Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி "




சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் முதல்வரும், ஆங்கிலப் பேராசிரியருமான வில்லியம் மில்லர் என்பவர் ஆங்கில வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். ஆங்கிலக் கவிஞரான டென்னிசன் இயற்றிய " ஆர்தரின் இறுதி நாள் " என்னும் நூலில் உள்ள ஒரு பாடலைச் சொல்லி , " துடுப்புகள் இருபுறமும் நீரைப் பின்னோக்கித் தள்ள நீரில் மிதந்து போகும் படகு , பறவை தன் சிறகுகளை விரித்துச் செல்வதுபோல் உள்ளது என்ற உவமையைக் கூறி இதைப்போல் உவமைகள் வேறு எந்த மொழியில் இல்லை. ஆங்கிலத்தில் மட்டும்தான் உள்ளது. தமிழில் இது போன்ற உவமைகள் உண்டா? என அவர் ஏளனமாகக் கேட்டார். அதைக் கேட்டதும் மாணவர் ஒருவர்  எழுந்து " கம்பராமாயணத்தில் அயோத்தியாக் காண்டத்தில் வரும் குகப்படலத்தில் உள்ள ஒரு பாடலைப் பாடினார். 


" விடுநனி கடிது" என்றான் மெய்உயிர் அனையானும் 

முடுகினன் நெடுநாவாய் ; முரிதிரை நெடுநீர்வாய் ; 

கடிதினின், மடஅன்னக் கதியது செலநின்றார் 

இடருற மறையோரும் எரியுறு மெழுகானார் "  

" அலையடிக்கின்ற நீண்ட நீரோட்டத்தில் பெரிய ஓடத்தை விரைந்து செலுத்தினான் குகன். அந்த ஓடம் இளம் அன்னப் பறவை நீரில் நீந்துவது போலச் சென்றது " என்று அந்தப் பாடலின் பொருளை அழகாக  ஆங்கிலத்தில் சொன்னான் அந்த மாணவன். ஆங்கிலம் என்ற மொழி உருவாவதற்கு முன்னரே இந்தப் பாடல் எழுதப்பட்டதையும் எடுத்துரைத்தான். இதைக் கேட்டு வியந்து போனார் மில்லர்.  அன்றுமுதல் மில்லரின் அன்புக்குரிய மாணவராக அவன் மாறினான். பின்னாளில் அந்த மாணவன் எழுதிய " தமிழ்மொழியின் வரலாறு "  என்னும் நூலை மில்லருக்கு அன்புப் படையலாக்கினான். அதுகண்டு மில்லரும் அகமகிழ்ந்து போனார். அந்த மாணவன் 33 ஆண்டுகளே இம்மண்ணில் வாழ்ந்து மறைந்தான். அதைக் கேட்டுப் பெருந்துயருற்றார் மில்லர். அந்த மாண்புமிகு மாணவனின் இறப்பை எண்ணி  கவிதையால் கண்ணீர் விட்டார் மில்லர். 


" என் புருவம் சுருக்கம் ஏறி , 

கண்களை மறைக்கும் 

முதுமையில் 

வாடுகின்றேன் நான்.

 ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே

நற்றமிழ்ப்பரிதி அகன்றானே !

என்று வருந்தினார்.


ஆங்கிலமே பெரிதென எண்ணிய பேராசிரியரைத் தன் தமிழால் கவர்ந்து தன் இறப்புக்கு இரங்கற்பா பாட வைத்த அந்த மாணவன் யார் தெரியுமா?

தனித்தமிழில் பெயர் சூட்டும் வழக்கத்தை முதன்முதலில் தொடங்கி வைத்தவரும் ,  "தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி " என்று போற்றப்பட்டவருமான  பரிதிமாற் கலைஞர்தான் அந்த மாணவர்.


மதுரையை  அடுத்த விளாச்சேரியில் வாழ்ந்து வந்த கோவிந்த சிவனாருக்கும்,  இலக்குமி அம்மாளுக்கும் 06.07.1870 அன்று மகனாகப் பிறந்தவர்தான் சூரிய நாராயண சாத்திரி. தந்தை கோவிந்த சிவனாரிடம் வடமொழி பயின்றார். மதுரையில் புகழ்பெற்ற வித்துவானாக வாழ்ந்து வந்த சபாபதியாரிடம்  தமிழ் பயின்றார். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் இளங்கலை பயின்றார். இளங்கலை தேர்வில் தமிழிலும், மெய்யியலிலும் மாநில அளவில் முதலிடம் பெற்றார். தான் படித்த சென்னைக் கிறித்தவக் கல்லூரியிலேயே தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.


