தமிழ் அறிவோம்!
" தோள்கண்டார் தோளே கண்டார் "
இராமன் மிதிலை நகருக்குள் செல்கிறான். வீதியெங்கும் கூடியிருந்த மகளிர் யாவரும் இராமனின் வடிவழகினை வியந்து போற்றினர். இராமனின் திருத்தோள்களைக் கண்ணுற்ற கன்னியர் அதனின்றும் பார்வையை விலக்க இயலாது அதன் அழகிலேயே மயங்கிக் கிடந்தனர். சிலர் தாள்களைக் (திருவடிகளைக் ) கண்டு மயங்கினர் . கடவுளின் ஒவ்வொரு நிலையை மட்டும் காணும் சமயவாதிகள்போல் , இராமனை யாருமே முழுமையாகக் காண இயலாமல் கலங்கினார்கள்.
"தோள்கண்டார். தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார். தாளே கண்டார்; தடக்கை கண்டாரும். அஃதே;
வாள்கொண்ட கண்ணார் யாரே. வடிவினை முடியக் கண்டார்?-
ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்."
( கம்பர், பால காண்டம் , கம்பராமாயணம் - 1081)
"இராமபிரானது தோள் அழகைக் கண்டவர்கள் (அவ்வழகை முற்றும்
கண்டுகளித்து முடியாமையால் அதனால் பிற உறுப்புகளின் அழகைப் பார்க்க இயலாமையால்) அத்தோள் அழகினையே கண்ட வண்ணம்
இருந்தார்கள்; வீரக் கழல்கள் அணிந்த தாமரைப் பூக்கள் போன்ற
(இராமனது) திருவடிகளைப் பார்த்தவர்கள் (வேறு எவற்றையும் பார்க்காது)
அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்; இராமனது பெரிய கைகளின் அழகைப்
பார்த்தவர்களும் அவ்வாறே பிறவற்றை நோக்காது அவற்றையே
பார்த்துக்கொண்டிருந்தார்கள்; வாள் போன்ற
கண்களையுடைய பெண்கள் , இராமனது வடிவழகினை
முழுவதும் பார்த்தவர்கள் யாவர் உளர். ஒருவருமில்லை. தமக்குத்
தாமே ஒவ்வொரு முறையினைக் கொண்ட சமயங்கள். பிறசமயங்கள்
கூறும் இறை வடிவங்களை நோக்காது. தம் எண்ணிய வடிவங்களையே
நோக்கியவாறு இருப்பதுபோல இராமனைக் காண வந்த மகளிர்
(இராமனின்) உறுப்புகள் பலவும் நோக்காது ஓர் உறுப்பின்
அழகிலேயே ஊன்றி நின்று விட்டனராம் . அப்பேர்ப்பட்ட. பேரழகன்தான் இராமன் " என்று கூறுகிறார் கம்பர்.வழக்கமாக எல்லாக் கவிஞர்களும் பெண்ணையே பேரழகியாகக் காட்டி கவிதை பாடுவர். ஆனால், கவிச்சக்கரவர்த்தி கம்பரோ சற்று வேறுபட்டு நின்று ஓர் ஆணின் அழகைக் கவிநயத்தோடு பாடி ஆண்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார். கம்பர் கம்பர்தான்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)
0 கருத்துகள்