ஓமன், ஏமன்... பெயரை கேட்டால் பலருக்கும் இருநாடுகளுக்கும் வித்தியாசமே தெரியாது. ஆனால் இதில் ஒரு நாடு வல்லரசுகளுக்கு இடையே நடக்கும் போரில் மத்தியஸ்தம் செய்யும் அளவு உலக அரங்கில் செல்வாக்குடனும், வளமான பொருளாதாரத்துடனும் இருக்கிறது. இன்னொரு நாட்டில் தீவிரவாதம், குழப்பம், உள்நாட்டுப்போர்.
என்ன காரணம்? வரலாற்றை ஆராய்வோம்.
அரேபிய தீபகற்பத்தின் தென்கிழக்கே இருக்கும் நாடு ஓமன். அதன் அண்டைநாடு ஏமன். இரு நாடுகளிலும் கச்சா எண்ணெய் வளம் உண்டு. இரு நாட்டு மக்களும் அரபிகள்; மொழி, பண்பாடு, சமயம் எல்லாம் ஒன்றுதான். ஆனால் வரலாறு மட்டும் மாறுபடுகிறது.
ஏமன் வரலாற்று சிறப்புமிக்க நாடு. சாலமன் மன்னரின் காலத்தில் சபா (Saba) ராஜ்ஜியத்தின் ராணி ஷீபா (Queen of Sheba) ஆண்ட நாடு எனச் சொல்லப்படுகிறது. காபியை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு. ஆனால் 1914 வரை துருக்கியின் ஒட்டோமானிய (Ottoman) பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒட்டோமானிய மன்னர்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். ஏமனின் வடக்கே இருக்கும் மலைப்பகுதிகளில் காபி தோட்டங்கள் ஏராளம். அங்கிருக்கும் மக்கள் அரபிகள் என்றாலும் அவர்கள் ஷியா பிரிவின் ஜைதி (Zaidi) பிரிவைச் சேர்ந்தவர்கள்.
துருக்கியர்களை எதிர்த்து ஒன்றல்ல, இரண்டல்ல... நூற்றாண்டுகளாக இந்த மலைப்பகுதிகளில் ஷியா மக்களின் கொரில்லா போர் நடந்து கொண்டே இருந்தது. மலைகளில் பதுங்கியிருந்து தாக்கியதால் துருக்கியர்களால் அவர்களை முழுமையாக அடக்க முடியவில்லை; இவர்களாலும் அந்தப் பெரிய பேரரசை அகற்ற முடியவில்லை. இந்த நீண்டகால போரினால் நவீனமயமாக்கம், தொழில்புரட்சி, கல்வி எதுவுமே ஏமன் மக்களை வந்து சேரவில்லை. இந்த மலைப்பகுதி வீரர்கள் தான் இன்றைய ஹூத்திகள்.
கிழக்கே ஓமானில் நிலைமை வேறு. தொடக்கத்தில் ஒட்டோமானிய ஆட்சி இருந்தாலும், 16-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் தாக்கி ஓமானின் கடலோரப் பகுதிகளைக் கைப்பற்றினார்கள். அடுத்த நூறாண்டுகள் போர்த்துகீசியர்களின் ஆதிக்கம் நீடித்தது. ஓமானியர்களுக்கு இந்தியா, தற்போதைய பாகிஸ்தான் (குவாடர் பகுதி), ஆப்பிரிக்கா (சான்சிபார்) ஆகிய பகுதிகளுடனான முக்கிய கடல்வழிகளையும், கடல் வணிகத்தையும் போர்த்துகீசியர்களின் ஆட்சி அறிமுகப்படுத்தியது. 17-ஆம் நூற்றாண்டில் எழுச்சி பெற்ற ஓமானியர்கள் போர்த்துகீசியர்களை விரட்டியடித்துவிட்டு, அல் சைது (Al Said) வம்சத்தின் சுல்தான் ஆட்சியை நிறுவினார்கள். போர்த்துகீசியர்கள் விட்டுச்சென்ற கடல்வழிகளைப் பயன்படுத்திப் பெரிய கடல் வணிகர்களாக உயர்ந்தார்கள். பின்னர் பிரிட்டிஷ் அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, இந்தியாவில் இருந்து சிந்தி வணிகர்களை அழைத்து வந்து சிறப்பாக வர்த்தகம் செய்தார்கள்.
