Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம். " குறையொன்றும் இல்லை "

 


ஓர் ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவர் புதிதாக ஒரு கண்ணாடி மாளிகையைக் கட்டினார். விலைமதிப்பற்ற அழகிய மாளிகை அது. அந்த மாளிகையில் உள்ள எந்த அறைக்குள் இருந்து  பார்த்தாலும் நம் முகம்,  பல முகங்களாக தெரியும் வகையில் அந்த மாளிகை வடிவமைக்கப் பட்டிருந்தது. தன் செல்வ வளத்தையும், கண்ணாடி மாளிகையின் அழகையும் ஊர் மக்களுக்குக் காட்ட விரும்பிய அந்தச் செல்வந்தர், தன் கண்ணாடி மாளிகையைக் கண்டுகளிக்க வருமாறு ஊர் மக்களுக்கு அன்போடு அழைப்பு விடுத்தார். ஊர்மக்கள் கூட்டம் கூட்டமாகத்  திரண்டு வந்து அந்தக் கண்ணாடி மாளிகையைக் கண்டு வியந்தனர். 


அந்தக் கண்ணாடி மாளிகைக்குள் கூட்டத்தோடு கூட்டமாக  நாய் ஒன்று உள்ளே நுழைந்தது. ஒவ்வொரு அறையாய் சென்று பார்த்தது. அந்த நாய் எப்போதும் சிரித்த முகமாகவே இருக்கும். அதனால், அந்தக் கண்ணாடி மாளிகையில் தெரிந்த அந்த நாயின்  முகங்களும் சிரித்தவாறே தெரிந்தது. கண்ணாடியில் தெரிவது தன் முகம்தான் என்பதை அறியாத அந்த நாய் , இந்த மாளிகையில் எவ்வளவோ நாய்கள் உள்ளன . அனைத்து நாய்களுமே சிரித்தபடியே நம்மை வரவேற்கின்றன. இது நல்ல மாளிகை. நல்ல நல்ல நாய்கள் இருக்கின்ற மாளிகையாக இது உள்ளது. இங்கு அடிக்கடி வரவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு வெளியே வந்தது அந்த நாய் .


சிறிது நேரம் கழித்து இன்னொரு நாய் அந்தக் கண்ணாடி மாளிகைக்குள் சென்றது. அது யாரைப் பார்த்தாலும்  குரைத்துக் கொண்டே இருக்கும். அது ஒரு வெறி பிடித்த நாய். கண்ணாடி மாளிகையின் உள்ளே சென்று பார்த்தது. எல்லாக் கண்ணாடிகளிலும் அதன் முகம் தெரிந்தது. அது தன்னுடைய முகம்தான் என்பதை அறியாத அந்த நாய், கண்ணாடியில் தெரிந்த நாய்களின் முகங்களைப்பார்த்து  குரைக்கத் தொடங்கியது. அந்த நாய் குரைத்ததால் கண்ணாடியில் தெரிந்த அந்த நாயின் முகங்களும் குரைப்பதுபோல்  தெரிந்தன. தன்னைப் பார்த்துதான் எல்லா நாய்களும் குரைக்கின்றன என்று எண்ணிக் கொண்ட அந்த நாய், கண்ணாடியைப் பார்த்து நாள் முழுக்க,  வாய் வலிக்கக் குரைத்துக் கொண்டே இருந்தது. இந்தக் கண்ணாடி மாளிகையில் உள்ள நாய்கள் எல்லாம் வெறி பிடித்த நாய்கள். எப்போது பார்த்தாலும் குரைத்துக் கொண்டே இருக்கின்றன. இனி இந்தக் கண்ணாடி மாளிகைக்குள் வரவே கூடாது என்று உறுதி  எடுத்துக் கொண்டு கண்ணாடி மாளிகையை விட்டு வெளியே வந்தது அந்த நாய். 


இந்த உலகமும் ஒரு கண்ணாடி மாளிகைதான். நாம் எதை வெளிப்படுத்துகிறோமோ, அதையே அதுவும்  வெளிப்படுத்தும். இகழ்ந்தால் இகழும். புகழ்ந்தால் புகழும். சிரித்தால் சிரிக்கும். முறைத்தால் முறைக்கும். நிறையாகப் பார்த்தால் நிறையாகத் தெரியும். குறையாகப் பார்த்தால் குறையாகத்தான் தெரியும். எல்லாமே நம் பார்வையில்தான் இருக்கிறது. ஆகையால், இந்த உலகத்தில் இருந்தும், உலக மக்களிடம் இருந்தும் நிறையை மட்டும் பாருங்கள். குறையைப் பார்க்காதீர்கள். 


" ஒருவன் அறிவானும் எல்லாம் யாதுஒன்றும் 

ஒருவன் அறியா தவனும் - ஒருவன் 

குணன்அடங்கக் குற்றம் உளானும் ஒருவன் 

கணன்அடங்கக் கற்றானும் இல். " 

( நான்மணிக்கடிகை - 104)


"எல்லாக் கலைகளையும் கற்று,  எல்லாம் அறிந்தவன் இங்கு ஒருவனும் இல்லை.


எதனையும் தெரியாதவனும், ஒன்றும் அறியாதவனும் இங்கு ஒருவனும் இல்லை. 


ஒரு நல்லியல்பும் இல்லாதவனும், குற்றம்  மட்டுமே உள்ளவனும் இங்கு ஒருவனும் இல்லை. 


அறியாமை அறவே இல்லாதவனும், அனைத்தும் கற்றவனும் இங்கு  ஒருவனும் இல்லை " என்கிறார் விளம்பி நாகனார் 


குறை இல்லாத மனிதன் இல்லை. குறையை மட்டுமே பார்ப்பவன், மனிதனே இல்லை. யாரிடத்திலும் குறையைப் பார்க்காதீர்கள். அவர்களிடத்தில் உள்ள  நிறையைப் பாருங்கள். ஆம் நிறையை மட்டும் பாருங்கள்.

உங்கள் வாழ்க்கை நிறைவாக இருக்கும்.


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,  

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்