர்ந்த உணவகத்தில் மூன்று வேளை உணவையும் வாங்கிக் கொடுத்தான். தன் மகன் விருப்பப்பட்ட விலையுயர்ந்த மிதிவண்டியை வாங்கிக் கொடுத்தான். கபிலனின் உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இன்பச்சுற்றுலாவை முடித்துக்கொண்டு இரவு வீடு திரும்பினர்.
தன்மகன் கபிலன் இனம் புரியாத மகிழ்ச்சியில் இருப்பதை முகிலன் உணர்ந்தான். தன்மகனை அருகில் அழைத்த முகிலன், " கபிலா ! இன்றைய நாள் எப்படி இருந்தது? என்று கேட்டான். " என் வாழ்வில் மறக்கமுடியாத நாள் இன்று. நான் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்தீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நன்றி அப்பா " என்று சொல்லிவிட்டு தன் அப்பாவைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தான் கபிலன். " கபிலா! நாள்தோறும் உன்னை இதுபோல மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவே விரும்புகிறேன். ஆனால், என்ன செய்ய? நான் படிக்க வேண்டிய அகவையில் ஒழுங்காக படிக்கவில்லை. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறேன். சரியான வேலையில்லாமல் துன்பப்படுகிறேன். போதிய வருவாய் இல்லாததால் உன்னையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியவில்லை. நான் நன்றாக படித்திருந்தால் எனக்கு நல்ல வேலை கிடைத்திருக்கும். நல்ல வருவாய் கிடைத்திருக்கும். நமக்கும் நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கும். நீயும் மகிழ்ச்சியாக இருந்திருப்பாய். நான் தவறு செய்துவிட்டேன். அதற்கான தண்டனையை என்னோடு சேர்ந்து இப்போது நீயும் அனுபவிக்கிறாய். என் வாழ்க்கையோடு உன் எதிர்காலத்தையும் நான் வீணாக்கிவிட்டேனே " என்று சொல்லி கண்கலங்கினார்.
அப்பாவின் கண்ணீரைத் துடைத்த கபிலன், " கவலைப்படாதீர்கள் அப்பா! நான் நன்றாக படித்து நல்ல வேலைக்குச் செல்வேன். கைநிறைய சம்பாதிப்பேன். உங்கள் கனவுகளை எல்லாம் நான் நிறைவேற்றுகிறேன்.நீங்கள் கவலைப்படாதீர்கள். இனிமேல் இன்னும் நன்றாக நான் படிக்கிறேன். நீங்கள் இன்று ஒருநாள் எனக்குக் கொடுத்த மகிழ்ச்சியை உங்கள் வாழ்நாள் முழுவதும் நான் கொடுப்பேன் " என்று உறுதியளித்தான். சிறிது நேரத்தில் அப்பாவைக் கட்டியணைத்தபடியே தூங்கிவிட்டான் கபிலன். மகனை அப்படியே தூங்க வைத்துவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே வந்தான் முகிலன். அறைக்கு வெளியே கொலைவெறியோடு உட்கார்ந்திருந்தாள் முகிலனின் மனைவி முழுமதி. " உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா? நமக்கே போதிய வருமானம் இல்லை. நாம் சிறுகச்சிறுக ஓராண்டாக சேமித்து வைத்திருந்த பணத்தை இப்படி ஒரே நாளில் மகனுக்காக செலவு செய்துவிட்டீர்களே. ஏன் இப்படி செய்தீர்கள்? என்று முகம் சிவக்க சினம் கொண்டு கேட்டாள் முழுமதி.
" நேற்று கபிலனின் வகுப்பாசிரியர், என்னை பள்ளிக்கு வரச்சொல்லி அலைப்பேசியில் அழைப்பு விடுத்தார். நானும் சென்று அவரைப் பார்த்தேன். " ஐயா, தங்கள் மகன் கபிலனின் சேர்க்கை சரியில்லை. கொஞ்சம் நாள்களாக படிப்பில் நாட்டம் இல்லாமல் இருக்கிறான். நானும் எவ்வளவோ அறிவுரை சொல்லிவிட்டேன். அவன் திருந்துவதாகத் தெரியவில்லை. இப்படியே போனால் அவன் எதிர்காலம் வீணாய்ப்போய்விடும். நீங்கள் படுகின்ற துன்பங்களை எல்லாம் எடுத்துச் சொல்லியாவது அவனைத் திருத்த முயற்சி செய்யுங்கள் " என்றார் கபிலனின் வகுப்பாசிரியர். என்ன சொல்லி கபிலனைத் திருத்தலாம் என்று சிந்தித்தேன். சின்னதாக ஒரு நாடகம் போட்டேன். அதுதான் இந்த இன்பச்சுற்றுலா. இதனால் கபிலனின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அறையில் தனக்கும் கபிலனுக்கும் நடந்த உரையாடல் முழுவதையும் தன் மனைவி முழுமதியிடம் விளக்கினான் முகிலன். தன் கணவன் சொல்வதை எல்லாம் பொறுமையோடு கேட்டாள். தன் கணவனைப் பெருமையோடு பார்த்தாள். அடுத்தடுத்த நாள்களில் கபிலனிடத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தனர் கபிலனின் பெற்றோர். பக்குவமாக சொல்லி புரியவைத்தால் எந்தப் பிள்ளையையும் நல்ல பிள்ளையாக மாற்ற முடியும் என்பதற்கு கபிலனின் கதை நமக்கு நல்ல சான்றாகும்.
ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்குத் தரவேண்டியது பொன்னோ, பொருளோ இல்லை. நல்ல கல்வியும், ஒழுக்கமும்தான். அதைமட்டும் கொடுத்துவிட்டால் போதும். இந்த உலகில் எல்லா குழந்தைகளும் நல்ல மனிதர்களாக உருவாகிவிடுவார்கள். ஒரு குழந்தையைச் சாதிக்க வைப்பதும், சான்றோனாக்குவதும் தந்தையின் கையில்தான் உள்ளது.
" தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் "
( குறள் - 67)
தந்தை தன் மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மை யாதெனில், அவனைக் கற்றவர் அவையில் முதன்மையானவனாக இருக்கச் செய்வதே ஆகும். வள்ளுவர் வாக்கை வையத்தில் உள்ள ஒவ்வொரு தந்தையும் கடைப்பிடித்தால் எல்லாப் பிள்ளைகளும் வரலாறு படைப்பார்கள்.
இவ்வையத்தில் வாழும் தகைசால் தந்தைமார்களே!
உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியைக் கொடுங்கள் .
நல்லதைக் கற்றுக்கொடுங்கள்.
செல்லம் கொடுத்தும் செல்பேசி கொடுத்தும் சீரழித்துவிடாதீர்கள்.
குழந்தைகளே இந்தக் குவலயத்தின் சொத்து.
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொடுங்கள். அதன்பின் அவர்களைக் கொண்டாடுங்கள்.
தமிழ்த்தாய்க்கு என்றென்றும் குழந்தைகளாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் குழந்தைகள்நாள் நல்வாழ்த்துகள்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
மேலும் படிக்க
*" பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் "
*" தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி "
0 கருத்துகள்