Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " மாலைமாற்று "

 



 ஆசுகவி ,  மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்று நான்குவகை கவிகள் தமிழில் உள்ளன.  அவற்றில் சித்திரக்கவி வகையைச் சேர்ந்ததுதான் " மாலைமாற்றுக்கவி " . 

"மாலைமாற்று " என்பது ஒரு சொல் விளையாட்டு ஆகும். முதலிலிருந்து இறுதிவரை அமைந்த ஒரு பாடல் அடியை, இறுதியிலிருந்து திருப்பி அப்படியே எவ்வகை மாற்றமும் இல்லாமல் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும்போது அதன்  பொருள் மாறாமல்  அமையும் பாடலையே  " மாலைமாற்று "  என்பர்.   இதை " இருவழியொக்கும் சொல் " என்றும் கூறுவர். 


மாலை - வரிசை.

மாற்று - மாறுதலை உடையது.

 அதாவது ஒரு பாடலை முன்னிருந்து படிப்பினும்,  மாற்றி பின்னிருந்து முன் நோக்கிப் படிப்பினும் ஒன்றுபோல வரும். 

தமிழில் விகடகவி, குடகு, பாப்பா, காக்கா,  தாத்தா,  கைரேகை போன்ற சொற்கள் மாலைமாற்றுச் சொற்கள் ஆகும். 

தேரு வருதே,  மாடு சாடுமோ, மோரு தாருமோ, தோடு ஆடுதோ, மேக ராகமே, மேள தாளமே 

போன்ற தொடர்கள் மாலைமாற்றுத் தொடர்களாக அமைந்துள்ளன. இதை ஆங்கிலத்தில் PALINDROME என்று கூறுவர்.  சிறுவர்கள் அடிக்கடி இச்சொல் விளையாட்டை  விளையாடி மகிழ்வர். 


"மாலைமாற்று " என்பது ஒரு கடினமான யாப்பு வடிவமாகும். இந்த யாப்பு வடிவத்தை முதன்முதலில் கண்டறிந்து தன் பாடலில் கையாண்டவர் திருஞான சம்பந்தர். மாற்றுமாலை வடிவில் ஒரு பாடல் அல்ல, ஒரு பதிகமே பாடியுள்ளார் திருஞான சம்பந்தர். ஆம், மாலைமாற்றுத் திருப்பதிகம் " என்ற ஒரு நூலையே அவர் படைத்திருக்கிறார். அதில் 10  மாலைமாற்றுத் திருப்பதிகங்களும், ஒரு மாலைமாற்றுத் திருக்கடைக்காப்பும்   என மொத்தம் 11 பாடல்கள் உள்ளன. 

அவற்றுள் ஒரு பாடலை இங்குக் காண்போம்.


" யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா 

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா " 


பாடலைப் பிரித்துப் பொருள் அறிவோம்.


யாம் - ஆன்மாக்கள் ஆகிய யாமே கடவுள் என்று கூறினாலாகுமோ? 


ஆமா - அது சரியாகுமா? 


நீ - நீ தான் கடவுள் என்றால் .


ஆம் ஆம் - அதுதான்  சரியாகும். 


மாயாழீ - பேரியாழை வாசிப்பவனே .


காமா - யாவரும் விரும்பும் கட்டழகா. 


காண் - யாவரும் காணும்படியாக


நாகா - நாகங்களையே அணிகலனாகப் பூண்டவனே. 


காணா - எவரும் காணாதபடி 


காமா - காமனை எரித்து அழித்தவனே 


காழீயா - சீகாழீப்பதியில் எழுந்தருளியுள்ளவனே. 


மாமாயா - பெரிய மாயைகளைச் செய்தலில் வல்லவனே 


நீ - நீ


மா - கருமையாக உள்ள  (அறியாமையைச் செய்கின்ற )


மாயா - மாயை முதலிய மலங்களில் இருந்து எம்மை விடுவிப்பாயாக .



முழுமையான பொருள் : 

சிற்றறிவு படைத்த ஆன்மாக்களாகிய எங்களைக் கடவுள் என்று கூறினால் அது சரியாகுமா? நீ தான் எம் கடவுள் என்றால் அதுதான் சரியாக இருக்கும். பேரியாழினை வாசிப்பவனே, யாவரும் விரும்பும் கட்டழகனே,  யாவரும் காணும்படியாக பாம்புகளையே அணிகலனாகப் பூண்டவனே,  எவரும் காணாதபடி மன்மதனை எரித்துச் சாம்பல் ஆக்கியவனே, சீகாழீ ( சீர்காழி)ப் பதியில்  எழுந்தருளியுள்ளவனே,   பெரிய மாயைகளைச் செய்வதில் வல்லவனே,   அறியாமையைச் செய்கின்ற மாயை முதலிய மலங்களிலிருந்து  எம்மை நீ  விடுவிப்பாயாக என்று வேண்டுகிறார் திருஞான சம்பந்தர். 


"மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் " இதுபோல இன்னும் பத்துப்பாடல்கள் உள்ளன. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து மகிழுங்கள். 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்