Zohnerism — மக்களை ஏமாற்றுவதற்கு எப்போதும் பொய் சொல்ல வேண்டியதில்லை, தேர்ந்தெடுக்கப்பட்ட சில உண்மைகளே போதும்!!
ஒரு வகுப்பறை.
14 வயது சிறுவன் ஒருவன், தன்னுடைய Science Project-ஐ வகுப்புத் தோழர்களிடம் விளக்கிக் கொண்டிருக்கிறான்.அவன் கையில் ஒரு வேதிப்பொருளின் பெயர்.அவன் சொல்லும் விஷயம் அதைவிட அதிர்ச்சியானது.
“நாம் தினமும் பயன்படுத்தும் இந்த வேதிப்பொருள் மிகவும் ஆபத்தானது. இதைத் தடை செய்ய வேண்டும்!”
அந்த வேதிப்பொருளின் பெயர்?
Dihydrogen Monoxide.
பெயரைக் கேட்டாலே ஏதோ ஒரு பயங்கரமான Chemical போலத்தானே இருக்கிறது?
Nathan Zohner தனது presentation முழுவதும், அந்த வேதிப்பொருளால் ஏற்படும் ஆபத்துகளுக்கான அறிவியல்பூர்வமான ஆதாரங்களை ஒன்றன்பின் ஒன்றாக முன்வைத்தான்.
“சரி… அப்படி என்னதான் செய்கிறது இந்த Dihydrogen Monoxide?” அவன் சொன்ன விஷயங்கள்:
1. இது சூடான ஆவியாக இருக்கும் போது, மனித உடலில் பயங்கரமான தீக்காயங்களை ஏற்படுத்தும்.
2. உலோகங்களை அரித்து, துருப்பிடிக்கச் செய்யும்.
3. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் இதனால் உயிரிழக்கிறார்கள்.
4. இது புற்றுநோய்க் கட்டிகளிலும் காணப்படுகிறது. அமில மழையிலும் இருக்கிறது. பூமியில் இதுவில்லாத இடமே இல்லை.
5. இதை அதிகமாகக் குடித்தால், உடலில் நீர்ச்சத்து சமநிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம்.
6. இதை மட்டுமே சார்ந்து வாழ்ந்தால், இறுதியில் அது மனிதனையே கொன்றுவிடும்.
அவன் presentation-ஐ முடித்துவிட்டு வகுப்பினரைப் பார்த்துக் கேட்டான்:
“இப்படிப்பட்ட ஆபத்தான வேதிப்பொருளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்?” 50 மாணவர்களில்,
43 பேர் கையைத் தூக்கினார்கள்.
அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? ஆனால் இங்கேதான் உண்மையான திருப்பம் இருக்கிறது.அந்தப் பயங்கரமான வேதிப்பொருள்… தண்ணீர்!
ஆம்.
Dihydrogen Monoxide என்பது H₂O — தண்ணீர்தான்.
இரண்டு Hydrogen அணுக்களும், ஒரு Oxygen அணுவும் சேர்ந்த சேர்மம்.
நாம் தினமும் குடிக்கும் தண்ணீர்.
நாம் குளிக்கும் தண்ணீர்.
நம்மைச் சுற்றியிருக்கும் தண்ணீர்.
உண்மையில், மனித வாழ்க்கைக்கே அத்தியாவசியமான ஒன்று.
ஆனால் Nathan Zohner தண்ணீரைப் பற்றிச் சொன்ன விஷயங்கள்? அவை பெரும்பாலும் உண்மைதான்.
சூடான தண்ணீர் ஆவியாகும்போது தீக்காயத்தை ஏற்படுத்தும் — உண்மை.
தண்ணீர் சில சூழல்களில் உலோக அரிப்புக்கும் துருப்பிடிப்புக்கும் பங்களிக்கும் — உண்மை.
நீருடன் தொடர்புடைய விபத்துகள் மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற காரணங்களால் ஏராளமான மரணங்கள் ஏற்படுகின்றன — உண்மை.
புற்றுநோய் திசுக்களிலும் தண்ணீர் இருக்கிறது — உண்மை.
அமில மழையிலும் தண்ணீர் இருக்கிறது — உண்மை.
அதிகப்படியான தண்ணீரைக் குடிப்பது கூட உடலில் Sodium அளவை ஆபத்தான வகையில் குறைத்து water intoxication எனப்படும் நிலையை ஏற்படுத்தலாம் — உண்மை. மேலும், மனிதன் தண்ணீரைத் தவிர்த்து வாழ முடியாது என்பதும் உண்மை.
