சோழநாட்டில் பொன்னன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான். அவன் பெரும் செல்வந்தன். பொன்னும் மணியும் குவித்து வைத்திருந்தான். அவனுக்குப் பருத்த தொந்தி. பட்டாடை, பொன் அணிகலன்கள் அணிந்து அவன் தெருவில் நடந்தால், "இதோ செல்கிறார் பொன்னன் ஐயா" என்று ஊரே வியந்து பார்க்கும். அவனுக்கு ஒரே எண்ணம்: "இந்த உடலும் செல்வமும் என்றும் நிலைக்கும். நான் யாருக்கும் கீழானவன் இல்லை."
ஒருநாள் பக்கத்து வீட்டு உழவன் ஒருவன், பசியால் வாடி அவனிடம் வந்தான். "ஐயா, ஒரு படி அரிசி கடன் தாருங்கள். அறுவடையானதும் திருப்பித் தருகிறேன்" என்றான். "உனக்குக் கொடுத்தால் என் செல்வம் குறையும். ஆம், கொடுக்க கொடுக்க செல்வம் குறையும். போ, போ உனக்கு ஒன்றும் கொடுக்க முடியாது" என்று விரட்டினான் பொன்னன். "ஐயா, உடல் நிலையற்றது. இன்று இருப்பது நாளை இல்லை" என்று சொல்லிச் சென்றான் அந்த உழவன். பொன்னன் அதைக் காதில் வாங்கவில்லை. "இவன் பொறாமையால் பேசுகிறான்" என்றான். சில நாளில் பொன்னனுக்குக் கடும் காய்ச்சல் வந்தது. மருத்துவர் வந்தார், மருந்து கொடுத்தார். பயனில்லை. ஏழாம் நாள் பொன்னன் இறந்தான்.
ஊரே திரண்டு வந்தது. பெரும் பகட்டாகச் சுடுகாட்டுக்கு அவன் உடலை எடுத்துச் சென்றனர். சுடுகாட்டில் எரியூட்டிவிட்டு எல்லோரும் திரும்பினர். மறுநாள் அந்த இடத்தில் நாய்கள் கூடின, நரிகள் ஊளையிட்டன, கழுகுகள் வட்டமிட்டன. பொன்னனின் எரியாத எலும்புத் துண்டுகளைப் பிய்த்துத் தின்றன. அப்போது அந்த ஏழை உழவன் அங்கு வந்தான். சுடுகாட்டைப் பார்த்து, "ஐயா பொன்னரே, உம் பருத்த தொந்தி உம்முடையது என்று நீர் இருந்தீர். இன்று அதுவே நாய், நரி, கழுகுக்கு உணவாகிவிட்டது. இருப்பது பொய், போவது மெய் என்பதை இப்போதாவது உணர்ந்தீரா?"என்றான். அருகில் இருந்த பட்டினத்தடிகள் இதைப் பார்த்தார். அவர் கண்களில் நீர் வழிந்தது. உடனே இப்பாடலைப் பாடினார்.
"இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினையுன் னாதே - பருத்ததொந்தி
நம்மதுஎன்று நாம்இருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதுஎன்று தாம்இருக்கும் தான்."
(பட்டினத்தார் பாடல்கள் - 396)
என் மனமே கேள்! இவ்வுலகில் பிறந்து இருப்பது பொய், ஒருநாள் இறந்து போவதே மெய் என்று எண்ணி, யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காதே. ஏனெனில், பருத்த தொந்தியானது நம்முடையது என்று நாம் இருக்க, அதையே நாய், நரி, பேய், கழுகு ஆகியவை தம்முடைய உணவு என்று எண்ணிக் கொண்டிருக்கும்.
பட்டினத்தார் இப்பாடலில் இரண்டு பெரிய உண்மைகளைச் சொல்கிறார். "பருத்த தொந்தி நம்மது" என்று மயங்குகிறோம். பொன்னால் ஒப்பனை செய்கிறோம், பட்டாடையால் போர்த்துகிறோம். ஆனால் உயிர் போனபின் அது நாய் நரிக்கு உணவு. இதுதான் உடம்பின் உண்மை நிலை. "இருப்பது பொய் போவது மெய்" என்று உணர்ந்தால், பிறருக்குத் தீங்கு செய்யத் தோன்றாது. இந்த உடலே நிலையில்லாதபோது, இதற்காகப் பொறாமை, வஞ்சம், பகை எதற்கு? எல்லாம் விட்டுவிட்டுப் போகப் போகிறோம். இந்த உடல் ஒரு வாடகை வீடு. என்றோ ஒருநாள் காலி செய்துதான் ஆக வேண்டும். அதற்குள் நல்லது செய்வோம். பிறர் மனம் நோகாமல் வாழ்வோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரைத் திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
(அலைப்பேசி - 9965414583 )

0 கருத்துகள்