திருவாரூர் மாவட்டம் தண்டலைச்சேரி எனும் கிராமத்தில் அமைந்துள் ளது, நீள்நெறிநாதர் திருக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென் கரை தலங்களில் இது 110-வது தலமாகவும், திருஞானசம்பந்தரால் பாடப் பட்ட தலமாகவும் இக் கோவில் விளங்குகிறது. இத்தல இறைவன் நீள்நெறி நாதர் என்றும், இறைவி ஞானாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
தல வரலாறு
இப்பகுதியை கோச்செங் கண்ணன் என்ற சோழ மன்னன் ஆட்சி செய்து வந்தான். தீவிர சிவ பக்தனான மன்னன், சிவபெருமானுக்கு நூற்றுக்கணக்கான மாடக்கோவில்களை கட்டி வழிபட்டான். ஒரு முறை மன்னனுக்கு தொழு நோய் ஏற்பட்டது. பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் மன்னனின் நோய் குணமாகவில்லை. இதையடுத்து இறைவன் மீது நம்பிக்கை கொண்டு ஒவ்வொரு ஆலயமாக சென்று மன்னன் வழிபட்டு வந்தான்.
ஒரு நாள் மன்னனின் கனவில் தோன்றிய சிவ பெருமான், "கல் மாடு புல் தின்னும் ஆலயத்திற்கு சென்று வழிபடு. உன் நோய் சரியாகும்" என்று கூறி மறைந்தார். 'இப்படி ஒரு ஆலயம் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்ட மன்னன், அந்த கோவிலைத் தேடி அலைந்தான். அவ்வாறு இத்தலம் வந்த மன்னன், இங்குள்ள சிவபெருமானுக்கு அருகம்புல் மாலை ஒன்றை அணிவிக்க முயன்றான்.
அப்போது சிவனின் எதிரில் இருந்த கல் நந்தி உயிர் பெற்று எழுந்து, மன்னனின் கையில் இருந்த அருகம்புல் மாலையை கவ்விக் கொண்டு ஓடியது. இதைக் கண்டு வியப்படைந்த மன்னன், இறைவன் கனவில் உணர்த்திய இடம் இதுதான் என்பதை புரிந்துகொண்டான். இதையடுத்து இத்தல இறை வனை மனமுருக வேண்டி வழிபட்டான். பின்பு, மன்னனது நோயும் குணமானது. இதனால் மனம் மகிழ்ந்த மன்னன், இந்த கோவிலுக்கு பல திருப்பணி கள் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆலயத்துக்கு அருகில் கண்ணமங்கலம் என்ற ஊர் இருந்தது. அவ்வூர், தற்போது கண்ணந்தங்குடி என்று அழைக்கப்படுகிறது. அந்த ஊரில் தாயனார் என்ற சிவனடியார் ஒருவர் வசித்து வந்தார். செல்வந்தரான அவர், தினமும் இத்தல இறைவனுக்கு செந்நெல் அரிசியில் உணவும், செங்கீரையும், மாவடுவும் நைவேத்தியமாக படைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் மனைவியும், அவரை போலவே இறைவன் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர்.
ஒரு சமயம் இருவரின் பக்தியையும் சோதிக்க எண்ணினார், சிவபெருமான். அதன்படி, தாயனாரின் செல்வம் குறைந்து, வறுமை நிலை ஏற்பட் டது. தனது நிலத்தில் பணியாட்களை வைத்து பயிர்த்தொழில் செய்துவந்த அவர், கூலிக்கு வேறு நிலத்தில் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் தனக்கு கூலியாக கிடைக்கும் நெல்லை அரிசியாக்கி இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதை தொடர்ந்தார். கணவன் - மனைவி இருவரும் தண்ணீர் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்தனர்.
ஒரு நாள் இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதற் காக, செந்நெல் அரிசி உணவு, செங்கீரை, மாவடு' போன்றவற்றை கூடையில் வைத்து எடுத்துச் சென்றனர். கோவிலுக்கு செல்லும் வழியில் பசி மயக்கம் காரணமாக தாயனார் மயங்கி விழப் போக, அவர் மனைவி அவரை தாங்கி பிடித்தார். இருப்பினும், அவர் கூடையில் வைத்திருந்த நைவேத்தியப் பொருட் கள் அனைத்தும் மண்ணில் விழுந்து வீணானது.
