Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்!" காக்கை கறி "" காக்கைக்காகா கூகை " " உலகில் வருவிருந்தோர் உண்டு "" கல்கிள்ளி கைஉயர்ந்தார் இல் " " நுண்மாண் நுழைபுலம் "" ஆட்டுக்கல் மழைமானி "" பெய்யெனப் பெய்யும் மழை " " நல்லாரைக் காண்பதுவும் நன்றே "

 "காக்கை கறி "

" காக்கைக்காகா கூகை "

 " உலகில் வருவிருந்தோர் உண்டு "

" கல்கிள்ளி கைஉயர்ந்தார் இல் "

  " நுண்மாண் நுழைபுலம் "

" ஆட்டுக்கல் மழை




" காக்கை கறி " 


 இரட்டுற மொழிதல் அணி பயின்று வரக்கூடிய எண்ணற்ற பாடல்கள்  தமிழில் உள்ளன. அவற்றில் ஒன்றை இங்குக் காண்போம்.

" காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் " 

மேலோட்டமாகப் பார்த்தால், ' சைவர்கள் காக்கை கறி  உண்ணக்கூடியவர்கள்'  என்று சைவர்களை ஏளனம் செய்வதுபோல தெரியும். உண்மையில் இப்பாடல் சைவர்களின் மேன்மையைக் கூறவே எழுதப்பட்டுள்ளது. ஆம், இப்பாடலின் உண்மையான பொருளை அறிவோம். 


*காக்கை* - கால் + கை .

உள்ளங்கையில் கால்பங்கு ( 1/4 ) அளவு.

*கறி* *சமைத்து**  -  காய்கறியைச் சமைத்து .

*கருவாடு* *மென்று* - கரு + வாடும் + என்று.

உடலின் கருவாகிய உயிர் வாடும் என்று.

*உண்பர்* *சைவர்*- சைவர்கள் உண்பார்கள். 


உள்ளங்கையில் கால்பங்கு  அளவேனும் காய்கறியைச் சமைத்து உண்டு உயிர் வாழ்ந்தாலும் வாழ்வார்களே தவிர, ஒருநாளும் மற்ற உயிரைக் கொன்று  உயிர் வாழாதவர்களே " *சைவர்கள்* " ஆவர்.  தங்கள் உயிர் வாழவேண்டும் என்பதற்காக மற்ற உயிர்களுக்குத் தீங்கு செய்யாதவர்கள்தான் ' *சைவர்கள்* ' என்று சைவர்களின் பெருமையைப் போற்றுகிறது இப்பாடல்.

இந்த உடலில் உயிர் வாழவேண்டும் என்பதற்காக உயிர்க்கொலை செய்வதை சைவர்கள் ஒருநாளும் விரும்பமாட்டார்கள். 

உள்ளங்கையில் கால்பங்கு அளவு மட்டுமே உள்ள  காய்கறியைச் சமைத்து, அதை  உண்டு வாழ்ந்தால் நம் உடல் மெலியும். உடலில் நோய்கள் பெருகாது. உடல் இயக்கம் நன்றாக இருக்கும். நீண்டநாள் வாழலாம் . ஆகையால்,  

" காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்டு வாழ்வோம். 

உடலும் நன்றாக இருக்கும். உலக உயிர்களும் நன்றாக இருக்கும்.

 


" காக்கைக்காகா கூகை " 


இருபொருள் பட கருத்தாடும் முறையில் கைதேர்ந்தவர்தான் காளமேகப்புலவர். 'ககர ' வரிசை  மட்டுமே அமையுமாறு அழகான செய்யுள் ஒன்றைப் பாடியுள்ளார். இதுபோல பாடுவது  மிகவும் கடினமாகும். அந்தப் பாடலை இங்குக் காண்போம்.


"  காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை 

கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க - கைக்குக்குக்காக்கைக்குக் கைக்கைக்கா கா.


   காக்கைக்குப் பகை கூகை ( ஆந்தை) ; கூகைக்குப் பகை காக்கை. பகற்பொழுதில் காகம் கூகையை வென்றுவிடும் ; இரவுப்பொழுதில் கூகை காகத்தை வென்றுவிடும். அரசன் ( கோ) பகைவரிடத்தில் இருந்து  தன் நாட்டை பகலில் காக்கையைப் போலவும், இரவில் கூகையைப் போலவும் காக்க வேண்டும். பகைவனின் பலவீனமறிந்து , கொக்கு காத்திருப்பது போல தகுந்த காலம்வரை காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசன்கூட பகையை வெல்ல முடியாமல் தோற்றுவிடுவான். 


