"முதுமொழிக் காஞ்சி" என்னும் நூலில் " அறிவுப் பத்து " என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ள பத்துக் கருத்துகளை அறிவோம். அறியத்தக்க பத்துக் கருத்துகளை உடையதால் இப்பகுதி" அறிவுப் பத்து " என்று அழைக்கப்படுகிறது.
1.ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப.
கடல்சூழ்ந்த உலகத்தில் உள்ள மக்களுக்குள் யாவராயினும், அவருடைய குளிர்ந்த அருளுடைமையைக் கொண்டுதான் அவர் உயர் குடியில் பிறந்தவர் என்று அறியப்படுவர். மற்ற உயிர்கள் மீது அன்பு காட்டுபவர்களே உயர்குடி மக்களாவர். அவ்வாறு அன்பு காட்டாதவர்கள் கீழ்மக்களாவர்.
2.ஈரம் உடைமை ஈகையின் அறிப.
ஒருவர் பிறர்க்கு அளிக்கும் கொடையைக் கொண்டு அவர் குளிர்ந்த அருளுடையவர் என்பதை அறியலாம்.
3.சோரா நன்னட்பு உதவியின் அறிப .
ஒருவர் செய்யும் உதவியை அளவுகோலாகக் கொண்டு அவர் தளராத நட்பு உடையவர் என்பதை அறியலாம். உதவும் தன்மையினாலே உலகையே நட்பாகப் பெறுவர்.
4.கற்றது உடைமை காட்சியின் அறிப.
ஒருவரது உண்மை காணும் திறத்தைக் கொண்டு அவரது கல்வியின் வல்லமையை அறியலாம்.
5.ஏற்றம் உடைமை ஏறுகோளின் அறிப.
ஒருவர் உயர்ந்த ஆராய்ச்சி உடையவர் என்பதை , அவர் எதிர்காலத்தில் வரக் கூடியதை முன் கூட்டி நுனித்துணர்ந்து செயல்படுவதைக் கொண்டு அறியலாம்.
6.சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப.
ஒருவர் தம்மைப் பெருமைப்படுத்திப் பேசி செருக்குற்று இருப்பதைக் கொண்டு, அவர் கீழ்க்குடியில் பிறந்தவர் என்பதை அறியலாம்.
7.சூத்திரம் செய்தலின், கள்வனாதல் அறிப.
ஒருவர் செய்யும் வஞ்சகச் சூழ்ச்சியைக் கொண்டு அவர் கள்ளத்தனம் உடையவர் என்பதை அறியலாம்.
8.சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப.
ஒருவரிடம் உள்ள சொல் தளர்ச்சியே , அவரிடம் உள்ள எல்லாத் தளர்ச்சியையும் காட்டி விடும். அவர் எல்லாவற்றிலும் சோர்ந்து தவறுவார் என்பதை அறியலாம்.
9.அறிவுச்சோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப.
ஒருவர் அறிவுடைமையில் குறைபாடு உடையவராயிருப்பின் , அவர் எல்லாவற்றிலும் குறைபாடு உடையவராய் இருப்பார் என்பதை அறியலாம்.
10.சீருடை ஆண்மை செய்கையின் அறிப
ஒருவரது சிறப்பான ஆளுமைத் தன்மையை , அவர் ஒரு செயலைச் செய்து முடிக்கும் திறமையைக் கொண்டு அறியலாம்.
ஒன்றை அறிந்து கொள்வது மட்டும் அறிவுடைமை அன்று. அறிந்ததை கடைப்பிடிப்பதே உண்மையான அறிவுடைமை.
இவண்
ஆ.தி.பகலன்.
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்