Ad Code

Ticker

6/recent/ticker-posts

ராஜேந்திர சோழனும் வங்க படையெடுப்பும்

 



கஸினி முகமது வந்து சோம்நாத்தில் கொள்ளையடித்துக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தான் இங்கே ராஜேந்திர சோழனும் வங்கத்திற்கு படையெடுத்துச் சென்று பால அரசன் மஹிபாலனை வென்று அங்கிருந்த கோயில் பொக்கிஷங்களை கொள்ளையடித்துக் கொண்டுவந்து கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலை கட்டினார். 


பாலர்களின் அரச தெய்வமான நடராஜர் சிலையை கொள்ளையடித்து கொண்டுவந்து தான் அமிர்தகாடேஸ்வரர் எனும்  கடம்பவனேஸ்வரர் கோயிலில் வைத்தார். மேலை சாளுக்கியர் கோயிலை அழித்துவிட்டு அங்கிருந்து துர்கை மற்றும் கணேஷருடைய சிலைகளையும், ஒடிசாவின் கலிங்கர்களை வீழ்த்தி காளி, பைரவர் போன்ற கோயில் சிலைகளை கொண்டுவந்தார், கீழைச்சாளுக்கியர் வைத்திருந்த நந்தி சிலையை கொண்டுவந்து தங்களது கோயில்களில் வைத்துக்கொண்டார். கற்சிலை என்றால் உடைத்துப்போடுவதும் உலோகச்சிலை என்றால் கவர்ந்து வருவதும் அரசர்களுக்கு பிடித்த விளையாட்டு.


தஞ்சையிலிருந்து கலிங்கம் வரையிலும் பின் அங்கிருந்து வங்காளம்,பிகார் வரையிலும் படையெடுத்துச் சென்ற சோழரின் படைகள் அந்நிய நாட்டு கோயில்களை இடித்து அங்கிருந்து பொக்கிஷங்களை திரட்டிக்கொண்டு போய் அவர்களை அழித்துவிட்டு திரும்ப வரும் வழியில் சாளுக்கியர்களையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் இங்கே கஸினியின் படையெடுப்பு மட்டும் நமக்கு ஹைலைட் செய்யப்பட்டு கற்பித்துத் தரப்படுகிறது. அது ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்து - முஸ்லிம் பிரித்தாளும் சூழ்ச்சிக்கென்றே  தனித்துவமாக கட்டமைக்கப்பட்ட வரலாறாக இன்றுவரை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. 


கஸினி முகமதுவும் ராஜேந்திர சோழனும் ஒரே பதினொன்றாம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள், கஸினி வந்து சோம்நாத் கோயிலை கொள்ளையிட்டது 1030 எனில் ராஜேந்திர சோழன் 1014 முதல் 1044 வரை தனது ஆட்சியாண்டில் கொள்ளையிட்டது எத்தனை கோயில், எத்தனை நாடுகள்?. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவன் ஆப்கானத்து கஸினியில் இருந்து குஜராத் வந்தான், கொள்ளையடித்துச் சென்று அன்றைய தினத்தில் பட்டுச்சாலை வழியாக செல்லும் கஸினி நகரம் அறிவியல்,இலக்கியம்,கலைகள் ஆகியவற்றில் சிறந்த நிலையில் இருந்தது ஆகவே அங்கு பிரம்மாண்ட பல்கலைக்கழகமும் அதனுள் அருங்காட்சியகமும் நூலகமும் அமைத்து அவனது ஊரை மேம்படுத்திக்கொண்டான். தான் நிர்மாணித்த அந்த நகரை 'தேவலோக கன்னி' என அழைத்து பெருமைப்பட்டுக்கொண்டான்.


சோழன் வங்கம் கடந்து கடாரம் வரை சென்றார். அப்போது ஆப்கான், இந்தியா என்ற எல்லைகள் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. அன்றைய தினத்தில் அண்டை நாடுகளை வெற்றிகொள்வதும், அவர்களது அரண்மனைகளை சேதப்படுத்துவதும், கோயில்களை இடிப்பதும், விளைநிலங்களை நாசப்படுத்துவதும், இளவரசர்களை கொன்றுகுவித்து  அரசகுலப்பெண்களை கவர்ந்து வருவதும் அதன் அடையாளமாக சொந்த நாட்டில் கோயில்களும் ஸ்தம்பங்களும் என வெற்றிச்சின்னங்களை உருவாக்கிக்கொள்வதும் எல்லா நாட்டு அரசர்களுக்கும் இயல்பான ஒன்று. வீரன் வாழ்க்கையில் வெற்றி தோல்வி சகஜம் அதேபோல வன்முறையும் தவிர்க்கமுடியாதது என்பதை ஏனோ நாம் உணர்வதில்லை.


நம்நாட்டு அரசரது அந்நிய நாட்டு படையெடுப்பின் வீரதீரங்கள் எல்லாம் சாகசப்பட்டியலிலும் அந்நிய நாட்டினர் வந்தது அதிலும் நம் மண் சாராத வேற்று மத அடையாளத்துடன் வந்தது மட்டும் அராஜகமாகவும் காட்டப்படுதலே வரலாற்றில் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அதே தனத்தை தான் இன்று Hatred Politics செய்வோர் கையிலெடுத்துக்கொண்டு அலைகின்றனர். நேரான சிந்தனையை கற்பிக்காத எதுவுமே நல்லதல்ல அது மதமாக இருந்தாலும் வரலாறு, அறிவியல், இலக்கியம், அரசியல் என எதுவாக இருந்தாலும்.


இதெல்லாம் NCERT syllabus இல் கூட கற்பிக்கமாட்டார்கள், கஜினி சோமநாதபுரத்தை கொள்ளையடித்தான்னு மட்டும் தான் சொல்லித்தருவான். சோமநாதபுரம் ஒரு சமணக்கோயிலாக இருந்து சிவன் கோயிலாக மாற்றப்பட்டது என்பதையோ அதன் வளாகத்தில் ஜைன, பௌத்த அடையாளங்கள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டது என்பதையோ கற்பிக்க மாட்டான். யாராவது வரலாற்று ஆய்வாளர் ஆராய்ச்சி செய்து புத்தகங்களில் எழுதி வைத்தவற்றை நாம் தான் தேடி கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்