" உலகில் வருவிருந்தோர் உண்டு " 


ஔவையார் ஒரு சமயம் திருக்குடந்தை நகருக்குச் சென்றிருந்தார். அந்த ஊரில் செல்வந்தர் இருவர் வாழ்ந்து வந்தனர். அதில் ஒருவன் கொடையாளி. அவன் பெயர் மருத்தன். இன்னொருவன் மகா  கஞ்சன். அவன் பெயர் திருத்தங்கி. 


தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம் உணவளித்து மகிழ்ந்தான் மருத்தன். தன் ஊருக்கு வந்த ஔவையாரை நாடிச்சென்று வரவேற்று விருந்தளித்து இன்புற்றான் மருத்தன். அளவற்ற செல்வம் படைத்த திருத்தங்கியோ யாருக்கும்  எந்தவொரு உதவியையும் செய்யாதவன் ஆவான். இந்த இருவரின் குணநலன்களோடு   அவர்கள் வீட்டின் முற்றத்தில் நின்றிருந்த வாழைமரங்களை ஒப்பிட்டு  பாடல் ஒன்று பாடினார் ஔவையார்.


" திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும்

மருத்தன் திருக்குடந்தை வாழை - குருத்தும் 

இலையுமிலை பூவுமிலை காயுமிலை என்றும்

உலகில் வருவிருந்தோர் உண்டு. 


( ஔவையார் தனிப்பாடல் திரட்டு - 91)


செல்வம் குறையாமல் தங்கியிருக்கும் திருத்தங்கியின் வாழைமரமோ இனிதான பழக்குலையுடன்  மிகவும்  செழிப்பாக இருக்கிறது. எவருக்கும் எதுவும் கொடுக்காமல் இருக்கிறான். அதனால்தான்  அவன் வீட்டு வாழை செழிப்பாக இருக்கிறதாம். மருத்தன் வீட்டு வாழையோ செழிப்பில்லாமல்  வாடி வதங்கி உள்ளது. அவன் வீட்டு வாழையிலோ குருத்தும் இல்லை. இலையும் இல்லை. பூவும் இல்லை. காயும் இல்லை . உலகில் எந்நாளும் வருகின்ற விருந்தினருக்கு இல்லையென்று சொல்லாமல் வாழையின் பூக்கள் , காய்கள் அனைத்தையும் சமைத்து இலையில் பரிமாறி விருந்தளிக்கிறான். இதன் காரணமாகவே  மருத்தன் வீட்டு வாழைமரம் செழிப்பில்லாமல் வாடி வதங்கி இருக்கிறதாம் .  மருத்தனை  இகழ்வதுபோல புகழ்கிறார் ஔவையார். 

" கல்கிள்ளி கைஉயர்ந்தார் இல் " 


என் நண்பன் ஒருவன் கையில் பெரிய கட்டுப்போட்டுக் கொண்டு வந்தான். " நண்பா! உனக்கு என்னவாயிற்று. கையில் என்ன காயம்? " என்று கேட்டேன். " நான் ஈருருளியில் சென்றேன். எதிரே வந்த பேருந்து என்மீது மோதிவிட்டது. அதனால் என் கை உடைந்துவிட்டது " என்றான். 


" கொஞ்சம் பார்த்துச் செல்லக்கூடாதா? என்று கேட்டேன். " கொஞ்சம் அல்ல. நன்றாக பார்த்துக் கொண்டேதான் சென்றேன். இவன் நம்மீது மோதிவிட்டு சென்றுவிடுவானா? என்று நினைத்துக்கொண்டே அந்தப் பேருந்துக்கு வழிவிடாமல் சாலையின் நடுவே சென்றேன். அதனால் அந்தப் பேருந்து வேறுவழியில்லாமல் என்மீது மோதிவிட்டு சென்றது " என்றான். " ,இப்படி தெரிந்தே நீ தப்பு பண்ணலாமா? என்று கேட்டேன். " தப்பு செய்தால் தானே தத்துவம் பிறக்கும் " என்று சொல்லிவிட்டு ஒரு தத்துவத்தைக் கூறிவிட்டுச் சென்றான். 


" நம்மைவிட பெரிய ஆளுங்கக்கூட மோதினால், நமக்குத்தான் சேதாரம் ஏற்படும் " இதுதான் அவன் சொன்ன தத்துவம்.  


