Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " அறுசுவை உண்டி "



நம் ஊரில் எத்தனையோ குடும்பங்களை நாம் பார்க்கிறோம். அதில் ஒரு சில குடும்பத்தைப் பார்க்கும்போது " வாழ்ந்து கெட்ட குடும்பம் " என்று கவலையோடு  சொல்வோம். காரணம்,  ஒரு காலத்தில் அவர்கள் செல்வ செழிப்போடு வாழ்ந்திருப்பார்கள். காலம் செய்த கோலத்தால் அனைத்தையும் இழந்து,  ஆயிரம் பேருக்கு சோறு போட்ட கைகள் அடுத்தவேளை சோற்றுக்காக அடுத்தவர்களிடம் கையேந்தி நிற்பார்கள். எந்த நேரத்தில் யாருக்கு என்ன நேரும் என்பது யாருக்கும் தெரியாது.  அதுதான் வாழ்க்கை.


" அறுசுவை உண்டி அமர்ந்துஇல்லாள் ஊட்ட 

மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் 

சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனின் செல்வமென்று 

உண்டாக வைக்கப்பாற்று அன்று.

( நாலடியார் - 01)


அறுசுவை உணவை அழகாகச் சமைத்து,  கணவன் அருகில் அமர்ந்து மனைவி அன்போடு ஊட்டுகிறாள். கணவனோ வயிறு நிறைய உண்கிறான். உணவு போதும் என்கிறான். கடைசியாக ஒருபிடி என்று சொல்லி மனைவி ஊட்ட முயல்கிறாள்.  மறுபிடி சோறு வேண்டாம் வேண்டாம் என்று சொல்லி மறுக்கிறான். இப்படிப்பட்ட செல்வ நிலையிலும்,  இன்ப நிலையிலும் ஒருவன் இருக்கிறான். காலம் சுழல்கிறது. கதை மாறுகிறது. காட்சி மாறுகிறது. 


அனைத்து செல்வங்களையும் இழக்கிறான். கைப்பிடி சோற்றுக்காக கால் வலிக்க நடக்கிறான். சோறும் இல்லை. சோறுபோட சொந்தமும் இல்லை. கடைசியில் வீடு வீடாகச் சென்று  பிச்சைக்காரனைப் போல  கூழ் வேண்டி நிற்கிறான். அவர்கள் கொடுத்த கூழை மிகப்பெரிய செல்வமாய் போற்றி உண்கிறான். செல்வத்தின் நிலை இதுதான். புரிந்து கொண்டவர்கள் பிழைத்துக் கொள்வர். புரிந்து கொள்ளாதவர்கள் கடைசியில் கூழுக்குக் கூட வழியில்லாமல் கையேந்தி நிற்பார்கள். 

இதுவே உண்மை. 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்