Ad Code

Ticker

6/recent/ticker-posts

புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள்

 தமிழ் அறிவோம்!
  

" புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் "

புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள்


இராமாயணக் காப்பியத்தில் இராமன் நிகழ்த்திய முதல் அசுர வதம் தாடகை வதம் ஆகும். விசுவாமித்திர முனிவரின் வேள்வியைக் காக்க, ஆயிரம் யானை பலம் கொண்ட கொடிய அரக்கியான தாடகையை இராமன் தன் வில்லால் அம்பு எய்து அழித்த நிகழ்வு இதுவாகும். விசுவாமித்திர முனிவர் தவம் செய்து நடத்திய வேள்வியை, தாடகையும் அவளது மகன்களான மாரீசன், சுபாகு போன்ற அரக்கர்களும் தொடர்ந்து தடுத்துத் தொல்லை கொடுத்தனர். அவர்களை வீழ்த்த இராமனின் உதவியை நாடினார் விசுவாமித்திரர். தாடகை ஒரு பெண் என்பதால் அவளைக் கொல்ல இராமன் முதலில் தயங்கினான். ஆனால், முனிவர்கள் மற்றும் உலகத்தின் நன்மைக்காக அரக்க குணம்கொண்ட  பெண்ணைக் கொல்வதில் தவறில்லை என்று விசுவாமித்திரர் எடுத்துரைத்தார். முனிவரின் கட்டளையை ஏற்று, இராமன் தன் வில்லில் நாணேற்றி அம்பு எய்து தாடகையை வீழ்த்தினான். 


இராமன் விட்ட அம்பானது தாடகையின் நெஞ்சில் தங்காது ஊடுருவி, வெளியே விரைந்து போனதைச் சொல்ல வந்த கம்பர், கல்லாத கீழ்மக்களுக்கு நல்லோர் சொன்ன சொல் காதில் ஏறாமல் படுவேகமாகச் செல்வது போல் சென்றதாகப் பாடுகின்றார். "பெரியோர் சொன்ன அறிவுரையை, இந்தக் காதில் வாங்கி, அக்கணமே, அந்தக் காதில் விட்டுவிடுவான் கீழ்மகன்" என்பதை விளக்குகிறார். 


 "சொல்ஒக்கும் கடிய வேகச் சுடுசரம், கரிய செம்மல்,

அல்ஒக்கும் நிறத்தினாள் மேல்விடுதலும், வயிரக் குன்றக்

கல்ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்

புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள்எனப் போயிற்று அன்றே." 


(கம்பர், கம்பராமாயணம், பாலகாண்டம், தாடகை வதைப் படலம் - 49 )


 "நிறைமொழி மாந்தரின் சாபச் சொற்களை ஒத்த கடிய வேகமுடைய ஒரு சுடு சரத்தை, கரிய நிறமும் அழகும் உடைய  இராமன், இருள்போன்ற கரிய நிறத்தை உடைய தாடகையின் மீது செலுத்தி விட, அந்த அம்பு, வைரம் பாய்ந்த கல்போன்ற அத் தாடகையின் நெஞ்சில் தைத்துத் தங்கியிராமல், அவளது நெஞ்சில் பாய்ந்து, பின் முதுகின் புறமாகக் கழன்று, கல்வியறிவு இல்லாத கீழ்மக்களுக்கு நல்லவர்கள் சொன்ன நல்ல பொருளைப் போல ஓடிப் போய்விட்டது. கல்வியறிவு இல்லாத கீழோருக்கு, அறிவாற்றல் மிக்க  மேலோர் கூறும் அறம், உள்ளத்தில் நிலை பெறாது ஒரு காதில் புகுந்து மறு காது வழியாகப் போவதுபோல, தாடகையின் முதுகுப்புறம் இராமனது அம்பு விரைந்து சென்றது " என்று நயமாக விளக்குகிறார் கம்பர். 


இவண் 

ஆ.தி.பகலன்,  

நெறியாளர்,  

சதுரைத் திருக்குறள் பேரவை,  

சதுரங்கப்பட்டினம்,  

செங்கல்பட்டு மாவட்டம்.  

(அலைப்பேசி - 9965414583)

கருத்துரையிடுக

0 கருத்துகள்