" மிக்குஉடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை 


ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும் 


நற்குஎளிது ஆகி விடினும் நளிர்வரைமேல் 


கல்கிள்ளிக் கைஉயர்ந்தார் மேல் " 



( முன்றுரையரையனார். பழமொழி நானூறு - 48)


குளிர்ந்த மலைமேல் கற்பாறைகள் மிகுதியாகக் கிடக்கின்றன. அவற்றைச் சும்மா கிள்ளிப் பார்க்கலாமே என்று எண்ணுதல் கூடாது. அப்படி அந்தப் பாறையைக் கிள்ளினால் நமக்குத்தான் கை வலிக்கும். அந்தப் பாறைக்கு ஒன்றும் ஆகாது. அதுபோல, அறிவுநிறைந்த சான்றோர்களையும் , மக்களால் மிகவும் மதிக்கப்படுபவர்களையும் , அவர்கள் வருந்தும்படி அவர்களுக்குத் தீங்கு செய்தால் அது நமக்குத்தான் துன்பத்தைத்தரும். அவர்களுக்கு ஒன்றும் ஆகாது. 

" நுண்மாண் நுழைபுலம் " 


தங்களைப் படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் நாட்டில் பலருண்டு. அளவின்றிப் படித்தால் மட்டும் போதாது. ஆழமாகப் படிக்கவேண்டும். " அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் " என்ற பழமொழியைப் படித்திருப்போம். நுட்பமாக ஆராய்ந்து அறியும் அறிவு இல்லாதவர்கள் நூல்பல கற்று என்ன பயன்? 


" நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் 

மண்மாண் புனைபாவை அற்று. " 

( குறள் - 407)  

" நுட்பமானதாய் , மாட்சிமையுடையதாய், ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய அழகான தோற்றம், மண் பொம்மையின் அழகான தோற்றம் போன்றதாகும் " என்கிறார் வள்ளுவர்.  

தமிழில் எவ்வளவோ உவமைநயம் மிக்க பாடல்கள் உள்ளன. அவையெல்லாம் தமிழ்ப்புலவர்கள் தமிழுக்குக் கொடுத்த கொடையாகும். தமிழர் அல்லாத ஒருவர் தமிழை முழுமையாகக் கற்று, தமிழ் கவிநயத்தை நுட்பமாக ஆராய்ந்து அழகாக உவமை அமைத்து பாடியுள்ள பாடல் ஒன்றை இங்குக் காண்போம். 


"படித்த நூல்அவை பயன்பட விரித்துஉரைப் பவர்போல தடித்த நீன்முகில் தவழ்தலை 

பொலிந்தபொன் மலையே 

குடித்த நீர்எலாம் கொப்பளித்து அமுதுஎன அருவி 

இடித்து அறாஒலி எழத்திரை எறிந்துஉருண்டு இரிவ " 


(வீரமாமுனிவர் ,தேம்பாவணி - நாட்டுப்படலம் - 04 )


தாம் படித்த நூலைப் பிறருக்குப் பயன்படுமாறு சபைகளில், கல்விக் கூடங்களில் விரித்துரைப்பவர் போல் , நீரால் தடித்த கரிய மேகம் சிகரத்தோடு பொலிந்த அழகிய மலையும் தான் மழையால் முன் குடித்த நீரை எல்லாம் கொப்பளிக்கும். அந்நீர் அமுதம் போன்ற அருவியாக மலைமீது இடித்து பாய்ந்து நீங்காத ஒலி எழுமாறு அலை அடிக்க ஆறாக மண்வாசத்தோடு உருண்டு ஓடும். 


கார்முகில் கனமழை பொழிவதைக் காட்சிப்படுத்துகின்ற எத்தனையோ பாடல்களை இலக்கியங்களில் நாம் கண்டிருக்கிறோம். கற்றவர்கள் தாங்கள் கற்றதையெல்லாம், கற்றோர் அவையில் விரித்துரைப்பதைப் போல கார்மேகமும் தான் குடித்த நீரைக் கொப்பளித்து ஆறாக ஓடவைத்ததாக வீரமாமுனிவர் சொல்லும் புதியதோர் உவமையைக் கண்டு உள்ளம் வியக்கிறது. இத்தாலியில் பிறந்த வீரமாமுனிவர் சமயப்பணியாற்றவே தமிழகம் வந்தார். தமிழின்பால் ஈடுபாடு கொண்டு தன் வாழ்வின் இறுதிவரை தமிழ்ப்பணியாற்றினார். நுனிபுல்லை மேய்வதைப்போல அவர் தமிழ் படித்திருந்தால் இப்படி ஒரு பாடலை அவர் படைத்திருக்க முடியுமா? முடியாது. நுட்பமாக ஆராய்ந்து படித்ததால்தான் இப்படி ஒரு அழகான பாடலை அவரால் படைக்க முடிந்தது. 


