Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! "தலைத்தீபாவளி "

 




திருமணம் செய்துகொண்ட ஆண்களின்  வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருப்பது "தலைத்தீபாவளி ".

மருமகனுக்கு மாமனார் அளிக்கும் மாபெரும் விருந்தல்லவா?  அதை எப்படி மறக்க முடியும்?

தமிழர்களின் முதன்மையான விழா "பொங்கல் விழா ".  அப்படிப்பட்ட பொங்கல் விழாவை முன்னிலைப்படுத்தி,    தலைப்பொங்கல் என்று ஏன்  கொண்டாடுவதில்லை?

தீபாவளி தமிழர்களின்  விழாவாக இல்லாதபோது தலைத்தீபாவளி கொண்டாடும் வழக்கம் தமிழர்களிடம் ஏற்பட்டது எப்படி?

அனைத்து வினாக்களுக்குமான விடையை இப்போது அறிந்து கொள்வோம்.  


"தை பிறந்தால் வழி பிறக்கும் "  என்பார்கள்.  தை பிறந்தால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் என்ற வழி பிறக்கும்.   ஆம்,  பெண்பார்க்கும் படலத்தைத் தொடங்குவார்கள். ஏறுதழுவுதல்,  இளவட்டக்கல் தூக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி வீரமுள்ள ஆண்மகனைத் தேடுவார்கள். தாங்கள் எதிர்பார்த்த  மணமகன்   கிடைத்ததும்,  திருமணம் செய்வதற்கான பணிகளைத் தொடங்குவார்கள். இவையாவும் வைகாசித் திங்களில் நிறைவுபெறும். தமிழர்களைப் பொறுத்தவரை , திருமண நிகழ்வுகள் எல்லாமே தைத்திங்களில் தொடங்கி வைகாசித் திங்களில் முடிவதாகவே இருக்கும். பெரும்பாலான திருமணங்கள் வைகாசித் திங்களில்தான் நடைபெறும் . காரணம் என்ன தெரியுமா?  ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு  திங்கள்களில்  நிலத்தை உழுது பயிர் செய்வார்கள். உழவுப் பணிகள் ஏராளமாக  இருக்கும்.  தைத்திங்கள் முதல் அடுத்த ஆறு திங்களும் அவர்களுக்கு உழவுப் பணிகள் பெரும்பாலும் இருக்காது. அதனால் விழாக்கள், இல்ல நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்துவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். அதனால்தான் திருமண நிகழ்வுகளை வைகாசியில் வைத்தார்கள். 


" வைகாசி மாசத்துல 

பந்தல் ஒண்ணு போட்டு ரெண்டு 

வாழமரம் கட்டப் போறன்டி " என்று வைகாசித் திங்களையும் , திருமணத்தையும் தொடர்புபடுத்தி பல திரைப்படப் பாடல்கள் வந்துள்ளதைப் பார்த்திருப்போம். வைகாசியில் திருமணம் முடித்து பெண்ணை மணமகன் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனி முடிந்து ஆடித்திங்கள்  பிறந்ததும் , பெண் வீட்டார் ஆண் வீட்டிற்குச் சென்று ஆடி சீர் வரிசை வைத்து பெண்ணை அழைத்து வருவார்கள். ஆடித்திங்கள் முடிந்ததும் பெண்ணை அவளது கணவன் வீட்டுக்கு முறைப்படி அனுப்பி வைப்பார்கள்.  திருமணம் ஆன பெண்,  ஆடித்திங்களில் கருவுற்றால்,  பத்துத்திங்கள் கழித்துச் சித்திரையில் குழந்தையைப் பெற்றெடுப்பாள். சித்திரைத் திங்களில்தான்    கத்திரி வெயில் வரும்.   மிகுந்த வெப்பத்தால் தாயும் சேயும் பாதிக்கப்படுவார்கள்.  அதற்காகவே புதுமண இணையர்கள் ஆடித்திங்களில் இணைவதைத் தவிர்க்கச் சொன்னார்கள். தடுக்க சொன்னார்கள். ஆடியில் பிரிந்து  தவிப்பதைப் தவிர்ப்பதற்காகவே  சிலர்,  ஆவணித் திங்களில் திருமணத்தை வைத்துக் கொள்வார்கள் . 


