தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பது போரடிப்பதால் பெரியவர்கள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை பலரும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இது உடல் நல சிக்கல்களுக்கு காரணமாக அமைவது மட்டுமல்லாமல் மன நல பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு பல குற்றங்களுக்கு வழிவகுப்பதாக அமைந்துவிடுகிறது.
ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. அதேசமயம் பள்ளி பாடங்களையும் செல்போனில் தான் படிக்க வேண்டி இருப்பதால், அவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவது பல சமயம் தடுக்க முடிவதில்லை. சில நேரங்களில் விடலைப் பிள்ளைகளை கண்டிப்பது விபரீதத்தில் கூட முடிகிறது.
'ஆன்லைன் கேம்கள்' எனப் பொதுவாக கூறினாலும் குறிப்பிட்ட விபரீதமான விளையாட்டுகளையே மாணவர்கள் அதிகம் விளையாடுகின்றனர். இவ்வகை விளையாட்டுகளில் வன்முறையை அதிகமாக இருக்கிறது.
பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்து நாளடைவில் அதிலிருந்து மீண்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் கவனச்சிதறல், மன அழுத்தம், படபடப்பு போன்ற மன நோய்களுக்கும், கோபம், பதற்றம், போன்ற நடத்தை சார்ந்த பிரச்சனைகளுக்கும் ஆளாகின்றனர்.
ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் ஆர்வத்தில் மொபைலை மிக அருகில் வைத்துக் கொள்கின்றனர். இதனால் கண்கள் பாதிக்கப்படும். சரியான கோணத்தில் அமராதபோது கழுத்து வலி, முதுகுவலி, உறக்கம் கெடுவதால் மலச்சிக்கல், தலைவலி போன்றவை ஏற்படும் வாய்ப்பு உண்டு.
தேவையற்ற நேரத்தில் கணினி மற்றும் மொபைல் பயன்பாட்டில் இருந்து அவர்களை விலக்க வேண்டும். இதனால் அவர்கள் கோபப்பட்டாலும், சோர்வாக நடந்து கொண்டாலும் சலுகை அளிக்கக் கூடாது. மாறாக அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். மாற்று வழி காண்பிக்க வேண்டும். திரும்பவும் விளையாட தோன்றும் போதெல்லாம் "இது தவறு" என்பதை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
0 கருத்துகள்