நாகப்பட்டினத்தில் "காத்தான் சத்திரம்" என்று ஒரு சத்திரம் இருந்தது. காத்தான் என்பவர் அந்தச் சத்திரத்தை நடத்தி வந்தார். அந்தச் சத்திரத்தில் உணவு உண்பதற்காக காளமேகப் புலவர் ஒருமுறை சென்றார். நீண்ட நேரம் காத்திருந்தும் உணவு வரவில்லை. காளமேகப் புலவர் பொறுமை இழந்தார். பலமணி நேரம் கழித்துதான் உணவு உண்ண அழைப்பு வந்தது. பசியின் உச்சத்துக்குப் போயிருந்த காளமேகப் புலவர், தன்னைப் பசியால் காக்க வைத்த " காத்தான் சத்திரத்தை" இகழ்ந்து பாடல் ஒன்று பாடினார். அந்தப் பாடலை இங்குக் காண்போம்.
" கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்; - குத்தி
உலையில்இட ஊர்அடங்கும் ; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும். "
( காளமேகப் புலவர் தனிப்பாடல் திரட்டு - 283)
"ஒலிக்கும் கடலால் சூழப்பெற்ற நாகப்பட்டினத்தில் உள்ள " காத்தான் " என்பானின் சத்திரத்தில், கதிரவன் மறையும் மாலைக் காலத்தில்தான் உணவைச் சமைப்பதற்கு வேண்டிய அரிசி வந்து சேரும் ; அரிசியைக் கொழித்து உலையிலே இடும்போது ஊரடங்கும் . அதாவது , நள்ளிரவு ஆகிவிடும். வந்தவர்க்கு உண்ணுமாறு இடப்பட்ட இலையில் ஓர் அகப்பைச் சோற்றை இடும்போது வெள்ளி தோன்றும். அதாவது விடியற்காலை வந்துவிடும் " என்று கிண்டலடித்தார் காளமேகப் புலவர்.
இப்பாடலைக் கேட்டவுடன் வந்திருப்பவர் காளமேகப் புலவர் என்பதை உணர்ந்து கொண்டார் காத்தான். இந்தப் பாடலினால் எங்கே தனது சத்திரத்திற்குக் கெட்ட பெயர் வந்துவிடுமோ என்று பயந்தார். தான் செய்த பிழையைப் பொறுத்தருளும்படி காளமேகப் புலவரிடம் வேண்டினார் காத்தான். ஆதலால், நிலைமையைச் சரி செய்ய அப்பாடலையே மீண்டும் பாடி பாடலுக்கு வேறு ஒரு பொருளைக் கூறினார் காளமேகப் புலவர்.
" ஒலிக்கும் கடலால் சூழப்பெற்ற நாகப்பட்டினத்தில் உள்ள " காத்தான் " என்பானின் சத்திரத்தில், அத்தமிக்கும் நேரத்தில், அதாவது நாட்டில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் காலத்தில் , அரிசி மூட்டை மூட்டையாக வந்திறங்கும். அந்த அரிசியைக் கொண்டு சமைத்த உணவை உண்டு ஊரே பசி அடங்கும். பஞ்ச காலத்தில் ஊர் மக்களின் பசியைப் போக்கும் பெரும்பணியைச் செய்தது காத்தான் சத்திரம்தான். அங்கு உணவு பரிமாறும்போது இலையில் விழும் ஒரு அகப்பை அன்னம் வெள்ளி வீண்மீன்போல் ஒளிரும். சோற்றின் வெண்மை நிறத்தைக் கண்டு வெள்ளி விண்மீன் தோற்று ஓடி விடும் " என்று காத்தான் சத்திரத்தைப் போற்றிப் புகழும் பாடலாக, அப்பாடலின் பொருளையே மாற்றினார் காளமேகப் புலவர். இருபொருள்பட பாடுவதில் கைதேர்ந்தவர் காளமேகப் புலவர் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
இதைக் கேட்டதும் காளமேகப் புலவருக்கு நெகிழ்ச்சியோடு நன்றி கூறினார் காத்தான். "சிறியோர் பிழைபொறுத்தல் பெரியோர்க்கு அழகு " என்பதை உலகிற்கு உணர்த்திய காளமேகப் புலவரின் இப்பாடல் அழகோ அழகு.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம் .
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்