Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " இன்று நான், நாளை நீ "

 


சூழ்நிலைக்கு ஏற்றவாறும்,  இடத்திற்கு ஏற்றவாறும் பழமொழிகள் சொல்வதில் கைதேர்ந்தவர்கள் தமிழர்கள். நம் முன்னோர்களின் அனுபவமும், அறிவும்  சேர்ந்தே பழமொழிகளாக  உருப்பெற்றுள்ளன.  நம் முன்னோர்களின் பழமொழிகளையே தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு இக்கால சான்றோர்களும் புதுப்புது பழமொழிகளையும், கருத்தாழமிக்க சில சொற்றொடர்களையும்  உருவாக்கி வருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் " இன்று நான், நாளை நீ " என்ற சொற்றொடர்.  இதை எங்கு எழுதி வைத்திருக்கிறார்கள்  தெரியுமா? இடுகாட்டு நுழைவு வாயிலில் .அதாவது, புகழுடம்பு அடைந்து  இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் ,  இடுகாட்டுப்பக்கம் வருவோர் போவோரைப் பார்த்துத் தன்னடக்கத்தோடு  சொல்வதாக இந்தச் சொற்றொடரை எழுதி வைத்திருக்கிறார்கள். 


" இன்று நாங்கள் இறந்துவிட்டதால் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளோம்.  நாளை ( எதிர்காலத்தில் ) நீயும் இறந்து போகத்தான் போகிறாய். அப்போது உன்னையும் இங்கு அடக்கம் செய்யத்தான் போகிறார்கள். அதுவரை நீ கொஞ்சம் ஆடாமல் அமைதியாக இரு " என்பதே அதற்குப் பொருளாகும். உயிரோடு இருக்கும்வரை மட்டுமல்ல,   இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட பின்பும் அறிவுரை சொல்வதை நாங்கள்  நிறுத்தமாட்டோம் என்பதுபோல் இருக்கிறது இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டவர்களின்  இந்த அலப்பறை. நிலையாமைக் கோட்பாட்டை நம் கண்முன் நிறுத்துகிறது இந்தச் சொற்றொடர். இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமல்ல, நாம் பல இடங்களில் பார்க்கின்ற  இறந்தவர்களின் புகைப்படங்கள் எல்லாமே " இன்று நான், நாளை நீ " என்ற உண்மையை நம்மைப்பார்த்து  உரக்கச் சொல்வதாகவே இருக்கின்றன. அறிவுடையோர் அனைவருமே இதை உணர வேண்டும். நம் உயிர் நம்மைவிட்டு எப்போது போகுமென்று நமக்குத் தெரியாது. ஆதலால்,  நாம் வாழும் நாள்வரை,  வையம் வாழ வாழ்வோம். வையம் வாழ்த்த வாழ்வோம். 


" மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் 

தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத் 

துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டார்அல்லால் 

எஞ்சினார் இவ்வுலகத்து இல். 

( நாலடியார் - 21)


மலையின்மீது தோன்றுகின்ற நிலவைப்போல,  யானையின் தலையின்மேல் வெண்கொற்றக் குடையுடன் தோன்றுகின்ற அரசர்களும் இவ்வுலகில் நிரந்தரமாக இல்லை. அவர்களும் இறந்துவிட்டனர் என்று இகழப்பட்டார்களே அல்லாமல், இவ்வுலகில் இறவாது எஞ்சி இருந்தவர் யாரும் இல்லை. இவ்வுலகில் நிலைபெற்று வாழ்பவரும் யாரும் இல்லை. அதாவது, மண்ணைக் கட்டியாண்ட அனைவருமே மண்ணோடு மண்ணாக போய்விட்டார்கள் என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது இந்த நாலடியார் பாடல்.  நாம் என்னதான் பொருளீட்டி மாடிவீடு கட்டி வாழ்ந்தாலும், கோடிகோடியாய் பணம் சேர்த்து அதில் படுத்து உருண்டாலும்,  ஒருநாள் இந்த உடலை விட்டும், இந்த உலகை விட்டும் நம் உயிர் போகத்தான் போகிறது என்பதை உணர்ந்து வாழ்வோம்.  இருப்பதை எல்லோர்க்கும் கொடுத்து வாழ்வோம். நாளை இந்த மண்ணில் நாம் வாழ முடியாமல் போகலாம்.  மற்றவர்கள் மனதில் நாம் எப்போதும் வாழ்வோம்.  


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்