நுட்பமாக ஆராய்ந்து தமிழைக் கற்ற வீரமாமுனிவர் தமிழரா? தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்துவிட்டு, தாய்மொழியாம் தமிழ்மொழியை ஏதோ எழுத படிக்க தெரிந்தால் மட்டும் போதும் என்று நினைப்பவர்கள் தமிழரா? சிந்தித்துப் பாருங்கள். நுட்பமாக ஆராயும் அறிவு இல்லாதவர்களை மண்பொம்மை என்கிறார் வள்ளுவர். தமிழை நுட்பமாக ஆராய்ந்து படிக்காமல் , ஏனோ தானோ என்று படிப்பவர்கள் தோற்றத்தாலும், பிறப்பாலும் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். உண்மையில் அவர்கள் எல்லோரும் மண்பொம்மைகளே .


" ஆட்டுக்கல் மழைமானி "



புவியீர்ப்பு விசை காரணமாக மேகங்களில் இருந்து விழும்நீர் மழையாக பொழிகிறது. மழைபொழியும் பொழுது மழையின் அளவை அளப்பதற்கு " மழைமானி " ( மழை அளவி) எனும் கருவி பயன்படுத்தப்படுகிறது. நீர் ஒரு திரவம் என்பதால் ' மில்லி லிட்டர் ' எனும் ( பன்னாட்டு முறை ) அளவிடும் அலகிலேயே மழையளவை அளக்கிறார்கள். ஒரு மில்லி மீட்டர் மழை அளவு என்பது, ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு லிட்டர் மழைநீர் வீழ்ந்திருக்கிறது என்பதாகும். இவ்வழி முறையினைக் கொண்டே தற்காலத்தில் மழையளவு அளக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் தமிழர்கள் எப்படி மழையின் அளவை அளந்தார்கள் என்பதைப்பற்றி இப்போது காண்போம்.


மழைபொழிவைக் கணக்கிட நம் முன்னோர்கள் ஆட்டுக்கல்லையே ( இட்டலி, தோசைக்காக மாவு அரைப்பதற்கான இயந்திரம்) பயன்படுத்தினார்கள். வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் ஆட்டுக்கல் குழியில் மழை நேராக பெய்து அக்குழியை நிரப்பும். ஆட்டுக்கல்லில் நிரம்பியிருக்கும் நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா , ஈரழவுக்கு ஏற்ற மழையா என்பதை முடிவுசெய்வர். மழைப்பொழிவினை 'செவி' அல்லது ' பதினு ' முறையில் கணக்கிட்டார்கள். இது 10 மில்லி மீட்டர் அல்லது 1 சென்டி மீட்டர் மழைக்கு நிகரானது. மழையின் அளவுக்கும், நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ' பதினை ' என்பர்.


5 சென்டி மீட்டர் அளவுக்கு மழைபெய்தால் அதை 'ஒரு உழவு மழை ' என்பர். அதாவது, நிலத்தில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால் அதையே ஒரு உழவு மழை என்பர். இந்த ஒரு உழவு மழையால் ஏர்கலப்பைக்கொண்டு இலகுவாக மண்ணில் ஓரடி ஆழத்துக்கு உழவு செய்யலாம். நிலத்தை உழும்போது ஏர்க்கால் இறங்கும் அளவுக்கு நிலம் நனைந்திருக்கும். விதை விதைக்க இது போதுமான மழையாகும். மழையின் அளவைப் பொறுத்து ஓருழவு, ஈருழவு, ஐந்து உழவு எனக்கணக்கிடுவர். ஐந்து உழவுக்குமேல் மழைபெய்தால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் . தமிழர்களின் ஆறாம் அறிவின் உச்சமே " ஆட்டுக்கல் மழைமானி " 

" பெய்யெனப் பெய்யும் மழை " 


திருமணமான பெண்ணுக்கு கணவனே வழித்துணை, வழிகாட்டி ஆவான். 


