மான் மானுடன்தான் சேரும்.
யானை யானையுடன்தான் சேரும்.
சிங்கம் சிங்கத்துடன்தான் சேரும்.
புலி புலியுடன்தான் சேரும். ஒருவரது பழக்க வழக்கங்கள் எப்படி இருக்கிறதோ, அதுபோன்ற பழக்க வழக்கம் உள்ளவர்களுடன்தான் அவர்கள் சேர்ந்து பழகுவார்கள். அதுதான் உலக இயல்பு.
ஆகையால், அவர்கள் என்னோடு பேசுவதில்லை. இவர்கள் என்னை மதிப்பதில்லை . என்னை யாருமே புரிந்து கொள்வதில்லை என்று எப்போதுமே வருத்தம் கொள்ளாதீர்கள். நாம் நல்லவர்களாக இருந்தால், நல்லோர் நம்முடன் வந்து சேர விரூம்புவார்கள். நாம் தீயோராக இருந்தால், தீயோர்தான் நம்மோடு வந்து சேர விரும்புவார்கள். நாம் நல்லவராக இருந்துகொண்டு தீயவர்கள் நம்மோடு பேசவில்லையே? நம்மை மதிப்பதில்லையே? என்று வருந்தக் கூடாது. ஏனென்றால் , " இனம் இனத்தோடுதான் சேரும் "
" நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். "
( மூதுரை - 24)
குளத்தில் உள்ள நல்ல தாமரை மலரை நல்ல அன்னம் தேடிவந்து சேரும் ; அதுபோல, கற்றவரைக் கற்றவரே விரும்பிச் சேர்வர்.
இடுகாட்டில் உள்ள பிணத்தைக் காக்கைகள்தான் விரும்பும் ; அதுபோல, கல்லாத மூடரை மூடரே விரும்பிச் சேர்வர்.
நம்மை மதிப்பவர்களை அன்னப் பறவையாக எண்ணி அக மகிழ்வோம்.
நம்மை மதிக்காதவர்களைக் காக்கைகளாக எண்ணி, அவர்களைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்