வருகிறவன் போகிறவன் எல்லாம் தங்கறதுக்கும், திங்கிறதுக்கும் என் வீடு என்ன சத்திரமா? சாவடியா? என்று சிலர் திட்டுவதைப் பார்த்திருப்போம்.
சத்திரம் - சாவடி என்றால் என்ன?
சத்திரம் :
வழிப்போக்கர்களுக்குச் சத்தான இரை ( உணவு) கொடுக்கும் இடத்தையே " சத்திரம் " என்பர். நீண்ட தொலைவு நடந்து களைப்படைந்து வருகின்ற , வழிப்போக்கர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றைக் கட்டணம் இல்லாமல் வழங்கும் இடமே சத்திரம் ஆகும் .
சாவடி :
சாய் + அடி என்னும் சொற்கள் பேச்சு வழக்கில், சா+அடி எனத் திரிப்படைந்து " சாவடி " என்ற சொல் உருவானது என்பர்.
வழிப்போக்கர்கள் பொழுது சாய்கையில் ஒரு கூரை அடியில் பாதுகாப்பாக இருக்க அணுகும் இடங்களையே " சாவடி " என்று அழைத்தனர். வழிப்போக்கர்கள் கட்டணம் இல்லாமல் தற்காலிகமாகத் தங்கும் வழித்தங்கல் விடுதியையே " சாவடி " என்பர்.
"சாவடி " என்ற சொல்லுக்கு இடம் என்றும் பொருள் உண்டு. பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களுக்குப் பொதுப் பெயராகவே " சாவடி " என்னும் பெயர், தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சுங்கச்சாவடி -
சுங்கவரி வாங்கும் இடத்தைச் "சுங்கச்சாவடி " என்பர்.
வாக்குச்சாவடி - வாக்காளர்கள் வாக்களிக்கும் இடத்தை " வாக்குச்சாவடி " என்பர்.
வழிப்போக்கர்களின் பயன்பாட்டிற்காகச் சத்திரம், சாவடி கட்டுதலும், அவற்றை அறப் பொருளாய் நடத்துதலும் அக்கால வழக்கமாக இருந்தது. மன்னர்களும் , வள்ளல்களும் வழிப்போக்கர்களுக்காக அமைக்கப்படும் சத்திரம் சாவடிகளுக்கு நிலக்கொடை, பொருட்கொடை வழங்கிய செய்திகள் பலவற்றை இலக்கியங்களில் காணலாம் .
சத்திரம் என்னும் பெயர்களில் ஊர்கள் பல உண்டு .
ஒட்டன்சத்திரம்
புதுச்சத்திரம்
சாவடி என்னும் பெயர்களிலும் ஊர்கள் பல உண்டு.
கந்தன் சாவடி
கொத்தவால் சாவடி.
அக்காலத்தில் மாடுகளால் இழுத்துச் செல்லப்படும் மாட்டு வண்டிகள் போன்றவையே மக்கள் போக்குவரத்துக்குப் பயன்பட்டன. பெருமளவில் கால்நடையாகவும் மக்கள் பயணம் செய்தனர். ஊர்களுக்கு இடைப்பட்ட சாலைகள் எல்லாம் இரவில் பயணம் செய்வதற்குப் பாதுகாப்பற்றவையாகவே இருந்தன. இதனால் தொலைதூரப் பயணிகள் இரவில் தங்கிச் செல்வதற்குப் பாதுகாப்பான இடங்கள் தேவைப்பட்டன.
கோடைக் காலங்களில், பகல் நேரங்களிலும் கூட மனிதர்களுக்கு மட்டுமின்றி, அவர்கள் பயணம் செய்யும் வண்டிகளை இழுத்துச் செல்லும் மாடுகள் இளைப்பாறவும், உணவு, தண்ணீர் முதலியன பெற்றுக் கொள்வதற்கும் வேண்டிய தேவைகள் இருந்தன. இதற்கெல்லாம் தீர்வுகாணும் இடங்களாகவே சத்திரமும், சாவடியும் இருந்தன. அண்மையில் பழநி ஐவர்மலையில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சத்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழ்ந்த அறவாழ்வின் அடையாளமாகவே சத்திரமும், சாவடியும் திகழ்கின்றன.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்