தமிழ் அறிவோம்!
"அறம் பத்து"
இந்த உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்ல நடத்தைகளின் தொகுப்பே " அறம் " எனப்படுகிறது. ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் . எப்படி வாழ வேண்டும் என்ற ஒழுக்க நெறியையே " அறம் " என்பர். தற்காலத்தில் 'அறம்' என்ற தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தாமல் ' நீதி ' என்ற பிறமொழிச் சொல்லைப் பயன்படுத்தி வருவது வருத்தத்திற்குரியது ஆகும். எவையெல்லாம் அறம் என்பதை அறநெறிச்சாரம் பட்டியலிட்டு உள்ளதை இங்குக் காண்போம்.
"மெய்ம்மை, பொறையுடைமை, மேன்மை, தவம்,அடக்கம்,
செம்மை,ஒன்று இன்மை, துறவுடைமை - நன்மை
திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன
அறம்பத்தும் ஆன்ற குணம் . "
( முனைப்பாடியார், அறநெறிச்சாரம் - 12)
1.உண்மையைப் பேச வேண்டும். உண்மையாய் வாழ வேண்டும்.
2.எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
3.நாம் எப்போதும் பெருமை தரும் செயல்களையே செய்ய வேண்டும்.
4.உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தக் காரணமாக இருக்கும் தவத்தை மேற்கொள்ள வேண்டும்.
5.எப்போதும் அடக்கத்தோடு இருக்க வேண்டும். அடக்கமே நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.
6.எந்தவொரு பக்கமும் சாராத சார்பற்ற நிலையையே "நடுவுநிலைமை" என்பர். அந்த நடுவுநிலைமையைக் கடைப்பிடித்து வாழ வேண்டும்.
7.தனக்கென ஒன்றும் இல்லாது பொதுநலனுக்காக உழைத்து வாழ வேண்டும். பொதுவுடைமை நோக்கில் வாழ வேண்டும்.
8.வாழ்க்கையில் எதன் மீதும் பற்றின்றி வாழ வேண்டும். உலக பற்றுகள் அனைத்தையும் விட்டொழிக்க வேண்டும்.
9.நல்லன செய்தல் வேண்டும். நற்செயல்களைச் செய்யவே நாம் பிறந்தோம் என்ற உணர்வு நமக்குள் எப்போதும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மணித்துளியும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதையே கொள்கையாகக் கொண்டு, நாம் எல்லோர்க்காகவும் வாழ வேண்டும்.
10.மாறுபடாத நோன்புகளை மேற்கொள்ளுதல் வேண்டும் .உடல் வலிமைபெற நோன்பு மிகவும் தேவையான ஒன்றாகும்.
இந்தப் பத்தும்தான் மனிதன் செய்ய வேண்டிய அறங்களாகும். இவை அனைத்தையும் செய்தால் போதும். நம் வாழ்க்கை வளமாகும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)
0 கருத்துகள்