அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக இருப்பதுதான் நம் தமிழ் இலக்கியங்கள். அந்த அமுதசுரபியில் பெரும்புகழ் பெற்ற புலவர்களின் பாடல்களும் உண்டு. புகழ் வெளிச்சம் பெறாத புலவர்களின் பாடல்களும் உண்டு. அவ்வாறு புகழ் வெளிச்சம் பெறாத புலவரான " சுந்தர கவிராயர் " இயற்றிய சுவையான பாடல் ஒன்றை இங்குக் காண்போம்.
" மரமது மரத்தில் ஏறி
மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு
மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று
வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாதர்
மரமுடன் மரம் எடுத்தார். "
( சுந்தரகவிராசர் தனிப்பாடல் திரட்டு)
இப்பாடலில் மரம் என்னும் சொல் , இடத்திற்கேற்பப் பொருள் தருவதாய் 11 இடங்களில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் வருகின்ற " மரம் " என்ற சொல் ஒவ்வொரு மரத்தின் பெயரையும், அதோடு வேறொரு பொருளையும் உணர்த்துகிறது. அந்தப் பொருள்களைச் சரியாகப் பொருத்திப் பார்த்தால் மட்டுமே, இப்பாடலின் உண்மையானப் பொருளை அறிய முடியும்.
' மரம் ' என்ற சொல் ஒவ்வொரு முறையும் வரும்போது அது உணர்த்தும் மரத்தின் பெயரும் , அதன் இன்னொரு பொருளும் இதுதான்.
1.அரசமரம் ( அரசன்)
2.மாமரம் ( மா - குதிரை)
3.கருவேலமரம் ( வேல்)
4.அரசமரம் ( அரசன்)
5.வேங்கை மரம் ( புலி)
6.கருவேலமரம் ( வேல்)
7.வேங்கை மரம் ( புலி)
8.மரங்கள் நிறைந்த காடு
9.அரசமரம் ( அரசன்)
10.ஆலமரம் ( ஆல் )
11.அத்தி மரம் (அத்தி)
ஆல்+ அத்தி ( ஆலத்தி என்பது ஆரத்தி என்றானது) .
இதன் அடிப்படையில் பாடலின் பொருளை அறிவோம்.
1.மரம் (அரசமரம் -அரசன்)அது மரத்தில்(மா- குதிரை) ஏறி.
அரசன் ஒருவன் குதிரையில் ஏறி.
2.மரம் ( வேலமரம் - வேல்) அதைத் தோளில் வைத்து.
தன் தோளின்மேல் வேலை வைத்துச் சென்றான்.
3.மரம் ( அரசமரம் - அரசன்) அது மரத்தைக் ( வேங்கை - புலி) கண்டு.
அந்த அரசன் ஒரு வேங்கையைக் ( புலியைக்) காண்கிறான்.
4 மரத்தினால் ( வேலமரம் - வேல்) மரத்தைக் ( வேங்கை - புலி) குத்தி.
தன் தோளில் இருந்த வேலையெடுத்து அந்த வேங்கையைக் ( புலியைக்) குத்திக் கொல்கிறான்.
5.மரமது ( மரங்கள் நிறைந்த காட்டு ) வழியே சென்று.
மரங்கள் நிறைந்த காட்டு வழியே தன் இருப்பிடம் நோக்கிச் செல்கிறான் அரசன்.
6.வளமனைக் ( அரண்மனை) கேகும் போது.
வளம் மிக்க தன் அரண்மனைக்குத் திரும்புகிறான்.
7.மரமது ( அரசமரம் - அரசன்) கண்ட மாதர் .
அந்த அரசனைக் கண்ட. அரண்மனை பணிப்பெண்கள் .
8.மரம் ( ஆலமரம் - ஆல்) உடன் மரம் ( அத்தி) எடுத்தார்.
அரசனுக்கு ஆல்+ அத்தி ( ஆலத்தி - ஆரத்தி ) எடுத்து வரவேற்பளித்தனர்.
இனி முழுமையான பொருளைக் காண்போம் .
அரசன் ஒருவன் குதிரைமேல் ஏறி வேல் தாங்கிய தோளோடு வேட்டைக்குச் செல்கிறான். வேட்டைக்குச் சென்ற இடத்தில் வேங்கைப் புலியொன்றைக் காண்கிறான். அந்த வேங்கைப் புலியைத் தன் கையில் வைத்திருந்த வேலால் குத்திக் கொல்கிறான். வேட்டையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தன் அரண்மனைக்குத் திரும்புகிறான். வெற்றியோடு திரும்பிய அரசனை, ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள் அரண்மனை பணிப்பெண்கள். இந்தச் செய்தியைத்தான் , 'மரம் ' என்ற ஒற்றைச் சொல்லை வைத்து , அது உணர்த்தும் பல்வேறு பொருள்களைப் பயன்படுத்தி அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் சுந்தரகவிராசர்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்