சிங்கமும் முயலும் உணவகத்திற்குச் சென்றன. உணவகத்திற்குள் இருந்த இருக்கைகளில் அருகருகே அமர்ந்தன. அந்த மேசைக்கு அருகே வந்த உணவு பரிமாறுபவர் சிங்கத்தைக் கண்டு அச்சமுற்றார். கொஞ்சம் துணிச்சலைத் துணைக்கு அழைத்துக் கொண்டு முயலிடம் சென்று " நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்டார்.
தனக்கு வேண்டிய உணவுகளை எல்லாம் வரிசையாகச் சொன்னது முயல். அடுத்து சிங்கத்திடம் கேட்க வேண்டும். பயத்துடனும் பதற்றத்துடனும் இருந்தார் உணவு பரிமாறுபவர் . வேறு வழியில்லாமல் மீண்டும் முயலிடமே சென்று , " உங்கள் நண்பர் சிங்கத்திற்கு என்ன உணவு வேண்டும்? என்று கேட்டுச் சொல்லுங்கள் " என்றார்.
" சிங்கத்திற்குப் பசி இருந்திருந்தால் முதலில் அது என்னையல்லவா சாப்பிட்டிருக்கும் ? அதற்குப் பசி இல்லை. எனக்கு மட்டுமே பசி. அதனால், எனக்கு மட்டும் உணவு கொண்டு வாருங்கள் " என்று சொல்லி சிரித்தது முயல்.
அதாவது எந்தச் சூழலிலும் பசி இல்லாதபோது தனக்கான இரை பக்கத்தில் இருந்தாலும் அவற்றைக் கொல்லும் வழக்கம் விலங்குகளிடம் இல்லை. பசித்தால் மட்டுமே வேட்டையாடும் குணம் கொண்டவைதான் விலங்குகள் என்பதையே இந்த நிகழ்வு நமக்குக் காட்டுகிறது.
" தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
( குறள் - 327)
"தன்னுயிரே போவதாக இருப்பினும் கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலை ஒருபோதும் செய்யக் கூடாது " என்கிறார் வள்ளுவர்.
பசியால் தன் உயிர் போகக்கூடாது என்பதற்காக மற்ற உயிர்களைக் கொன்று தின்னும் விலங்குகளை "அஃறிணை" என்கிறோம்.
பசியைப் போக்குவதற்காக எத்தனையோ உணவு வகைகள் இருந்தாலும் சுவைக்காக மற்ற உயிர்களைக் கொன்று தின்னும் மனிதர்களை " உயர்திணை " என்கிறோம்.
தன்னுயிரே போவதாக இருந்தாலும் மற்ற உயிர்களைக் கொன்று தின்னாத மனிதர்களே இங்கு உண்மையான
" உயர்திணை "
" வள்ளுவர் வழியில்
நிற்போம்!
வாயில்லா உயிர்களைக் காப்போம்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்