 கண் + அவன் = கணவன்.


இல்வாழ்க்கையில் ஈடுபடும் பெண்ணுக்குக் கண்ணாக இருந்து வாழ்நாள் முழுவதும் அவளை வழி நடத்துவதால்தான் அவன் ' கணவன் ' என்று அழைக்கப்படுகிறான். 


" கணவனே கண்கண்ட தெய்வம் " என்பார்கள். ஏன் தெரியுமா? தெய்வம் என்ற ஒன்று இருப்பதை இதுவரை யாரும் கண்டதில்லை. அதுவொரு நம்பிக்கையே. ஒரு பெண் தன்னுடைய கண்ணால் கண்டு உணரக்கூடியவற்றுள் தெய்வம் என்று யாரையாவது சுட்டிக்காட்ட வேண்டுமென்றால், அவள் கணவனையே அவள் சுட்டிக்காட்ட வேண்டும். ஏனென்றால், தெய்வத்தின் குணநலன்கள் என்று எதையெல்லாம் குறிப்பிடுகிறார்களோ அதையெல்லாம் பெற்றவனாக கணவனே விளங்குகிறான். அதனால்தான் , " கணவனே கண்கண்ட தெய்வம் " என்கிறார்கள். கணவன் என்பவன் தெய்வம் என்றால், மனைவி என்பவள் யார்? மனைவியின் சிறப்பு என்ன? என்று நீங்கள் கேட்கலாம். வாருங்கள் விடைகாண்போம். 



" தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை " .

( குறள் - 55)


வேறு தெய்வத்தைத் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயில் எழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும். வழக்கமாக எல்லோரும் சொல்லுகின்ற கருத்து இதுவேயாகும். உண்மையில் வள்ளுவர் கூற வந்த கருத்து இதுமட்டுமன்று. வேறொரு கருத்தும் உள்ளது. அதையும் இப்போது ஆராய்ந்து அறிவோம்.


கணவன் தெய்வம் என்றால், அந்தத் தெய்வத்தை ( கணவனை)ப் படைத்தது யார்? இயற்கைதானே. அந்த இயற்கையின் பல்வேறு வடிவங்களில் ஒன்றுதான் மழை.  


"கொழுநன் ( கணவன்) தொழுதெழுவாள் " என்பதற்கு கணவனின் காலில் விழுந்து வணங்கி எழுதல் என்பது பொருளன்று . 'வணங்குதல்' என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் " அன்பொழுகல் " என்பதாகும். அளவில்லா அன்பை வெளிப்படுத்துவதே 'அன்பொழுகல்" என்பர். 'எழுதல் ' என்ற சொல்லுக்குத் தோன்றுதல் என்ற பொருள் உண்டு. 


' கொழுநன் தொழுதெழுவாள் " என்பதற்குக் 'கணவன்மீது அளவற்ற அன்புகொண்டு அவன்வழியில் நடக்கும் பெண்ணாகத் தோன்றுபவள் ' என்பதே பொருளாகும். 


தன்னை வழிநடத்தக் கூடியவர்களின்மீது அளவற்ற அன்புகொண்டு, அவர்கள் காட்டுகின்ற வழியை யார் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்களிடம் இயற்கையே அடங்கி நிற்கும். தன்னை வழிநடத்தும் கணவனின் அன்புக்குக் கட்டுண்டு கிடக்கும் பெண்ணொருத்தி மழையைப் பார்த்து, மழையே நீ பெய்" என்றால் அது பெய்யுமாம். அதைத்தான் " பெய்யெனப் பெய்யும் மழை " என்கிறார் வள்ளுவர்.  


கணவன் தெய்வம் என்றால், அந்தத் தெய்வத்தைப் படைத்தது யார்? இயற்கை தானே. 'அந்த இயற்கையையே அடக்கி ஆளும் வலிமை பெற்றவள் பெண் மட்டுமே ' என்கிறார் வள்ளுவர்.


"கணவனின் காலில் விழுந்து எழு " என்று ஆணாதிக்கம் பேசவில்லை . " பெண்ணொருத்தி பெய்யெனச் சொல்ல பெய்யும் மழை " என்பதன் வாயிலாக ஒரு பெண் நினைத்தால் அந்த இயற்கையின் மீதே தன் ஆதிக்கத்தைச் செலுத்துவாள் என்று பெண்ணாதிக்கம் பேசுகிறார் வள்ளுவர்." இயற்கையே இங்கு எல்லாவற்றையும் விட பெரியது. அந்த இயற்கையையே கட்டுப்படுத்துபவள் பெண் " என்று பெண்ணின் பெருமையைப் போற்றுகிறார் வள்ளுவர். இனியாவது இதையுணர்ந்து பெண்ணினத்தைப் போற்றுவோம். 


