Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " அளறு அரக்கன்"( நரகாசுரன்)

 

 



நரகம் ( நரகா)  + அசுரன் = நரகாசுரன்.

நரகம் - மிகுதியான  துன்பத்தைத் தருகின்ற இடம். 

அசுரன்  - அரக்கன். 


நரகாசுரன் : உயிர்களுக்கு மிகுதியான துன்பத்தைத் தருகின்ற ,  இயற்கைக்கு எதிராக இருக்கின்ற அரக்கனையே " நரகாசுரன் " என்பர். 

 நரகம் - அளறு ( திருக்குறளில் அளறு என்ற சொல் நரகம் என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ) 

அசுரன் - அரக்கன்.

நரகாசுரன் என்ற வடமொழிப் பெயரை " அளறு அரக்கன் " என்று தமிழ்ப்படுத்தி அழைக்கலாம்.


உலக உயிர்களுக்குப் பல்வேறு  துன்பங்களைக் கொடுத்த அளறு அரக்கன் ( நரகாசுரன்)  இறந்த நாளையே " ஒளித்திருநாள் ( தீபாவளி) என்று கொண்டாடுவதாகக் கூறுகிறார்கள். நரகாசுரன் என்ற ஒருவன் இருந்தானா? இல்லையா? என்பது நமக்குத் தேவையில்லாத கதை. உலக உயிர்களுக்குத் தீங்கு செய்கின்றவர்கள் எல்லோருமே  அளறு அரக்கர்கள்தான். இந்தக் காலத்தில் வாழ்கின்ற அளறு அரக்கர்களைப் பற்றி இங்குக் காண்போம்.


ஒளித்திருநாள் ( தீபாவளி) என்றாலே இனிப்பு, தின்பண்டம் (பலகாரம் ) , பட்டாசு,  கறிசோறு போன்றவைதான் நம் நினைவுக்கு வரும். இதில் இனிப்பும், தின்பண்டமும் ஏற்புடையவை. பட்டாசும்,  கறிசோறும்  உலகிற்குத்  தீங்கானவை. பட்டாசு வெடிப்பவர்களும், பிற  உயிர்களைக் கொன்று (புலால் உணவு)  உண்பவர்களும்தான் இக்கால அளறு அரக்கர்கள். அளறு அரக்கன் ஒருவன்  இறந்ததற்காக,  உலகத்தில் உள்ள அளறு அரக்கர்கள் எல்லோரும் ஒன்று கூடி  " ஒளித்திருநாள் விழா ". வாகக் கொண்டாடுவது  உண்மையில்  வேடிக்கையான ஒன்றாகும்.


திருக்குறளில் "அளறு " என்ற சொல் "நரகம்"  என்ற பொருளில் வருவதை இங்குக் காண்போம்.


" உண்ணாது உள்ளது உயிர்நிலை ஊணுண்ண 

அண்ணாத்தால் செய்யாது அளறு. " 

( குறள் - 255)


உயிர்கள் நிலைத்து வாழும் தன்மை ஊன் உண்ணாமையாகிய அறத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும். ஊன் உண்டால் அவனை நரகம் ( அளறு) விழுங்கும். அவனை ஒருபோதும் வெளியே விடாது. 

ஆக, ஊன் உண்பவர்களை எல்லாம் நரகத்தில் வாழவே தகுதியானவர்கள். இந்த உலகத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்கிறார் வள்ளுவர்.


எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணி அன்பு பாராட்டுபவனே உண்மையான  மனிதன். தன்னுயிர் வாழ மற்ற உயிர்களைக் கொன்று தின்பவன்தான் உண்மையான அரக்கன். எல்லோரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதே திருநாள் ஆகும். மற்ற உயிர்களைக் கொன்று தின்கின்ற நாள்  எப்படி திருநாள் ஆகும்? உங்கள் வாய்ச்சுவைக்கு வாயில்லா உயிர்கள்தான் கிடைத்ததா? தான் ஒரு அறிவிலி என்பதை அறியாத ஒருவன் மற்றவர்களைப் பார்த்து அறிவிலி என்றானாம். அதுபோலத்தான் இருக்கிறது, மற்ற உயிர்களைக் கொன்று தின்னும் அரக்கர்களாக  இருந்துகொண்டு, இன்னொரு அரக்கன் இறந்ததை மகிழ்ந்து கொண்டாடுகிற செயல். "உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் " என்றார்  வள்ளலார். உயிரிரக்கம் இல்லாத உடலும்,  உயிர் இல்லாத உடலும் ஒன்றுதான். உயிர் இல்லாத உடல் பிணம். உயிரிரக்கம் இல்லாத உடலோ " நடைப்பிணம் "  ஒளித்திருநாளை முன்னிட்டு, இன்று  பல்லாயிரம் உயிர்களைக் கொன்றிருப்பார்கள். பல்லாயிரம் உயிர்களைக் கொன்றுவிட்டு திருநாள் கொண்டாடுவது குற்றம்  இல்லையா? 


" ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் 

தான்புக்கு அழுந்தும் அளறு " 

( குறள் - 835) 


அறிவில்லாதவன் ஏழு பிறப்புகளிலும், தான் புகுந்து அழுந்துகின்ற ( வருந்துகின்ற) நரகத் துன்பத்தைத் தன் ஒரு பிறப்பிலேயே செய்து கொள்ள வல்லவனாவான். 




காற்றையும், சுற்றுச் சூழலையும் சீர்கெட வைக்கும் பட்டாசுகளை வெடிப்பவர்கள் எல்லோருமே ஏழு பிறவிக்கும் உண்டான துன்பத்தை, தீங்கினை  இந்த ஒரு பிறவியிலேயே செய்து விடுகிறார்கள்.  மிகுதியான  காற்று மாசுபாடு உள்ள நகரங்களில் உலக அளவில் டெல்லி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதனால் அங்கு பட்டாசு வெடிக்க முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை உலகெங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். கண்கெட்ட பின்பு "ஞாயிறு போற்றுதும் " என்று பாடி என்ன பயன்? கடவுள் இல்லாமலும் நம்மால் வாழ முடியும். காற்று இல்லாமல் நம்மால் வாழ முடியுமா? காற்றுதான் நம்மைக் காக்கும் உண்மையானக் கடவுள். காற்று இல்லையேல் உலக உயிர்கள் இல்லை. நமக்கு உயிர் கொடுக்கும் காற்றை நம் உயிரைக் கொடுத்தாவது காக்க வேண்டாமா? பட்டாசு வெடித்துக் காற்றைப் பாழ்படுத்தலாமா?


பட்டாசு வாங்கவில்லை என்றால் பட்டாசு விற்பவன் வாழ்க்கை என்னவாகும்? என்று வினாவெழுப்பும் அறிவாளிகளே! பட்டாசுகளை வெடித்து வெடித்து காற்றையும், சுற்றுச் சூழலையும் மாசுபடுத்திவிட்டால் நாளை உங்கள் வாழ்க்கை என்னவாகும் என்று சிந்தித்தீர்களா? உண்ண உணவில்லை, உடுத்த உடையில்லை, உறங்க உறைவிடம் இல்லை என்ற நிலையில் வறுமையில் வாடும்  கோடிக்கணக்கான மக்கள் இம்மண்ணில் வாழ்கிறார்கள்.  அவர்களைக் காப்பாற்றுவதற்கு உங்கள் பணத்தைப்  பயன்படுத்தலாமே? அவர்களுக்கு வேண்டிய உடைகள்,  இனிப்புகள், உணவுகள் வாங்கித் தரலாமே?  பட்டாசு வெடித்து பல்லாயிரம் கோடிகளை வீணாக்கலாமா? காசை கரியாக்கலாமா? படிக்க  புத்தகம் வாங்க காசில்லாதவன் கூட வெடிக்க புதுப்புது வெடிகளை வாங்குகிறான். இது அறிவுள்ள செயலா? சிந்தியுங்கள்?


