Ad Code

Ticker

6/recent/ticker-posts

மருது சகோதரர்களின் கடைசி நாள் எப்படி இருந்தது? | 1801 வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கம்



 கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் (கிழக்கிந்திய நிறுவனத்தின் மெட்ராஸ் எஸ்டாப்ளிஷ்மென்ட்டில் பணியாற்றிய இராணுவ அதிகாரி) எழுதிய Military Reminiscences (இராணுவ நினைவுகள்) என்ற புத்தகம் பற்றி அண்மையில் குறிப்பிட்டிருந்தேன்.கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ்  தனது நாற்பதாண்டுகள் இந்திய வாழ்க்கையை பற்றி இதில் தொகுத்துள்ளார்.  இந்த புத்தகத்தில் வரும் சில வரலாற்று தகவல்கள் படித்துமுடித்தும் மனதை ரணமாக்கி ஏண்டா இதை எல்லாம் படிச்சோம் என்பதுபோல இருக்கிறது. குறிப்பாக மருது சகோதாரர்கள் தூக்கில் போடும் நிகழ்வு. 


வீரபாண்டிய கட்டபொம்மன் பிறகு ஊமைத்துரையை கொன்றபின்னர் அவர்களுக்கு உதவிய மருது சகோதாரர்களை கைது செய்கிறார்கள். 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கோட்டையில் மருது சகோதரர்கள் இருவரையும் ஆங்கிலேயர்கள் பொது வெளியில் தூக்கிலிட்டனர். ஆனால்  மருது சகோதரர்கள் இருவரை மட்டும் தூக்கிலிடவில்லை. அவர்களோடு சேர்த்து ஐநூறு பேர்களை ஒரேநாளில் தூக்கில் போடுகிறார்கள். பனை மரங்களை வெட்டி வரிசையாக நட்டு மரத்துக்கு மேல் கிடைமட்டமாக ஒரு கட்டையை வைத்து மரத்துக்கு ஐந்தாறு பேர் என்று தூக்கில் போடுகிறார்கள். இப்படி செய்தால் வேலைப்பளு குறையும் என்று. காலையில் சூர்ய உதயம் தொடங்கி மாலை வரை  தூக்கு போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அந்த ஒருநாள் முழுவதும் ஐநூறு பேர்களை தூக்குப்போடுவதற்காவே போகிறது. அந்த ஐநூறு பேர்களும் மருதுவின் படைவீரர்கள் , நெருங்கிய உறவினர்கள், மாமன் , மச்சான் , பெண் எடுத்து பெண் கொடுத்தவர்கள் என்று கும்பல்  கும்பலாக கைது செய்து தூக்கில் போடுகிறார்கள்.  மருது சகோதரர்களின் அவரது நெருங்கிய வீரர்களின்  உடல் வேறு தலை வேறு என்று பிரித்து திருப்பத்தூர் வீதிகளில் உலவ விட்டுள்ளார்கள். தலைகளை நகர வீதிகளில் வேல் கம்புகளில் செருகி பார்வைக்கு வைத்துள்ளார்கள். நடந்த நிகழ்வுகளால் திருப்பத்தூரில் மக்கள் வெளிவரவே பயமுற்று இருந்துள்ளனர். உடலை ஒரு இடத்தில்  தலையை வேறொரு இடத்தில் புதைத்துள்ளார்கள். சொல்லப்போனால் கட்டபொம்மன், ஊமைத்துரைக்கு கூட இந்தளவு அவமதிப்பு செய்யவில்லை. 