இதனால் கண் கலங்கிய தாயனார், "இது நாள் வரை தவறாது செய்துவந்த நைவேத்தியத்தை இன்று செய்ய முடியாமல் போனதே" என்று வேதனை கொண்டார். துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாத அவர், தன்னிடம் இருந்த கதிர் அறுக்கும் அரிவாளைக் கொண்டு தன்னுடைய கழுத்தை அறுக்க முற்பட்டார். அப்போது, மண்ணுக்குள் இருந்து உத்ராட்சமும், திருநீறும் அணிந்த கை ஒன்று அவரை தடுத்தது.
'தன்னை தடுத்தது சிவபெருமானின் திருக்கரமே' என்பதை உணர்ந்த தாயனார், மெய்மறந்து நின்றார். பின்னர், தாயனாருக்கு இத்தலத்தில் சிவனும், பார்வதி யும் காட்சி அளித்து அருள்புரிந்ததாக கூறப்படுகிறது. அன்றுமுதல் தாயனார், 'அரிவாள் தாய நாயனார்' (அரிவாட்டாய நாயனார்) என்று அழைக்கப்பட்டார். 63 நாயன்மார்களில் ஒருவராகவும் இருக்கும் பேறு பெற்றார்.
கோவில் அமைப்பு
சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவில், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படு கிறது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயம், ராஜகோபுரம் இன்றி காட்சி அளிக்கிறது. இந்த ஆலயத்தின் முகப்பு வாசலை கடந்து செல்லும் போது, இடதுபக்கம் அதிகார நந்தி சன்னிதி உள்ளது. கோவிலில் கொடிமரம் இல்லை. பலிபீடம், நந்தி காணப்படுகிறது. கருவறையில் இறைவன் நீள்நெறி நாதர், சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். இவர் 'ஸ்திரபுத்தீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
கருவறை முன்மண்டபத்தில் கோச்செங்கண்ணன், அரிவாட்டாய நாயனார், நால்வர் திருமேனிகள் உள்ளன. அம்பாள் ஞானாம்பிகை தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கு காட்சி அளிக்கிறார். பிரகாரத்தில் சுப்பிரமணியர், விநாயகர், நவக்கிரகங்கள் சன்னிதிகளும் இருக்கின்றன. அரிவாட்டாய நாயனாரும், அவர் மனைவியும் இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பது, அரிவாட்டாய நாயனார் உயிரை மாய்க்கும் பொழுது இறைவன் திருக்கரம் கொண்டு காப்பது, அரிவாட்டாய நாயனாருக்கும். அவர் மனைவிக்கும் அளிப்பது போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது.அ
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் காட்சி தருகின்றனர். வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர் பூஜித்த சிவலிங்கங்களும், சூரியன், சந்திரன் சன்னிதிகளும் காணப்படுகின்றன. பொது வாக அனைத்து கோவில்களிலும் நடராஜரின் தலையில் கங்காதேவி வீற்றிருப்பார். ஆனால் இத்தலத் தில் உள்ள நடராஜரின் பாதத்தில் கங்காதேவி அமர்ந்திருப்பது தனிச் சிறப்பாகும்.
கருவறையின் பின்புறத்தில் தல விருட்சமான குருந்த மரம் உள்ளது. அதன் அடியில் சிவலிங்கமும் காணப்படுகிறது. தல தீர்த்தமாக ஓமக தீர்த்தம் உள்ளது.
வழிபாடு
தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தோல் நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, நீள்நெறிநாதரை வழிபட்டால் நோய்கள் விரைவில் குணமாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. விவசாயிகள், தங்கள் நிலங்களில் பயிர் செய்வதற்கு முன்பாக இங்குள்ள இறைவனை வழிபடு வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கோவில், காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப் பட்டிருக்கும்.
அமைவிடம்
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் தண்டலைச்சேரி நீள்நெறிநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

0 கருத்துகள்