வடமொழியும் , தமிழ்மொழியும் கலந்து எழுதுதல் என்பது, தமிழ் மணியோடு பவளத்தைப் போலச் செந்நிறம் உடையதான மிளகாய் பழம் கலந்தது போன்ற பயனையே தந்தது என்பது அவர் கருத்தாகும். தமிழ்த்தாயின் எழில் மிகுந்த உடலுக்கு,  மணிப்பிரவாள நடை எரிச்சலையே தரும் என்பதனை உணர்ந்து  வடசொல் கலப்பைக் கண்டித்தார். வடமொழியில் இருந்த தன் பெயரைத் தமிழ்ப்படுத்தினார். சூரிய - பரிதி

நாராயணன் - மால் 

சாத்திரி - கலைஞர்.

பரிதிமாற்கலைஞர் என்று தன்  பெயரைத் தனித்தமிழ்ப் பெயராக்கினார். அக்காலத்தில் பலரையும்  தனித்தமிழில் பெயர் சூட்ட வழிகாட்டினார். தனித்தமிழில் பெயர் சூட்டும் வழக்கத்திற்கு முதன்முதலில் வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்தான்.


தமிழிலுள்ள வடமொழிச் செல்வாக்கை அகற்றும் நோக்குடன் உருவான தனித்தமிழ் இயக்கத்தில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றினார். மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் இவரும் ஒருவர் ஆவார். 24.05.1901 அன்று  பாண்டித்துரைத் தேவர் தலைமையில் , பரிதிமாற்கலைஞர் , உ.வே.சா, இராகவனார் ஆகிய பேராசிரியர்களின் துணையோடு நான்காம் தமிழ்ச்சங்கம் மதுரையில்  நிறுவப்பட்டது.  இச்சங்கம் " செந்தமிழ் "  எனும் மாத இதழை வெளியிட்டது. அதன் முதல் இதழில் " உயர்தனிச் செம்மொழி " என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார் பரிதிமாற்கலைஞர். அதில் தனித்தமிழ் பற்றிய தன் கொள்கைகளை முன் வைத்தார். தமிழ் திராவிட மொழிகளில் முதன்மையானது என்றும், மற்ற மொழிகள் தமிழிலிருந்து தோன்றியவை என்றும்,  வடமொழி தமிழில் ஊடுருவியது என்றும் அதில் சொன்னார். " திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் , பொருந்திய தூய மொழியே செம்மொழியாம். இத்தகு இலக்கணம் கொண்டது தமிழ் மொழி மட்டுமே என ஆணித்தரமாக முழங்கினார் பரிதிமாற்கலைஞர். ஆம்,  "தமிழே உண்மையான செம்மொழி " என்று எழுத்து வடிவில் முதன்முதலில் மெய்ப்பித்தது பரிதிமாற் கலைஞரே.  இவர் எழுதிய கட்டுரையே  "  செம்மொழி"  என்னும் உயர்நிலையைத் தமிழ்மொழி அடைய ஊன்றுகோலாக இருந்தது என்றால் அது மிகையல்ல.


 12 ஆம் அகவை வரை தமிழிலேயே குழந்தைகள்  கல்வி கற்க வேண்டும் என்று முழங்கினார். 

தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே கட்டணம் வாங்காமல் தமிழ் கற்றுக் கொடுத்தார். அவர்களை " இயற்றமிழ் மாணவர் " எனப் பெயரிட்டு அழைத்தார். எல்லோரும் தமிழைக் கற்று தமிழின் அருமைகளை அறிய வேண்டும் என்று ஆவல் கொண்டார். தமிழ்ச்சேவை ஆற்றுவதற்காகவே தன் வாழ்நாளின் முழுநேரத்தையும் செலவிட்டார். 


தன் 23 ஆம்  அகவையில் கல்லூரியில்  மெய்யியல் துறை ஆசிரியராக பணியாற்ற கிடைத்த அரிய வாய்ப்பை ஏற்காமல்,  குறைந்த ஊதியமாக இருந்தாலும் தமிழ்த்துறையையே தேர்வு செய்து தமிழ்ப்பணி ஆற்றினார். 

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தமிழை விலக்கி வடமொழியைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. ஆனால்,  பரிதிமாற் கலைஞரின் உறுதியான எதிர்ப்பால் அம்முடிவைப் பல்கலைக்கழகம் கைவிட்டது.


ரூபாவதி,  காலவதி முதலிய நற்றமிழ் நாடகங்களை இயற்றியுள்ளார். " சித்திரக்கவி " என்னும் நூலைப் படைத்துள்ளார். " தமிழ்மொழி வரலாறு " போன்ற ஆய்வு நூல்களையும்  படைத்துள்ளார். நாவல், உரைநடை, நாடகம்,  செய்யுள் நாடகம், கவிதை நூல், ஆய்வு நூல்,  நாடக இலக்கண நூல் என ஏராளமான நூல்களை இயற்றி தமிழுக்குத் தொண்டு செய்துள்ளார் பரிதிமாற் கலைஞர். 

தன் முப்பத்து மூன்றாவது அகவையில் ( 02.11.1903)  தமிழோடு இரண்டறக் கலந்தார் பரிதிமாற் கலைஞர். இந்த உலகில்  தமிழ் இருக்கும்வரை பரிதிமாற் கலைஞரின் புகழ் இருக்கும்.


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்