தன் நண்பர் ஒருவரைச் சந்திக்க தன் வேலைக்காரனுடன் சென்றார் ஒருவர். நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திப்பதால் இருவரும் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்கள். இருவருமே செல்வந்தர்கள். தங்கள் வணிகம் பற்றி பேசினார்கள். தங்களிடம் உள்ள வேலைக்காரர்களைப் பற்றியும் பேசினார்கள்.
அதில் ஒரு நண்பர் , "தன்னிடம் வேலை செய்யும் வேலைக்காரனைப் போல பெரிய முட்டாள் இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க மாட்டான் " என்றார்.
அதற்கு இன்னொரு நண்பர் " தன்னிடம் வேலை செய்யும் வேலைக்காரனே மிகப்பெரிய முட்டாள் " என்றார். உண்மையிலேயே யாருடைய வேலைக்காரன் பெரிய முட்டாள் " என்பதை கண்டறிய தங்களிடம் உள்ள வேலைக்காரன் இருவரையும் பரிசோதனை செய்து பார்க்கலாம் என்ற முடிவுக்கு இரண்டு நண்பர்களும் வந்தனர்.
முதலில் ஒரு நண்பர் தன் வேலைக்காரனை அழைத்து , அவனிடம் ஒரு ரூபாயைக் கொடுத்து " நீ கடைக்குச் சென்று ஒரு மகிழுந்து வாங்கி வா " என்றார். அவனும் அதற்கு 'சரி ' என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டான். உடனே அந்த நண்பர், இன்னொரு நண்பரிடம் " பார்த்தாயா? ஒரு ரூபாயைக் கொடுத்து மகிழுந்து வாங்கி வா என்று சொன்னால் சரி என்று சொல்லிவிட்டு செல்கிறான். மகிழுந்து என்ன விலையென்று கூட தெரியாமல் இருக்கிறான். இவனை விட பெரிய முட்டாள் இந்த உலகில் வேறு யாருமில்லை " என்று சொல்லி சிரித்தார்.
" கொஞ்சம் பொறுங்கள் " என்னுடைய வேலைக்காரனின் முட்டாள்தனத்தைப் பார்க்கலாம் " என்று சொல்லிவிட்டு தன்னுடைய வேலைக்காரனை அழைத்தார் இன்னொரு நண்பர். தன் வேலைக்காரனைப் பார்த்து " நீ என் வீட்டிகுச் சென்று வீட்டில் நான் இருக்கிறேனா என்று பார்த்துவிட்டு வா " என்றார். அவனும் சரி என்று சொல்லிவிட்டு உடனே சென்றுவிட்டான்.
" பார்த்தாயா? அவன் கண்ணெதிரேதான் நான் நிற்கிறேன். அது கூட தெரியாமல் என்னைப் பார்த்து வர என் வீட்டிற்குச் செல்கிறான் . இவனைப்போன்ற ஒரு அடிமுட்டாள் இந்த உலகில் வேறு யாருமில்லை " என்று சொல்லி சிரித்தார்.
வெளியே சென்ற இரண்டு வேலைக்காரர்களும் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டார்கள். அப்பொழுது தங்கள் முதலாளி ஒரு முட்டாள் என்று இருவரும் சொல்லிக் கொண்டனர். உண்மையிலேயே யாருடைய முதலாளி பெரிய முட்டாள் " என்பதை கண்டறிய தங்கள் முதலாளிகளின் செயல்பாடுகளைப் பற்றி ஆளுக்கொரு விளக்கம் கொடுத்தார்கள்.
" என் முதலாளிக்குக் கொஞ்சம் கூட அறிவு இல்லை. ஒரு ரூபாய் கொடுத்து மகிழுந்து வாங்கி வரச்சொன்னார். இன்று ஞாயிற்றுக்கிழமை. அனைத்துக் கடைகளுக்கும் விடுமுறை. இது கூட தெரியாமல் என்னை கடைக்குச் சென்று மகிழுந்து வாங்கி வரச்சொல்கிறாரே, அவரை விட பெரிய முட்டாள் இந்த உலகில் வேறு யாருமில்லை " என்று சொல்லிவிட்டு சிரித்தான் ஒரு வேலைக்காரன் .
அதற்கு இன்னொரு வேலைக்காரன் , " உன் முதலாளி ஏதோ ஞாபக மறதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்று தெரியாமல் சொல்லி இருக்கலாம். ஆனால் என் முதலாளி அப்படி அல்ல. அவர் ஒரு வடிகட்டிய முட்டாள்.
அவர் கையில் அலைப்பேசி இருக்கிறது. வீட்டில் உள்ள அவர் மனைவியிடமும் அலைப்பேசி இருக்கிறது. அவர் மனைவியை அலைப்பேசியில் தொடர்பு கொண்டு நான் வீட்டில் இருக்கிறேனா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே? அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் என்னை அழைத்து அவர் வீட்டிற்குச் சென்று நான் இருக்கேனா என்று பார்த்துவிட்டு வா என்கிறார் என் முதலாளி. அவரைவிட பெரிய முட்டாள் இந்த உலகில் வேறு யாருமில்லை " என்று சொல்லி சிரித்தான்.
இந்த நான்கு பேரில் யார் உண்மையான முட்டாள் ?
நான்கு பேருமே முட்டாள்கள்தான். அடுத்தவர்களைப் பற்றி அவர்கள் இல்லாத போது பேசுபவர்கள் எல்லோருமே இங்கு முட்டாள்கள்தான். தானும் ஒரு முட்டாள் என்று தெரியாமல் அடுத்தவரை முட்டாள் என்று சொல்லி சிரித்துக் கொள்கிறார்கள்.
எந்தவொரு மனிதனுக்கும் தான் செய்கிற தவறும், தன்னிடமுள்ள முட்டாள்தனமும் தெரியாது. ஆனால் அடுத்தவர் செய்கின்ற தவறுகளை பட்டியலிட்டு சொல்வார்கள். படம்போட்டு காட்டுவார்கள். மற்றவர்கள் செய்கின்ற குற்றங்களுக்கு இவர்கள் நீதிபதியாக மாறி தீர்ப்பளிப்பார்கள். ஆனால் அவரவர் செய்யும் குற்றங்களுக்கு வழக்கறிஞராக மாறி தங்கள் செய்தது குற்றமல்ல என்று சொல்லி வாதாடுவார்கள்.
" ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு ."
மற்றவர்களின் குற்றங்களைக் காண்பது போலவே தம் குற்றங்களையும் காண்பாரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கையில் புறங்கூறும் பழக்கமும் போகும். வாழ்வில் எந்தத் துன்பமும் வராது. மனமும் நிம்மதி அடையும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்