" சுடச்சுடரும் பொன்போல் "
ஓர் ஊரில் யார் அறிவாளி? என்று ஒரு போட்டி நடைபெற்றது.
இளைய தலைமுறைதான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொன்னார்கள் . அகவையில் பெரியவர்கள்தான் அறிவாளிகள் என்று முதியவர்கள் சொன்னார்கள் . சரி யார் அறிவாளிகள்? என்று பார்க்க ஓர் இளைஞர், ஒரு முதியவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருவருக்கும் ஒரு செடியைக் கொடுத்து ஒரு திங்கள் கால அளவு கொடுத்தனர். "அதற்குள் யார் இந்தச் செடியை நன்றாக வளர்க்கிறார்கள் என்று பார்க்கலாம்" என்றார்கள்.
இளைஞன் செடியை நல்ல இடமாகத் தோண்டி நட்டு வைத்து நாள்தோறும் நீரும் உரமும் தெளித்து நன்றாக வளர்த்தான். ஆனால், முதியவர் நட்டு வைத்ததோடு சரி. தண்ணீரும் ஊற்றவில்லை உரமும் போடவில்லை.
ஒரு திங்கள் ஓடியது இளைஞன் வைத்த செடி நன்றாக வளர்ந்திருந்தது. முதியவர் வைத்த செடியோ சிறியதாக வளர்ந்திருந்தது.
ஒருநாள் இரவு திடீரென்று பெரிய காற்றுடன் மழை பெய்தது. இளைஞன் வைத்த செடி காற்றில் ஒடிந்து மழையில் அடித்துச் செல்லப்பட்டது. ஆனால், முதியவர் வைத்த செடி மட்டும் அப்படியே மழையையும், புயலையும் தாங்கி நின்றது. மறுநாள் காலை இளைஞன் முதியவரிடம் " ஐயா இதற்கு என்ன காரணம்? நான் நாள்தோறும் நீர் ஊற்றி உரம்போட்டு நன்றாக வளர்த்து வைத்திருந்த செடி ஒடிந்து மழையில் அடித்துச் செல்லப்பட்டது.
நீங்கள் தண்ணீர் கூட ஊற்றவில்லை. ஆனால், நீங்கள் வளர்த்த செடி மட்டும் எப்படி புயல் மழையைத் தாங்கி நிற்கிறது? " என்று கேட்டான் .
அதற்கு அந்த முதியவர்,
"நீ எல்லாவற்றையும் அதற்குக் கொடுத்ததால், அது சோம்பேறியாகிவிட்டது. அதனால் அது வேர்விடாமல் அப்படியே இருந்துவிட்டது. நான் வைத்த செடியோ நான் நீர் ஊற்றாததால் உயிர் வாழ தனக்கான நீரைத்தேடி பல இடங்களில் தன் வேரைச் செலுத்தியது. நிலத்தில் வேர் ஊன்றி நன்கு வளர்ந்துவிட்டது. இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது " என்றார். தனக்குத் தேவையானவற்றை எல்லாம் தானே தேடிக் கொள்பவர்கள் எல்லோருமே தனித்து நிற்பார்கள். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவார்கள். அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ்பவர்கள் எல்லோருமே ஒருநாள் அடையாளம் தெரியாமல் போவார்கள். ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். உருக்கினால்தான் தங்கம்கூட தூய்மையான சொக்கத்தங்கம் ஆகும். உளி தாங்கும் கற்கள்தான் அழகிய சிலையாகும். தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படும் வீட்டு மரம் உறுதியாக நிற்காது. தானாக வளரும் காட்டு மரம்தான் உறுதியோடு நிற்கும். இதுதான் உண்மை.
"சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு."
(திருவள்ளுவர், திருக்குறள் - 267 )
தம்மைத் தாமே வருத்திக்கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப்போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.
" வறுமையைக் காட்டி
வளர்க்கப்படும் பிள்ளைகள்
எல்லாவற்றிலும் சாதிப்பார்கள்!
வசதியைக் காட்டி
வளர்க்கப்படும் பிள்ளைகள்
எல்லோரையும் சோதிப்பார்கள்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)
Key words
Tamil motivation for success,வாழ்க்கை வெற்றியின் ரகசியங்கள்,Success tips in Tamil,Self improvement Tamil,Business motivation Tamil,Positive thinking Tamil,Success quotes Tamil,Goal setting Tamil,Personal growth Tamil,Motivation speech Tamil
0 கருத்துகள்