இதில் நடந்த  உச்சபட்ச கொடுமை என்னவென்றால் பெரிய மருதுவின் கண்முன்னால் அவரது உறவினர்கள் , மகன்கள்  , பேரன்கள் , சின்ன மருது எல்லாரையும் தூக்கில் போட்டு அதை பார்க்க வைத்து கடைசியாக பெரிய மருதுவை தூக்கில் போட்டது. தனக்கு நெருக்கமானவர்களின் மரணத்தை பார்ப்பது போன்ற கொடுமையான விஷயம் வேறு இல்லை. ஆனால் பெரிய மருது கலங்கவில்லை. என் உயிரை நீங்கள் எடுக்கலாம் ஆனால் என் நாட்டுப் பாசத்தை உங்களால் எடுக்க முடியாது. எங்களை நாங்கள் கட்டிய காளையார்கோவில் கோபுரத்தின் நிழல் விழும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என்று கடைசி ஆசையை சொல்லி உயிர்விட்டார்.               

               

இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் தொடக்க  காலத்தில் வெல்ஷுக்கும் சின்ன மருதுவுக்கும் இணக்கமான மற்றும் நட்பான உறவே இருந்தது. சின்ன மருதுவிடம் வெல்ஷ் தமிழ்நாட்டின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளான வளரி (Valari), வாள், வேல் வீசுதல் மற்றும் களரிச் சண்டை போன்ற வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தார். ஆனால் பின்னாட்களில்  இதே மருது சகோதரர்களை ஆங்கிலேயர் கொடூரமாக கொலை செய்கிறார்கள்.  மருது குடும்பத்தில் உள்ள சிறுவர்களை , பெண்களை தூக்கில் போடாமல் நாடு கடத்துகிறார்கள். எழுபதுக்கும் மேற்பட்டவர்களை கப்பலில் ஏற்றி மலேசியாவுக்கு பக்கத்தில் உள்ள பிரின்ஸ் ஆப் வேல்ஸ் என்ற தீவில் அடைக்கிறார்கள்.  1802-ல் சின்ன மருதுவின் இளைய மகனான துரைச்சாமியை (முத்து வடுக நாத துரை) ஆங்கிலேயர்கள் கைது செய்து பினாங்குக்குக் (Penang) நாடுகடத்துகிறார்கள். அவனுக்கு அப்போது வயது வெறும் 15.  


வரலாறு ஆச்சரியமானது. எதிர்பாராத ஆச்சரியமான சம்பவங்களால் பின்னப்பட்டது. பாளையக்காரர்களை எல்லாம் ஒழித்தபிறகு  கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் லண்டன் செல்கிறார். பணி ஓய்வு பெறுகிறார். 1818-ல் ஓய்வெடுக்க எதேச்சையாக மலேசியா செல்கிறார். அங்கு வயதான மூப்படைந்த ஒருத்தரை பார்க்கிறார். அவரை பற்றி விசாரிக்கும்போது அவர்தான் சின்ன மருதுவின் மகன் துரைச்சாமி என்று தெரிகிறது.      துரைச்சாமிக்கு முப்பத்தோரு வயதுதான். ஆனால் உடல் மெலிந்து ஐம்பது வயது நபர்போல் இருக்கிறார். ஒரு காலத்தில் அரண்மனையில் செல்வச் செழிப்போடு வாழ்ந்த தனது நண்பன் சின்ன மருதுவின் மகன், தனக்கு களரிச்சண்டை கற்றுக்கொடுத்த நண்பரின் மகன் பினாங்கில் தேவாலயம் கட்டும் கைதியாகக் கல் உடைக்கும் அவல நிலையை பார்த்து கண்ணீர் விடுகிறார். துரைச்சாமியின் அந்தத் தோற்றத்தைக் கவனித்தபோது  என்னுடைய இதயத்தில் கத்தி பாய்ந்தது போல இருந்தது என்று Military Reminiscences (இராணுவ நினைவுகள்)  ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார். கடுமையான உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பினாங்கிலிருந்து தனது சொந்த மண்ணான சிவகங்கைக்கு வந்தடைந்து 1820 ல்  இறக்கிறார்  அவரது உடலை  காளையார்கோவிலில் அடக்கம்  செய்கிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்