தமிழ் அறிவோம்!
" வலவன் ஏவா வானவூர்தி "
தங்கள் சுய அறிவைக் கொண்டே வானூர்தியைக் (.விமானம்) கண்டறிந்ததாகக் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் மேலை நாட்டினர். ஆனால், தமிழர்களோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வானூர்தி இயக்கப்பட்டதை இலக்கியங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். வலவன் என்பது ஊர்தி இயக்குபவரைக் குறிக்கும் சொல். வானவூர்தி என்பது வான் வழியாக இயக்கப்படும் ஊர்தியைக் ( வாகனம்) குறிக்கும் சொல். சங்க காலத் தமிழர்கள் பயன்படுத்திய வானவூர்தி எப்படிப் பட்டது தெரியுமா? இயக்குவதற்கு வலவர் ( ஓட்டுநர் ) இல்லாமல் தானே செல்லக் கூடிய ஊர்தி ஆகும். அதாவது, ஊர்திக்குள் ஓர் ஆள் அமர்ந்து இயக்காமல், இந்தக் காலத்தில் ஊர்தியை இயக்குபவர் தரையிலிருந்தே தொலைவியக்கி மூலமாக ஊர்தியை இயக்குவதைப் போல அந்தக் காலத்திலேயே வானவூர்தியை ( தானியங்கி வானூர்தி ) இயக்கியிருக்கிறார்கள் தமிழர்கள். அதற்குச் சான்றாய் இருக்கும் பாடல் ஒன்றை இங்குக் காண்போம்.
"சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ்
நூற்றிதழ் அலரின் நிரைகண் டன்ன,
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து,
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே;
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான வூர்தி
எய்துப என்பதம் செய்வினை முடித்தெனக்
கேட்பல்; எந்தை ! சேட்சென்னி ! நலங்கிள்ளி !
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்
அறியா தோரையும் அறியக் காட்டி,
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து,
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்,
வருந்தி வந்தோர் மருங்கி நோக்கி,
அருள வல்லை ஆகுமதி; அருளிலர்,
கொடாஅமை வல்லர் ஆகுக;
கெடாஅத துப்பினின் பகையெதிர்ந் தோரே! "
( உறையூர் முதுகண்ணன் சாத்தனார், புறநானூறு - 27)
தாமரை சேற்றில் பிறக்கிறது. அது நூற்றுக்கணக்கான இதழ்களைப் பெற்று மணமுடன் விளங்குகிறது. தாமரை இலையோ பயனற்றுக் கிடக்கிறது. இங்கு யார் பிறப்பிலும் வேற்றுமை இல்லை. அவரவர் செய்யும் செயல்களே அவர்களுக்கான அடையாளத்தைத் தருகிறது. தாமரை மலர்போல் சிறந்து, இந்த மண்ணை ஆண்ட அரசர்களை எல்லாம் எண்ணுங்கால், புகழும், புலவர்களால் பாடப்பெற்ற மாண்பும் உடையோர் மிகச் சிலரே ஆவர்; தாமரை இலைகளைப் போல் பயனின்றி மாண்டு போனோர் பலர் ஆவர் .புலவர்களால் பாடப் பெறும் நல்லியல்பும், புகழும் உடையோர், மண்ணுலகை விட்டு வானுலகு செல்கையில், வானவர்களின் வரவேற்பைப் பெற்று, *வலவன்* *இல்லாத* *வானவூர்தியில்* அழைத்துச் செல்லப்படுவர் என்று ஆன்றோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன் !
என் தலைவனே ! சென்னியே ! நலங்கிள்ளியே ! இந்த உலகில் செல்வம் படைத்தவன் ஏதிலி ஆவதும், ஏதுமற்றவன் செல்வந்தன் ஆவதும், பிறந்தவை மடிவதும், மடிந்தவை மீண்டும் பிறப்பதும் நிலைபெற்ற உண்மையாகும் இந்த உண்மைகளை உணர்த்துவதற்கு அல்லவோ திங்கள் என்னும் தெய்வம் தேய்வதும், வளர்வதும், மறைவதும், எழுவதுமாக வானில் வலம் வருகிறது. இந்த உலகில் வல்லவர் ஆயினும், வல்லமை இல்லாதவர் ஆயினும் வறுமையால் வாட்டமுற்று வாடும்போது, அவர்களுக்கு அருள் செய்யும் நீ வழங்குதலில் வல்லவன் ஆவாய்.
மிகுந்த வலிமையை உடையவன் நீ !
உன் பகைவர்கள் அருள் இல்லாதவராய், இரவலர்க்கு வழங்காமல் கருமித்தனம் காட்டுவதில் வல்லவர்களாய் ஆகட்டும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)
0 கருத்துகள்