தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்கள் எழுதிய " நீராரும் கடலுடுத்த " என்ற பாடலைப் பாட வேண்டும் என்ற வேண்டுகோள் , 1913 ஆம் ஆண்டு " கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் " ஆண்டறிக்கையில்தான் முதன்முதலில் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக 1914 ஆம் ஆண்டு முதல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் பாடி வந்தனர். அதே போல கரந்தைச் சங்கத்தைத் தாய் சங்கமாக ஏற்று ஆங்காங்கே உருவாக்கப்பட்ட சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப் பாடலாக இப்பாடல் பாடப்பட்டு வந்தது. கரந்தைத் தமிழ்ச்சங்க மேடைகளில் கோலோச்சும் பாடலாக " நீராரும் கடலுடுத்த " பாடல் விளங்கியது. தமிழ்நாடு அரசு இப்பாடலைத் தமிழக அரசின் பாடலாக ஏற்குமாறு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் தொடர்ந்து வேண்டுகோள்கள் வைக்கப்பட்டு வந்தன.
நீண்ட போராட்டத்திற்குப்பின் 1970 ஆம் ஆண்டு "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை " தேர்வு செய்யும் முடிவுக்கு தமிழக அரசு வந்தது. அப்போது இரண்டு பாடல்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
ஒன்று, மனோன்மணீயம் பெ.சுந்தரனார் எழுதிய " நீராரும் கடலுடுத்த " என்ற பாடல்.
மற்றொரு பாடல் எது தெரியுமா?
இதுதான் தற்போது தமிழகம் முழுவதும் கேட்கப்படுகின்ற வினா. " கரந்தைக் கவியரசு " அரங்க. வேங்கடாசலம் அவர்கள் எழுதிய " வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே " என்ற பாடல்தான் அது.
" வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே!
மன்னியமூ வேந்தர்தம் மடிவளர்ந்த மகளே!
தேனார்ந்த தீஞ்சுனைசால் திருமாலின் குன்றம்
தென்குமரி ஆயிடைநற் செங்கோல்கொள் செல்வி
கானார்ந்த தேனே , கற்கண்டே , நற்கனியே!
கண்ணே , கண்மணியே , அக்கட்புலம் சேர்தேவி!
ஆனாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே!
அம்மேநின் சீர்முழுதும் அறைதல்யார்க் கெளிதே?"
" வானுயர்ந்த பொதிகை மலை மீது வளர்கின்ற மதியே,
பெருமை மிக்க மூவேந்தர்களின் மடியில் மகளாக வளர்ந்தவளே!
தேன்போல இனிக்கும் நீர்ச் சுனைகள் நிறைந்த வேங்கட மலைக்கும் (திருமாலின் குன்றம் என்பது திருப்பதியைக் குறிக்கிறது) , தெற்கே உள்ள குமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆட்சி செய்பவளே!
காடுகளில் உள்ள தேனடையிலிருந்து வடியும் தேன்போன்ற தமிழே!
கற்கண்டாக இனிப்பவளே, நற்கனியாக சுவை தருபவளே, கண்ணாகவும் , கண்ணின் மணியாகவும் இருந்து காட்சியைத் தருபவளே!
அள்ள அள்ளக் குறையாத இலக்கியங்களைக் கொடுத்து, எங்கள் அறிவை விரிவு செய்பவளே!
எங்கள் வாழ்நாளை நீட்டிக்க வந்த அமிழ்தமே!
அன்னையே, உம் பெருமை முழுவதும் சொல்லுதல் இங்கு யார்க்கு எளிய செயலாகும்? அது அரிய செயல் அன்றோ? என்று தமிழைப் போற்றுகிறார் வேங்கடாசலனார்.
சுந்தரனாரின் பாடலோ,
" தெக்கணமும் அதில்சிறந்த திராவிட நல் திருநாடும் " என்று திராவிடத்தின் பெருமையைப் பேசுகிறது.!
அரங்க. வேங்கடாசலனாரின் பாடலோ,
அன்னைத் தமிழின் அருமை பெருமைகளை, அணுஅணுவாய் அளந்து பேசுகிறது.
திராவிடமா?
தமிழா?
இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது?
வினா எழுகிறது .
தேர்ந்தெடுக்கும் அதிகாரம் தமிழன் கைகளில் இல்லாத காரணத்தினால்
திராவிடம் வென்றது.
தமிழ் தோற்றது.
11.03.1970 அன்று
" நீராரும் கடலுடுத்த " என்ற பாடலை "தமிழ்த்தாய் வாழ்த்தாக " அறிவித்தது தமிழக அரசு.
காலம் மாறும்.
அன்று
காட்சி மாறும்.
தமிழ் வெல்லும் - அதை
நாளைய வரலாறு சொல்லும்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்