ஆடித்திங்கள் முடிந்ததும், கணவன் வீட்டுக்குச் செல்லும் பெண்,  தன் தாய்வீட்டுக்கு வர வேண்டும் என்றால்,  ஏதேனும் விழாவைக் காரணம் காட்டிதான் வரவேண்டும். தமிழர்களில் ஒரே விழா பொங்கல் விழாதான். பொங்கல்   விழாவோ ஆறுதிங்கள் கழித்துதான் வரும். அதுவரை காத்திருக்க முடியாதல்லவா? பொங்கல் விழா வருவதற்குள் இடையில்  தன் தாய் வீட்டுக்கு ஒரு பெண்  சென்றுவர  இடைச்செருகலாக உருவாக்கப்பட்டதுதான் " தலைத்தீபாவளி "  


இது மணமகளின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட விழாவாகும். ஆனால்,  மணமகனுக்கு நன்மை செய்யும் விழாவாகவும் ,  மணமகனுக்குச் "சிறப்பு சீர் வரிசை " செய்யும் விழாவாகவும் இதை  மாற்றிவிட்டார்கள் . திருமணத்தின்போது வாங்கிய சீர்வரிசை போதாதென்று, மாமனாரிடம் இருக்கும் மிச்சமீதி செல்வத்தையும் சுரண்டுவதற்காகவே இந்தத் தலைத்தீபாவளியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். "தலைத்தீபாவளி "  அன்று  புத்தாடை, இனிப்புகள், மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகள் எல்லாம் வாங்கிக் கொடுத்து,  மருமகனை மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைக்க,  மாமனார் கடனில் மூழ்க வேண்டும்.  பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களை முழுநேரக் கடன்காரர்களாக்கவே " தலைத்தீபாவளி " என்ற திருநாளை நம்மண்ணில் திணித்திருக்கிறார்கள் வந்தேறிகள். 


மகன் ஒருவன் தன் தாயிடம் சென்று,  " அம்மா!  தலைத்தீபாவளியைக் கொண்டாட  என் மாமனார் என்னை அழைத்துள்ளார். நான் சென்று வரட்டுமா? நான் அங்கு எத்தனை நாள்  தங்க வேண்டும்? " என்று கேட்டான். " சாப்பாட்டில் உன் முகம் தெரிவதற்கு முன்னரே நீ இங்கு வந்துவிட வேண்டும் " என்றார் அவன் தாய்.   " சாப்பாட்டில் எப்படி முகம் தெரியும்? என்று கேட்டான் மகன். " நீ விருந்துக்குப் போ.  போகப் போக உனக்கே புரியும் " என்றார் அவன் தாய் அங்கும் இங்கும் கடனை வாங்கி . 

தலைத்தீபாவளி அன்று மருமகனுக்கு மாபெரும் விருந்து வைத்தார் மாமனார்.  கறிசோறு விருந்தில் எல்லாக்  கவலைகளையும் மறந்தான். அப்படியே வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தையும்  மறந்தான். முதல் வாரம் முழுவதும் வாழையிலையில் வயிறார கறிசோறு சாப்பிட்டான். இரண்டாவது வாரத்தில்தான் அவன்  இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினான். மாமனாரின் கனவில்  கடன்காரன்  வர வாழையிலையும் , கறிசோறும் காணாமல் போனது.   தட்டில் சோறு வைக்கப்பட்டது. குழம்பும்,  கொஞ்சம் கூட்டும் வைக்கப்பட்டதைக் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்தான் மருமகன். மூன்றாவது வாரம் வந்தது. பெரிய கிண்ணத்தில் பழைய சோறு வந்தது. முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கிணற்றை எட்டிப் பார்ப்பது போல,  கிண்ணத்தை எட்டிப் பார்த்தான். அதில் ( பழைய சோறுடன் இருந்த தண்ணீரில்)  அவன் முகம் தெரிந்தது. அப்போதுதான் அவன் அம்மா சொன்ன சொற்கள் அவன்  நினைவுக்கு வந்தது. " மகனே! சாப்பாட்டில் உன் முகம் தெரிவதற்குள் வந்துவிட வேண்டும்  " என்றாரே அது இதுதானோ? என்று சிந்தித்தான். இப்படி எத்தனையோ மருமகன்கள் தங்கள் மாமனார் வீட்டில் வயிறார சாப்பிட்டுவிட்டு,  மாமனாரை வாழ்நாள் முழுவதும் கடன்காரர்களாக்கி விடுகிறார்கள். 

