Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " யாரும் இல்லை தானே கள்வன் "

 



களவில் மணம் புரிந்த தலைவன் ஊரறிய மணம் புரியாமல் காலம் தாழ்த்துகிறான். இவ்வாறு  நெடுங்காலம் தலைவன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதை எண்ணி தலைவி வருந்துகிறாள். "தலைவன் கருணைகொண்டு என்னைத் திருமணம் செய்து கொண்டாலன்றி எனக்கு உதவியாகச் சான்று கூறுவார் வேறு ஒருவரும் இலர் " என்று தோழியிடம் கூறுகிறாள் தலைவி.


" யாரும் இல்லை தானே கள்வன் 

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால 

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் 

குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே " 


( குறுந்தொகை - 25)


தலைவன் என்னோடு கூடியிருந்த பொழுது அதற்குச் சான்றாக வேறு ஒருவரும் அங்கு இல்லை. தலைவனாகிய கள்வன் மட்டுமே அங்கு இருந்தான். பிறர் அறியாதவாறு வந்து தன் நலத்தைக் கவர்ந்து கொண்டு சென்றவனாதலின் தலைவனைத் தலைவி " கள்வன் " என்று குறிப்பிடுகிறாள். தலைவன் கூறிய உறுதி மொழிகள் பொய்யானால் நான் என்ன செய்வேன்? 


தலைவன் சூளுரை கூறிய பொழுது அதற்குச் சான்றாவார் ஒருவரும் இலர். சாட்சி கூறுவதற்கு இயலாத, தினையின் அடியைப் போன்ற சிறிய செழுமையான கால்களையுடைய   நாரை ( குருகு)  மட்டுமே இருந்தது. அதுவும் தன் உணவான ஆரல் மீனின் வருகையையே கூர்ந்து நோக்கியிருந்தது. அதுவும் எங்களைப் பார்க்கவில்லை.  நான் என் செய்வேன்" என்று தலைவி வருந்தி கூறுகின்றாள். 


தலைவன் தன்னோடு கூடியிருந்தபொழுது அதனைக் கண்டு சாட்சி கூறுவார் ஒருவரும் இல்லை. அவன் ஒருவனே சாட்சி. அவன் அதை இல்லையென்று மறுப்பின் என்னால் எதுவும் செய்ய இயலாது. அவன் என்னோடு கூடியிருந்ததை ஊர் அவை முன்பு மெய்ப்பிக்க வேறு சாட்சி இல்லை. அவனும் என்னை மணந்து கொள்ளாமல் காலம் தாழ்த்துகிறான் " என்பதே தலைவியின் வருத்தமாக உள்ளது.


அன்றும்சரி, இன்றும்சரி சட்டத்திற்குச் சாட்சியே தேவை.  சாட்சியில்லையேல் சட்டம் தன் கடமையைச் செய்யாது. எதையும் மெய்ப்பிக்க சாட்சி ஒன்றே  தேவைப்படுகிறது என்பதை இப்பாடல் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) ..

கருத்துரையிடுக

0 கருத்துகள்