தமிழ் அறிவோம்!
" பாரெங்கும் பசுமை செய்குவோம் "
மரங்களைக் கடவுளாகப் போற்றி வணங்கியவர்கள் தமிழர்கள். மரங்கள் இல்லையேல் மனிதர்கள் இல்லை. அவ்வளவு ஏன் இந்த மண்ணுலகமே இல்லை என்று தங்கள் அறிவால் ஆராய்ந்து அறிந்தார்கள். இந்த மண்ணுலகைப் பாதுகாக்க வேண்டுமெனில் முதலில் மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணினார்கள். அதற்காக அவர்கள் கையாண்ட வழிதான் " கடவுள் கோட்பாடு " . மரங்களே கடவுளின் வடிவங்கள் என்றார்கள். அதற்கு அடையாளமாகவே மரங்களின் கீழே சிலைகளை வைத்து வழிபட்டார்கள். மரங்கள் கடவுளின் இருப்பிடமானது. அதனால்தான் மரங்கள் இந்த உலகில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன. கடவுள் மனிதர்களைக் காப்பாற்றினாரோ இல்லையே மரங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். ஆம், மரத்தை வெட்ட கத்தியோடு சென்ற ஒருவன் மரத்தின் கீழே இருக்கும் கடவுள் சிலையைப் பார்க்கிறான். உடனே கத்தியைக் கீழே போட்டுவிட்டு கையெடுத்துக் கும்பிடுகிறான். அதனால் உயிர் பிழைத்தது அந்த மரம். இப்படித்தான் காலங்காலமாகக் கடவுள் பெயரால் மரங்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. மரத்தின் கீழே கடவுள் சிலை வைக்கப்பட்டால் அந்த மரம் புனிதமானது என்பது மனிதர்கள் மட்டுமல்ல, பறவைகளும் உணர்ந்து இருக்கின்றன என்பதை அழகாக எடுத்துக்காட்டுகிறது ஓர் அகநானூற்றுப் பாடல்.
ஓர் ஆண் பறவையும் , ஒரு பெண் பறவையும் ஒன்று சேர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று முட்களையும் , சிறு குச்சிகளையும் கொண்டு வந்து ஒரு மரத்தின் கிளையில் கூடு கட்டின. பின்புதான் அந்தப் பறவைகளுக்குத் தெரிந்தது அந்த மரத்தின் கீழே கடவுள் சிலை வைத்திருக்கிறார்கள் என்று. அது கடவுள் மரம் என்பதால் பெண் பறவை தன் துணையுடன் சேர்வதைத் தவிர்த்ததாம்.
" கடவுள் மரத்த முள்மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறுகரும் பேடை "
( சாகலாசனார், அகநானூறு - 270)
தலைவனைச் சேர முடியாமல் தலைவி பிரிவால் ஏங்குகிறாள். அந்த ஏக்கம் எப்படி இருக்கிறது தெரியுமா?
கடவுள் சிலை இருக்கும் மரத்தில் கூடு கட்டி வாழும் பெண் பறவை தன் இணையுடன் புணர முடியாமல் ஏங்குவதுபோல் இருக்கிறதாம். கடவுள் மரம் புனிதமானது. அதில் இருந்துகொண்டு புணர்தல் கூடாது என்று தன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறதாம் அந்தப் பறவைகள். அந்தப் பறவைகளுக்கு எவ்வளவு உயர்ந்த உள்ளம்? .பறவைகள் உயர்ந்த உள்ளத்தோடு இருப்பதால்தான் உலக உயிரினங்களில் அவை மட்டுமே உயர்ந்த இடத்தில் இருக்கின்றன. ஆம், பறவைகள் மட்டுமே உயர உயரப் பறக்கின்றன .
இந்த உலகில் உள்ள பெரும்பான்மை மரங்கள் பறவைகளின் எச்சங்களால் விழுந்து எழுந்தவையே. பறவைகள் இல்லையேல் இன்று பார் முழுவதும் மரங்கள் இல்லை. புகைப்படங்களுக்காக மட்டுமே மனிதர்கள் மரம் நடும் விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பறவைகள் மட்டுமே புவியைக் காப்பதற்காக மரங்களை நடுகின்றன. பறவைகள் செய்யும் பணிகளில் பாதியைக் கூட மனிதர்கள் செய்வதில்லை. அதன் விளைவைத்தான் மனிதர்கள் இப்போது விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆம், புவி வெப்பமயமாதலில் சிக்கி மனிதர்கள் புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் .இதிலிருந்து தப்பிக்க மனிதர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இந்தப் புவியில் 70 விழுக்காடு நீரும், 30 விழுக்காடு நிலமும் இருப்பது போல, நிலத்தில் 70 விழுக்காடு மரங்களும் ( காடுகள்) , 30 விழுக்காடு மனிதர்களுக்கான வாழ்விடமும் இருக்குமாறு இந்தப் புவியை மாற்றி அமைக்க வேண்டும். இந்தப் புவியில் மூன்று பங்கு நிலத்தில் மரங்களும், ஒரு பங்கு நிலத்தில் மனிதர்களும் வாழும் நிலை எப்போது உண்டாகிறதோ, அப்போதுதான் இந்த மண்ணுலகம் பொன்னுலகமாய் மாறும். அதற்கு இந்தப் பாரெங்கும் பசுமை செய்ய வேண்டும். ஆம் மரக்கன்று நடுவதை நம் கடமையாக்கிக் கொள்ள வேண்டும்.
" உறவு வாழ சுற்றத்தைக் காப்போம்!
உலகம் வாழ சுற்றுச் சூழலைக் காப்போம்! "
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
(அலைப்பேசி - 9965414583) .

0 கருத்துகள்