முயல் வேட்டைத் திருவிழா என்பது தமிழ்நாட்டில், குறிப்பாக பெரம்பலூர் மாவட்ட கிராமப் புறங்களில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய, வினோத திருவிழா ஆகும்.
பெரும்பாலும் சித்திரை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் கிராமப் பொதுமக்கள் ஒன்று கூடி முயல்களை வேட்டையாடி, அந்த முயல்களைக் கொண்டு அம்மனுக்குப் படையலிட்டுக் கொண்டாடு கிறார்கள்.
இந்த முயல் வேட்டைத் திருவிழா, தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வாகவும், கிராம மக்களின் ஒற்றுமையைப் பலப்படுத்துவதாகவும், முன்னோர்களின் வேட்டை வாழ்க்கைமுறையை நினைவுகூர்வதாகவும் அமைந்திருக்கிறது.
முயல் வேட்டைத் திருவிழா அன்று அதிகாலையில் கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் எழுந்து, ஊரின் மாரியம்மன் கோவில் முன்பு கூடுவார்கள்.
அம்மனுக்கு சிறப்புப் பூஜை முடிந்தவுடன், இளைஞர்களும், பெரியவர்களும் குத்தீட்டிகள், உருட்டுக் கட்டைகள் மற்றும் வேட்டை நாய்களுடன் முயல் வேட்டைக்கு காட்டுப்பகுதிக்கு புறப்பட்டுச் செல்வார்கள்.
அங்கு புதர்களில் மறைந்திருக் கும் முயல்களை வேட்டையாடு வார்கள். அப்படி வேட்டையாடிப் பிடித்த முயல்களுடன், கிராமத் தின் ஒரு பகுதியில் மாலை நேரத்தில் கூடுவார்கள்.
அப்போது அங்கு, வேட்டைக்குச் சென்றவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள், அவர்களுக்கு உணவு, புத்தாடையை எடுத்துக் கொண்டு வருவார்கள்.
வேட்டைத் திருவிழாவில் வேட்டையாடப்பட்ட முயல்கள்
வேட்டைக்குச் சென்ற அனைவரும் குளித்துப் புத்தாடை அணிந்த பின்னர், முயல்களை குச்சியில் தோரணமாக கட்டித் தொங்கவிட்டு, மேளதாளங்களுடன் ஆடிப்பாடி தெருக்களில் ஊர்வலமாக வந்து கோவிலை அடைவார்கள்.
ஊர்வலத்தின்போது, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கண் திருஷ்டி நீங்கவும், நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக இருக்கவும் அவர்களுக்கு முகம், உடம்பெங்கும் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அழைத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
தொடர்ந்து, அம்மனுக்கு முயல்கள் பலி கொடுக்கப்பட்டு படையலிடப்படும். பின்னர் முயல் இறைச்சியை சம பங்குகளாகப் பிரித்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்குவார்கள்.
அந்த இறைச்சியைச் சமைத்து வீட்டிலும் அம்மனுக்குப் படையல் போட்டு பூஜை செய்து, பின்னர் அதை உண்டு மகிழ்வார்கள்.
இந்த முயல் வேட்டைத் திருவிழா குறித்து பெரம்பலூர் மாவட்ட கிராம மக்கள் கூறியதாவது...
"சித்திரை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் இந்த திருவிழாவில், முன்னோர்களின் வழிபாட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் பெரியோரும் இளையோரும் உற்சாகத் தோடு பங்கேற்கிறார்கள்.
வேட்டையாடிக் கொண்டு வந்த முயல்களை அம்மனுக்குப் படைத்து, எங்களுக்கு நோயின்றி ஆரோக்கியம் நீடிக்க அருளை வேண்டுவோம்.
குழந்தைகள் மீதான கண் திருஷ்டி நீங்கவும், அனைவரும் நோய் நொடியின்றி இருக்கவும் இந்த முயல் வேட்டைத் திருவிழா நடத்தப்படுகிறது.
வழக்கமாக, வேட்டையாடிய முயல் இறைச்சியை சமமாகப் பங்கு பிரித்து, குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உண்டு களித்து வந்தோம்.
இந்நிலையில், வன விலங்கான முயல் வேட்டைக்கு வனத்துறையினர் தடை போட்டுவிட்டனர். எனவே கடந்த சில ஆண்டுகளாக, பண்ணை வளர்ப்பு முயல்களை வாங்கி, சம்பிரதாயப்படி வேட்டையாடி, அம்மனுக்குப் படைத்து திருவிழாவை சிறப்புற நடத்தி வருகிறோம்."

0 கருத்துகள்