 

தீபாவளியைப் பற்றியும்,  தலைத்தீபாவளியைப் பற்றியும் எந்த இலக்கியங்களிலும் சான்றுகள் இல்லை.  ஏனென்றால் அது தமிழர் கொண்டாடும் விழா இல்லை. மற்றவர்களுக்குக்  கொடுத்து மகிழவே தமிழர்கள் விழாக்களை உருவாக்கினார்கள். மற்றவர்களிடம் அடித்துப் பிடுங்குவதற்கு எந்த விழாக்களையும் தமிழர்கள் உருவாக்க மாட்டார்கள். ஆகையால் , மாமனார்களுக்கெல்லாம் தலைவலியை உண்டாக்கும் " தலைத்தீபாவளி " விழாவை இம்மண்ணை விட்டே விரட்டுவோம். 


அதற்குப் பதிலாக "தலைப்பொங்கல் "  கொண்டாடுவோம். தமிழர்களின் தன்னிகரற்ற விழா எதுவென்றால் அது பொங்கல் விழாதான். அந்தப் பொங்கலைப் போற்றும் வகையில் திருமணமான புது இணையர்கள் சந்திக்கும் முதல் பொங்கலை "தலைப்பொங்கல் " என்று கொண்டாடுவோம்.  அன்று மாமனார் மருமகனுக்குச் சீர் செய்யக் கூடாது. மருமகன்தான் மாமனார்க்குச் சீர் செய்ய வேண்டும். மருமகன் தன் மாமனாரைப் பார்த்து,  " மாமா குற்றம் குறையில்லாத குணமுள்ள பெண்ணைப் பெற்று,  நன்றாக வளர்த்து எனக்கு வாழ்க்கைத்துணையாக கொடுத்திருக்கிறீர்கள். அதனால்தான் நான் இன்று மகிழ்ச்சியாக வாழ்கிறேன். அதற்காக நான் தங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இனி நான் உங்கள் மருமகன் மட்டுமல்ல. இன்னொரு மகன் " என்று  சொல்ல வேண்டும்.   ஒரு மகன் தன் தாய்தந்தையருக்குச் செய்வதைப் போல புத்தாடை, இனிப்புகள்,  தங்க நகைகள் (  மோதிரம்,  தங்கச்சங்கிலி உள்ளிட்டவை ) ஆகியற்றைத் வாங்கி  எடுத்துக் கொண்டு  தன் மாமனாரிடம் சென்று " மாமா இவை எல்லாவற்றையும்  தங்களுக்காக வாங்கி வந்துள்ளேன். அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள் " என்று சொல்லி மாமனார் மாமியார் காலில் விழுந்து வாழ்த்து பெற வேண்டும். 


தன் உழைப்பால் ஈட்டிய பணத்தை வைத்து மாமனார் மாமியாருக்கு மருமகன் கொடுக்கும் சிறப்பு சீர் வரிசையே " தலைப்பொங்கல் " என்ற புதிய வரலாறு உருவாக வேண்டும். இனி தமிழர்கள் விழாக்களில் " தலைப்பொங்கல் " விழாவை முன்னிலைப் படுத்துவோம். மாமனாரிடம் மருமகன்  அடித்துப் பிடுங்குகிற " தலைத்தீபாவளி " நமக்கு வேண்டாம்.  மாமனாருக்கு மருமகன் அள்ளிக் கொடுக்கிற " தலைப்பொங்கலே " நமக்கு வேண்டும். 

வரலாற்றை மாற்றுவோம். 

நாளைய தலைமுறைகள் படிக்கின்ற  வரலாறாய் நாம் ஆவோம்!


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்