ஒருமுறை தமிழ்ப் பாடவேளையில் ,என் தமிழாசிரியர் இந்தத் திருக்குறளையும் , அதன் விளக்கத்தையும் கூறினார். அப்போது என் தமிழாசிரியரிடம் , " ஐயா, ஒரு பெண் மழையைப் பார்த்து பெய்யென்று சொன்னால் மழை பெய்யுமா? அப்படி அந்தப் பெண் சொல்லியும் மழை பெய்யவில்லை என்றால், அவள் கணவனைத் தொழுது எழாத பெண் என்று எண்ணலாமா? " என்று கேட்டேன். அதற்கு அவர், " அப்படி இல்லை. கணவனைத் தொழுது எழக் கூடிய பெண்கள் இருவர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு பெண், " நான் வேளாண்தொழில் செய்யவேண்டும் . ஆகையால் , மழையே நீ பெய் " என்கிறாள். அதே நேரத்தில் இன்னொரு பெண், " நான் நெல்லினைக் காய வைத்திருக்கிறேன் . ஆகையால், மழையே நீ பெய்யாதே " என்கிறாள். இப்போது மழை என்ன செய்யும்? என்று கேட்டார். " செய்வது அறியாது மழை குழம்பி நிற்கும் " என்றேன் நான். " அந்தச் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பத்காகவே தனக்கு எப்போது பெய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது மழை பெய்யும்.ஆதலால், மழையை வைத்தெல்லாம் யாரையும் சோதிக்க வேண்டாம். அன்புக்கு அடங்கி வாழும் பெண்ணின் சொல்லுக்கு , அந்த இயற்கையே அடங்கி நிற்கும் என்ற பொருளில்தான் வள்ளுவர் இந்தக் குறட்பாவை எழுதியுள்ளார் " என்று விளக்கம் அளித்தார் என் தமிழாசிரியர்.  


  " நல்லாரைக் காண்பதுவும் நன்றே " 

செல்லம் கொடுத்தும் செல்பேசி கொடுத்தும் குழந்தைகளைச் சீரழித்துவிட்டு, குழந்தைகளைச் சீர்படுத்த வேண்டியது பெற்றோர்களா? ஆசிரியர்களா? என்று சிந்தனைப் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம். யாரைக் காணவேண்டும்? யாரிடம் பேச வேண்டும்? யாரிடம் பழசு வேண்டும்? யாரிடம் நட்பு கொள்ள வேண்டும்? என்ற தெளிவு இன்றைய குழந்தைகளிடம் இல்லை. அதை எடுத்துச் சொல்லும் நிலையில் இந்தச் சமூகமும் இல்லை. இதையெல்லாம் யாரிடம்தான் கேட்டு தெளிவு பெறுவது ? வாருங்கள் நம் ஔவை பாட்டியிடம் கேட்போம். 



" நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க 

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் 

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு 

இணங்கி இருப்பதுவும் நன்று.


( ஔவையார் , மூதுரை - 08 ) 



1.நல்லொழுக்கமும், நல்லறிவும் உடைய நல்லோரைக் காண்பது நமக்கு நன்மை பயக்கும். 


2.நல்லவருடைய நன்மை நிறைந்த சொல்லைக் கேட்பதுவும் நன்றாகும். 


3.நல்லவருடைய நல்ல குணநலன்களை எடுத்துரைப்பதும் நன்றாகும். 


4.நல்லவருடைய அன்பைப் பெற்று அவரோடு நட்புகொண்டு வாழ்வது நன்றாகும். இந்நான்கும் நமக்கு வாய்க்கப் பெற்றால் நாற்றிசையும் நம் புகழ் பரவும். 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

Key words 

"காக்கை கறி "" காக்கைக்காகா கூகை " " உலகில் வருவிருந்தோர் உண்டு "" கல்கிள்ளி கைஉயர்ந்தார் இல் "  " நுண்மாண் நுழைபுலம் "" ஆட்டுக்கல் மழை

கருத்துரையிடுக

0 கருத்துகள்