ஆனால் இத்தனை உண்மைகளையும் ஒன்றாகச் சேர்த்து வைத்தால், நமக்கு கிடைக்கும் முடிவு என்ன?
“தண்ணீர் ஒரு ஆபத்தான வேதிப்பொருள். எனவே அதைத் தடை செய்ய வேண்டும்.”
அதுதான் ஏமாற்றத்தின் நுணுக்கம்.
பொய் சொல்லாமல் எப்படி பொய்யான முடிவை உருவாக்குவது? Nathan Zohner தண்ணீரைப் பற்றிய உண்மைகளை மறைக்கவில்லை. அவன் செய்ததே வேறு.
அவனுக்குத் தேவையான உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்தான்.
அதோடு, அந்த உண்மைகள் ஏற்படுத்தும் பயத்தையும், மக்களின் அறிவியல் அறியாமையையும் பயன்படுத்தினான்.
தண்ணீர் உயிருக்கு அவசியம் என்ற உண்மையைச் சொல்லவில்லை. அளவு, சூழல், காரணம் போன்ற முக்கியமான பின்னணித் தகவல்களைச் சொல்லவில்லை.
ஒரு உண்மையை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் மிகப்பெரிய முடிவை உருவாக்கினான்.
இதுதான் இந்தச் சம்பவத்தின் மிக முக்கியமான பாடம். ஒரு தகவல் உண்மையானது என்பதால், அதிலிருந்து எடுக்கப்படும் முடிவும் உண்மையாகிவிடாது.
James K. Glassman என்பவர் Nathan Zohner-ன் இந்த முயற்சியை அடிப்படையாகக் கொண்டு “Zohnerism” என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அதன் அடிப்படை கருத்து மிகவும் முக்கியமானது:
மக்களை ஏமாற்றுவதற்கு எப்போதும் பொய் சொல்ல வேண்டியதில்லை. அறிவியல் மற்றும் கணிதத்தைப் பற்றிய போதுமான புரிதல் இல்லாதவர்களிடம், தேர்ந்தெடுக்கப்பட்ட சில உண்மையான தகவல்களை மட்டும் முன்வைத்து, தவறான அல்லது வழிதவறச் செய்யும் ஒரு முடிவை நம்ப வைக்க முடியும்.
அதுதான் Zohnerism. இன்றைய சமூக வலைதளங்களில் நடப்பதும் இதுவே. இது இன்னும் ஆபத்தானது.
இன்று ஒரு WhatsApp message,
ஒரு Instagram Reel,
ஒரு YouTube video,
ஒரு அரசியல்வாதியின் பேச்சு,
ஒரு conspiracy theory,
ஒரு sensational headline,
எதுவாக இருந்தாலும், நாம் ஒரு விஷயத்தைப் பார்க்கும்போது முதலில் கேட்க வேண்டிய கேள்வி:
“இது உண்மையா?” என்பது மட்டும் அல்ல. அதற்கு அடுத்த கேள்விகள்தான் இன்னும் முக்கியமானவை:
>>“இதில் சொல்லப்படாத உண்மை என்ன?”
>>“இந்தத் தகவல் எந்தச் சூழலில் சொல்லப்படுகிறது?”
>>“இது முழுமையான தகவலா, அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலா?”
>>“இந்த உண்மையிலிருந்து இப்படியொரு முடிவுக்கு வருவது நியாயமா?”
ஏனென்றால்…பொய்யை அடையாளம் காண்பது சில நேரங்களில் எளிது. ஆனால், உண்மையைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி உருவாக்கப்படும் பொய்யை அடையாளம் காண்பதுதான் கடினம்.
ஒருவர் நமக்கு பத்து உண்மைகளைச் சொன்னாலும், அவர் சொல்லாமல் விட்டிருக்கும் பதினொன்றாவது உண்மை நம்முடைய முடிவையே மாற்றிவிடலாம்.
அதனால் அடுத்த முறை ஒரு தகவல் நம்மை பயமுறுத்தும்போதோ, கோபப்படுத்தும்போதோ, பரபரப்பாக்கும்போதோ…
சற்று நின்று சிந்திக்கலாம். தகவலை மட்டும் நம்பாமல், தகவலின் பின்னணியையும் பார்க்கலாம். ஒரு பக்கத்தை மட்டும் கேட்காமல்,மறுபக்கத்தையும் தேடிப் பார்க்கலாம்,
ஏனென்றால்…
உண்மைகளைத் தேர்ந்தெடுத்து அடுக்கி வைத்தால், பொய்யையும் உண்மையைப் போலவே காட்ட முடியும்!!

0 கருத்துகள்