" மன்னவன் ஏற்பித்தானே "
ஒருவர் நம்மோடு இருக்கும்வரை அவர்களது அருமை நமக்குத் தெரியாது. அவர்களைவிட்டு நாம் விலகி நிற்கும்போதுதான் அவர்களின் அருமை பெருமைகளை உணர்ந்து நம் விழிகள் கண்ணீர் மழையைக் கனமழையாகப் பொழியும். இதுதான் வாழ்க்கை உணர்த்தும் பாடம். நல்லவர்களின் நட்பும், நல்ல வாழ்க்கையும் அது இருக்கும்போது நமக்குத் தெரியாது. அதை இழந்து நிற்கும்போதுதான் அது நமக்குத் தெரியும். இது நம் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஔவையார் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. வாருங்கள் அதை அறிந்து கொள்வோம்.
ஒருமுறை பாண்டிய மன்னன் மிக வலிமையுடன் விளங்கினான். கொற்கைத் துறையினின்று வஞ்சி மாநகர் வரைக்கும் அவனுடைய ஆட்சி எல்லை பரவியிருந்தது. அவனுடைய விருந்தினராக ஔவையார் சிலகாலம் தங்கியிருந்தார். அவன் அவரை மிகவும் அன்புடன் நடத்தி அறுசுவை விருந்தளித்துப் போற்றினான். பின்னர், அவனிடம் விடைபெற்றவராகத் தம்முடைய சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் ஔவையார்.
கால்நடையாகவே அவர் நடந்தார். வழியிடையில் மக்கள் படுகின்ற துயரம் அவரை வாட்டியது. உணவுக்கு எவரிடமாவது கேட்பார், அங்கே கஞ்சியும் கூழுமே அவருக்குக் கிடைத்தன.
மன்னனின் அரண்மனை உணவை நினைத்துக் கொண்டார். மக்களின் உணவையும் கருதினார். அவர் உள்ளம் வெதும்பியது. அவற்றோடு தம்மையும் ஈடுபடுத்தி ஒரு பாடலொன்றைப் பாடினார்.
"சிறுகீரை வெவ்வடகும் சேதாவின் நெய்யும்
மறுப்படாத் தண்தயிரும் மாந்தி - வெறுத்தேனை
வஞ்சிக்கும் கொற்கைக்கும் மன்னவனேற் பித்தானே
கஞ்சிக்கும் புற்கைக்கும் கை. "
( ஔவையார் தனிப்பாடல்கள் - 85)
“சிறுகீரையை வதக்கிச் சூடாக வைத்த கறியுடனும், பசுவின் நெய்யுடனும், குற்றமற்ற குளிர்ந்த தயிருடனும் உணவுண்டு, அது வெறுத்துப் போனதால் பிரிந்தும் வந்தேன். அது பொறுக்காத பாண்டிய மன்னன், வஞ்சிக்கும் கொற்கைக்கும் இடையே என்னைக் கஞ்சிக்கும் கூழுக்கும் கையேந்தி நிற்கும்படியாகச் செய்துவிட்டான்" என்கிறார் ஔவையார். இப்பாடலில் பாண்டிய மன்னனை இகழ்வதுபோல புகழ்கிறார் ஔவையார். பாண்டிய மன்னன் வகைவகையாய் சமைத்து தனக்கு வயிறார உணவளித்ததைப் பெருமையோடு சொல்கிறார் ஔவையார்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)
Key words
Tamil history, Tamil kings, mystery stories Tamil, மன்னர்கள் வரலாறு, Tamil culture, high CPC Tamil keywords, Tamil mythology, ஆன்மிக மர்மங்கள்
0 கருத்துகள்