பட்டாசு வாங்கவில்லையென்றால் பட்டாசு விற்பவர்கள்  தொழிலும், அவர்கள்  வாழ்க்கையும் பாதிக்கப்படுமே என்று வருந்துகின்ற அறிவாளிகளே!  உலகத்திற்கே சோறு போடுகின்ற உழவர்கள் , வானம் பொய்த்துப் போவதாலும், எதிர்பாராமல் பெய்யும் அடைமழையாலும் உழவுத் தொழில் பொய்த்துப் போவதை அறிந்ததுண்டோ? உழவர்களைத் தூக்கி விடாமல் தூக்கில் தொங்கவிடுகிறோமே அது அறமா? சிந்தியுங்கள். நீங்கள் பட்டாசு வெடித்து கொஞ்சம் நேரம் மகிழ்வதைக் காட்டிலும்,  பட்டாசு வெடித்துக் காசைக் கரியாக்காமல்  நமக்குச் சோறுபோடும்  உழவுத் தொழிலைப்   பாதுகாப்பதற்குப் பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் மகிழலாமே? 


ஆம்,  " உழவுத்தொழில்  பாதுகாப்புச் சங்கம் " ஒன்றை அமைப்போம். பட்டாசுக்காகச் செலவு செய்யும் பல்லாயிரம் கோடியை உழவுத்தொழில்  பாதுகாப்புச் சங்கத்துக்கு நன்கொடையாகக் கொடுப்போம். அதை வைத்து வறுமையுற்ற உழவர்களின் வறுமையைப் போக்குவோம்.  வானம் பொய்த்தாலும், உழவர்களின் வாழ்க்கை பொய்க்காமல் பார்த்துக் கொள்வோம். அடைமழை பெய்தாலும் உழவர்களின் கண்களில் கண்ணீர் மழை வராமல் பார்த்துக் கொள்வோம். பட்டாசு ஒளியில்தான் ஒளித்திருவிழாவைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. பட்டாசுக்குச் செலவு செய்யும் பணத்தை வைத்து  உழவர்களின் வறுமையைப் போக்கி , உழவர்களின் வாழ்க்கைக்கு ஒளிதந்தும்  ஒளித்திருவிழாவைக் கொண்டாடலாமே!


இயற்கைக்கு இடையூறாய் இருப்பவர்கள் அரக்கர்கள் என்றால்,  இயற்கையைப் பாதுகாப்பவர்கள் எல்லோரும் தேவர்கள்தானே? பட்டாசு வெடித்துத் தங்களை  அரக்கர்களாகச்  சிலர்  அடையாளப்படுத்திக் கொள்வதைப் போல , பட்டாசுகளைப் புறக்கணித்துத் தங்களை இயற்கையின் பாதுகாவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவர்களைப் பற்றி  கொஞ்சம் பார்ப்போம்.


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகில் உள்ள வேட்டங்குடி -  கொள்ளுக்கடிப்பட்டி ,  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் ,  ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு , சேலம் மாவட்டத்தில் உள்ள வௌவால்தோப்பு  என்று தமிழகத்தில் எத்தனையோ ஊர்களில்  பட்டாசு வெடிக்காமலே விழாவைக் கொண்டாடுகிறார்கள்.  ஏன் தெரியுமா? தங்கள் ஊரில் தஞ்சம் அடைந்துள்ள பறவைகள் யாவும் அச்சம் அடையக்கூடாது என்பதற்காகவே அவர்கள் பட்டாசு வெடிப்பதில்லை. இந்த உணர்வு  உலக மக்கள் அனைவரிடமும் ஏற்பட வேண்டும்.. மாசில்லா உலகம் வேண்டுமெனில்,  பட்டாசு வெடிப்பதற்கு மட்டுமல்ல,  பொருளறிய அகராதியில்  படிப்பதற்குக்கூட பட்டாசு என்ற சொல்  இருக்கக் கூடாது. ஆம், பட்டாசை உலகை விட்டே ஒழிக்க வேண்டும். இல்லையேல், பட்டாசு இந்த உலகையே ஒழித்துவிடும். 

எந்த உயிரையும் கொல்லாமலும்,  சுற்றுச் சூழலுக்குத்  தீங்கு செய்யாமலும்,   விழாக்களைக்  கொண்டாடுவோம். 


இன்றைக்குத் தேவை 

வெடி வைப்பது அல்ல!

செடி வைப்பது! இயற்கையை நாம் பாதுகாப்போம்.

இயற்கை 

நம்மைப் பாதுகாக்கும்!


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்