தமிழ் அறிவோம்!
" உத்தமன் (மேலானவன்) ஆகுக "
சென்னையில் வள்ளலார் வாழ்ந்தபோது நாள்தோறும் திருவொற்றியூர் கோவிலுக்கு நெல்லிக்காய் பண்டாரத்தெரு வழியாக செல்வது வழக்கம்.
திருவொற்றியூர் செல்லும் கோவில் (சந்நிதி) தெருவில் குடித்தனம் இல்லாத ஒரு வீட்டின் திண்ணையில் *தோபா ( திகம்பர ) சுவாமிகள்* என்பவர் ஆடை அணியாமல் அமர்ந்து இருப்பார். அவரை "ஆடையணியாத் துறவி " என்று மக்கள் அழைத்தனர்.
அந்தக் கோவில் தெருவில் போவோர் வருவோர்களை எல்லாம் மனிதர்களாக நினைக்காமல் அவர்களின் குணத்திற்குத் தகுந்தவாறு விலங்குகளின் பெயரை வைத்து அழைப்பார். " அதோ மாடு போகிறது , கழுதை போகிறது , நாய் போகிறது, நரி போகிறது , குரங்கு போகிறது." என்று விலங்குகளின் பெயரை வைத்து சொல்லிக்கொண்டு இருப்பது அவருடைய வழக்கம். மக்கள் அவரை பித்தன் (பைத்தியம்) என நினைத்துக்கொண்டு அவர் பேச்சை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தனர். அவர் பித்தன் அல்ல .அதுதான் துறவியின் எண்ணம் என்பதை மக்கள் உணரவில்லை. மனிதர்கள் முன் ஆடை மிகவும் தேவை. அவர் கண்களுக்கு எவரும் மனிதர்களாக தோன்றவில்லை. விலங்குகளாகவே தோன்றினார்கள். ஆதலால் அந்த மனித விலங்குகளின் முன்னால் ஆடை அணிந்துகொள்ள தேவை இல்லை என்று எண்ணிக்கொண்டு அவர் ஆடையின்றி இருந்துள்ளார்.
எப்போதும் நெல்லிக்காய் பண்டாரத்தெரு வழியாக செல்லும் வள்ளலார் , அன்று அத்தெருவில் ஏதோ ஓர் இறப்பு நடந்துள்ளதால், வழக்கத்திற்கு மாறாக கோவில் தெரு வழியாக
திருவொற்றியூர் செல்ல விரும்பினார். அன்று அந்தத் தெருவில் புதியதாக வந்த வள்ளலாரைக் கண்ட தோபா சுவாமிகள் இதோ "*ஒர் உத்தம* *மனிதர்* வருகிறார் "என்று கூறியவாறே கைகளால் மெய்யைப் (உடல் உறுப்புகளைப்) பொத்திக்கொண்டார். அங்குள்ள தூண் மறைவில் ஒதுங்கினார்.
உத்தம மனிதரான வள்ளலார், அவர் அருகில் சென்று அவரை அழைத்து தான் மேல் போர்த்தியிருந்த துணியைக் கொடுத்து அணிந்துகொள்ள சொல்கிறார். சிறிது நேரம் அவருக்கு அறிவுரை வழங்கினார். நீங்கள் இருக்க வேண்டிய இடம் இதுவன்று. வேறு எங்காவது சென்று தனிமையில் இருந்து இறை சிந்தனையுடன் வாழுங்கள் " என்று கூறினார். அதன்பின் வள்ளலாரிடம் அருள் பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார் தோபா சுவாமிகள்.
இதைக் கண்டதும் மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். இதுவரை இவரை நாம் பித்தன் என்று தவறாக எண்ணிவிட்டோம். இவர் பித்தன் இல்லை. சித்தன் ( மெய்யறிவு பெற்றவர்) . இதுநாள்வரை இவர் உண்மையான மனிதர்களைத் தேடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்படி யாரும் இவர் கண்ணில் அகப்படவில்லை. அதனால்தான் தன் கண்ணில்பட்ட மனிதர்களின் உண்மை நிலையைக் கண்டறிந்து அதற்கேற்ப விலங்குகளின் பெயர்களை வைத்து அழைத்திருக்கிறார். வள்ளல் பெருமானைப் பார்த்ததும் அவருடைய பேராற்றலையும், உயிரிரக்கம் என்னும் உயர்ந்த பண்பையும் தன் மெய்யுணர்வால் கண்டு , " இதோ ஓர் உத்தம மனிதர் வருகிறார் " என்று கூறியிருக்கிறார் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள். வள்ளல் பெருமான் உத்தம மனிதர் ஆனதுபோல , நாமும் உத்தமர்களாக மாற வேண்டாமா? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கான வழியை எளிய முறையில் " அருட்பெருஞ்ஜோதி அகவலின் " இறுதியில் கொடுத்திருக்கிறார் வள்ளல் பெருமான்.
"உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலகநீ அடைந்து விலக்குக மகிழ்க !
சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை "
உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் அடைகின்ற துன்பங்களை நாம் போக்க வேண்டும். அதற்கு உயிர்க்கொலையைத் தவிர்க்க வேண்டும். தடுக்க வேண்டும். " உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் " என்பதை உணர வேண்டும். அதற்கு சமரச சுத்த சன்மார்க்கத்தில் நாம் இணைய வேண்டும். அப்போதுதான் நாம் உத்தமர்களாக மாற முடியும். மரணம் இல்லாப் பெருவாழ்வைக் காண முடியும் " என்கிறார் வள்ளல் பெருமான்.
நாம் அனைவரும் உத்தமர்களாக வாழ உயிர்க்கொலையைத் தவிர்ப்போம். சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் உயர்ந்த நெறியில் இணைவோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்