ஏமனில் 1914-ல் ஒட்டோமானிய ஆட்சி முடிந்தபின், சவூதி ஆதரவு சன்னி முஸ்லிம்கள் ஒரு பிரிவாகவும், ஈரான் ஆதரவு ஷியாக்கள் தற்போதைய ஹூத்தி அமைப்பினராகவும் உருவெடுத்தார்கள். இரண்டிலும் சேராத முற்போக்கு ஏமனிகள் "தெற்கு ஏமனை தனிநாடாக்கு" என ஒருபக்கம் நின்றார்கள். அடுத்த பல பத்தாண்டுகள் இப்படி கடும் குழப்பம் நிலவி, கடைசியில் எல்லா பெரியண்ணன்களும் சேர்ந்து பஞ்சாயத்து செய்து 1990-ல் ஒன்றுபட்ட ஏமன் உருவாகி, அலி அப்துல்லா சலே (Ali Abdullah Saleh) முதல் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
உலக வரலாற்றில் மிக மோசமான ஊழல் ஆட்சிகளில் ஒன்றாக இவரது ஆட்சி அமைந்தது. அடுத்த 30 ஆண்டுகள் நாட்டின் வளங்கள் சுரண்டப்பட்டன; எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எண்ணெய் வருவாய் அனைத்தும் ஊழலில் மூழ்கியது.
அண்டைநாடான ஓமானில் 1932-ல் ஆட்சிக்கு வந்த சுல்தான் சயீத் பின் தைமூர் (Said bin Taimur) மிகவும் பிற்போக்கானவராக இருந்தார். நாட்டு மக்கள் ரேடியோ கேட்கக் கூடாது, வெயில் கண்ணாடிகள் (Sunglasses) அணியக் கூடாது, 30 நிமிடங்களுக்கு மேல் சாலையில் கூடிப் பேசக் கூடாது, இரவில் மின்சார விளக்குகளைப் பயன்படுத்தக் கூடாது, மேலைநாட்டு ஆடைகள் அல்லது காலணிகள் அணியக் கூடாது, சைக்கிளே ஓட்டகூடாது எனப் பல வினோதமான சட்டங்களைக் கொண்டுவந்தார்.
ஓமானில் கடும் அதிருப்தி உருவாக, பிரிட்டிஷார் தலையிட்டு மன்னரின் மகனையே தந்தைக்கு எதிராகப் புரட்சி செய்ய வைத்தார்கள். அவரும் தந்தையைப் பதவியிலிருந்து அகற்றிவிட்டு 1970-ல் மன்னரானார். ஆனால் ஏமனில் நடந்ததற்கு நேர்மாறாக, சுல்தான் கபூஸ் பின் சயீத் (Qaboos bin Said) மிகவும் தொலைநோக்கு பார்வையும் மக்கள் நலனும் கொண்ட தலைவராகச் செயல்பட்டார். ஓமானை நவீன யுகத்திற்குள் கொண்டுவந்தார்:
சுல்தான் கபூஸ் ஆயிரக்கணக்கான பள்ளிகளையும், நவீன மருத்துவமனைகளையும், சாலைகளையும் குறுகிய காலத்தில் கட்டினார். பெண்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாக்களிக்கும் உரிமையை வழங்கி, அரபு உலகில் பெண்களுக்கான உரிமைகளை முன்கூட்டியே வழங்கிய நாடாக ஓமானை மாற்றினார்.
ஓமானின் இபாதி (Ibadi) மரபை அடிப்படையாகக் கொண்டு, எந்த நாட்டோடும் பகைமை கொள்ளாமல் நடுநிலை வகிக்கும் வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடித்தார்.
இதன் மூலம் அமெரிக்கா-ஈரான் போன்ற வல்லரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் செய்யும் நம்பிக்கைக்குரிய நாடாக ஓமன் உருவெடுத்தது.
ஆனால் ஊழல் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து அகற்றியபின் மீண்டும் ஏமன் மூன்று துண்டுகளானது. ஷியா பிரிவின் ஹூத்திகள் ஈரான் ஆதரவுடன் அமெரிக்கா, சவூதி, இஸ்ரேல் மீது போர் தொடுக்க ஆரம்பித்தார்கள். சவூதி ஆதரவுப் பிரிவினர் மறுபுறம், முற்போக்கு தெற்கு ஏமனிகள் மற்றொருபுறம் என நாடே அல்லோலக்கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நல்ல ஆட்சியாளர் அமைந்தால் ஒரு நாடு என்னவாகும் என்பதற்கு உதாரணம் ஓமன்; ஊழல்வாதி ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என்பதற்கு உதாரணம் ஏமன். வரலாறு காட்டும் படிப்பினைகள்!

0 கருத்துகள்