கல்வியால் எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்பதும், அறிவுரை சொன்னால் அறியாமையில் இருப்பவனும் அறிஞன் ஆகிவிடுவான் என்பதும் ஒருவகை நம்பிக்கைதானே தவிர அது உண்மையல்ல. பள்ளியும் , பல்கலைக்கழகமும் இல்லாதக் காலகட்டத்தில் பட்டறிவும் இருந்தது. பகுத்தறிவும் இருந்தது. இன்றைய காலகட்டத்தில் மெத்தப் படித்த மேதாவிகளிடம் கூட பாதியறிவுதான் இருக்கிறது. பட்டறிவும் இல்லை. பகுத்தறிவும் இல்லை.அறிவு என்பது கட்டடத்திற்குள் கட்டமைக்கப் படுவதல்ல. அது காலத்தால் கட்டமைக்கப்படுவது. அதனால்தான் அறிவு என்பதைப் பிறவிக்குணம் என்றார்கள் பெரியோர்கள்.
"கற்பூரப் பாத்திகட்டிக் கத்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன்குணத்தைப் பொருந்தக் காட்டும்
சொற்பேதை யருக்கறிவிங் கினிதாக வருமெனவே சொல்லி னாலும்
நற்போதம் வாராதங் கவர்குணமே மேலாக நடக்கும் தானே "
( விவேக சிந்தாமணி - 88)
மணமிக்கக் கற்பூரத்தால் பாத்தி கட்டி , மான் வயிற்றில் பிறக்கும் மணப்பொருளான கத்தூரியை எருவாகப் போட்டு , மணம் கமழும் நீரைப் பாய்ச்சி , அழகாக வெங்காயத்தை நட்டு வளர்த்தாலும் , வெங்காயத்தில் இருந்து வரும் கெட்ட நாற்றம் போகுமா? போகாது. எந்தவொரு வாசனைப் பொருளுமே வெங்காயத்தின் இயல்பான கெட்ட நாற்றத்தைப் போக்காது. அதன் கெட்ட நாற்றம் அப்படியேதான் இருக்கும்.
அதுபோலவே ,
மூடர்களுக்கு அறிவு வரும் எனக் கருதி இனிதாக அறிவுரைகளை எத்தனை முறை சொன்னாலும், அவர்களுக்கு நல்லறிவு வருவதில்லை. அவர்களது இயற்கைக் குணமாகிய மூடத்தனமே மிகுதிப்பட்டு வரும்.
பிறவிக்குணம் பிறவிக்குணம்தான். அதை அறிவுரையால் மாற்ற முடியும் என்று நினைப்பது நம் அறியாமையின் வெளிப்பாடே ஆகும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்