இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்வை வகுத்துச் சொன்னார்கள் பல ஞானத்துறவிகள் .. எப்படியும் வாழலாம் என்று வாழத்துடிக்கிறார்கள் சில ஈனப்பிறவிகள் . மனம்போல் வாழ்வது வாழ்க்கையல்ல . மற்றவர்களுக்காக வாழ்வதே வாழ்க்கை. அப்படி வாழும் முறையை இளமையிலேயே கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் வாழும் வாழ்க்கை மற்றவர்களுக்கு நன்மைதரும் வகையில் அமையும்.
" இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொல் களைக்கட்டு வாய்மை எருஅட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்.
( அறநெறிச்சாரம் - 16)
இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ள வேண்டும். அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும். வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இடவேண்டும். அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும். இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.
இப்பாடல் உணர்த்தும் உண்மையை உணர்ந்து இனியாவது வாழப் பழகுவோம். அப்போதுதான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்