Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் "



குற்றம் செய்தவன் ஒருவன். அதற்கான தண்டனையை அனுபவிப்பவன் இன்னொருவன் என்பதைத்தான் " பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் " என்று கூறுகிறார்கள். 


ஒருமுறை பாண்டிய மன்னன் நகர்வலம் சென்றான். அவனை  கன்னிப்பெண் ஒருத்தி  கண்டாள். பாண்டிய மன்னனின் அழகில் மயங்கி,  அவன்பால் காதல் கொண்டாள். அதன் காரணமாக அவள் உடல்  முழுவதும் பசலை படர்ந்தது. " பசலை " என்பது உடலின் நிறத்தைத் திரிபடையச் செய்யும் காதல் நோயாகும். தன் உடம்பில் பசலைநோய் ஏற்படக் காரணமே கண்கள்தான். கண்களால் பாண்டிய மன்னனைக் கண்டதால்தான் உடம்பிலே பசலை படர்ந்தது. குற்றம் செய்ததோ என் கண்கள்.  ஆனால்,  தண்டனையை அனுபவிப்பதோ ஒரு பாவமும் அறியாத என் தோள்கள். இது என்ன நீதி? என்ற எண்ணம் அவளிடம் எழுந்தது. அதனால்,  அன்னைத் தமிழுக்கு நல்ல பாடல் ஒன்று கிடைத்தது. 


" உழுத உழுத்தம்செய் ஊர்க்கன்று மேயக் 

கழுதை செவிஅரிந்து அற்றால் - வழுதியைக் 

கண்டநம் கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள் 

கொண்டன மன்னோ பசப்பு. " 

( முத்தொள்ளாயிரம் - 114)


உழுது விதைத்து விளைந்த உழுந்து ( உளுந்து)  வயலில், ஊர் மக்களின் கன்றுக்குட்டி ஒன்று புகுந்து உழுந்து பயிர்களை மேய்ந்து அவைகளுக்கு அழிவு உண்டாக்கிவிட்டது. தவறு செய்ததோ ஊராரின் கன்றுக்குட்டி.  தண்டனைக் கிடைத்ததோ கழுதைக்கு.  கன்றுக்குட்டியைத் தண்டிப்பது பாவம் எனக் கருதி,  அதற்கான தண்டனையைக் கழுதைக்குக் கொடுத்துவிட்டார்கள். ஆம்,  கழுதையின் காதை அறுத்துவிட்டனர் . இது எப்படி நீதி ஆகும்?


அது போலத்தான் என்னிடத்திலும் நடக்கிறது. வழுதியைக் ( பாண்டிய மன்னனைக் ) கண்டதோ என் கண்கள்.  அதற்குத் தண்டனையாக என் தோள்கள் அல்லவா பசலை ( பசப்பு)  நோயைப் பெற்று துன்புறுகிறது. 

இது அடுக்குமா ?

என்று வருந்துகிறாள் தலைவி. " பாவம் ஒரு பக்கம்.  பழி ஒரு பக்கம் " என்பதற்கு இப்பாடல் ஒரு நல்ல சான்றாகும்.


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்