இறைவன், தன் பக்தர்களைக் பல உருவங்களில் பல திருவிளையாடல்கள் நடத்தி உள்ளார். அந்த வகையில் சிவ பெருமானும், பார்வதி தேவியும் மான் உருவெடுத்து, திருவிளையாடல் நடத்திய தலம்தான், திருமாந்துறை. தற்போது 'மாந்துறை' என்று அழைக்கப்படும் இந்த ஊரில் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இது, தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 58-வது சிவத்தலமா கும். இங்கு அருள்பாலிக்கும் . இறைவன் 'ஆம்பரவனேஸ்வரர்' என்ற திருநாமத்துடன் அழைக் கப்படுகிறார்.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது. இங்கு ஆணும், பெண்ணுமாக இரண்டு மான்கள் தங்கள் இரு குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது அங்கு வேட்டையாட வந்த வேடன் ஒருவன், அந்த ஆண் மானையும், பெண் மானையும் அம்பு எய்து கொன்றான். பின்னர் அவற்றைத் தூக்கிக்கொண்டு இல்லம் திரும்பினான்.
இதனால் தாய், தந்தையரைக் காணாத இரு குட்டி களும் தவித்துப்போயின. உணவு கிடைக்காமல் பசியால் வாடின. இதைக் கண்ட மிருகண்டு முனிவரின் சீடர்கள், மனம் வெதும்பி இந்தச் சம்பவம் பற்றி முனிவரிடம் கூறினர். மிருகண்டு முனிவர், சிவபெருமானையும், பார்வதி தேவியையும் பிரார்த்தனை செய்தார். ஆனால் அவரது குரலைக் கேட்டும், கேட்காததுபோல் இருந்தார், சிவபெருமான். உடனே பார்வதிதேவிஈசனை நோக்கி, "சுவாமி, நாம் வசிக்கும் இந்த வனத்தில் தாய் தந்தையரை இழந்து, இரண்டு மான் குட்டிகள் துன்பப்படுகின் றன. தாங்கள் அவைகளை காப்பாற்ற வேண்டும்" என்றார்.
சிவபெருமான், "உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் அவர்களின் கர்ம பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். இந்த இரு மான் குட்டிகளும், அதன் தாய், தந்தையரும் முற்பிறவியில் மானிடராய் பிறந்தவர்கள். தங்கள் வீட்டு கன்றுகுட்டியை அவிழ்த்து விட்டு, அது பால் குடிக்கும் முன்பாகவே, பசுவின் மடியில் இருந்து பால் முழுவதையும் கறந்துவிடு வார்கள். பசுவிற்கும் சரியான உணவு கொடுப்பதில்லை. மாடு மேய்க்கும் இடையனுக்கும் கூலி கொடுப்பதில்லை. அந்தப் பாவங்களால்தான் இவர்கள் இங்கு மான்களாக பிறந்துள்ளனர். வேடனாக வந்து மான்களை வேட்டையாடியவன், முற்பிறவியில் இவர்களிடம் இடையனாக இருந்தவன். தன்னுடைய கூலியின் நிமித்தம், இரு மான்களையும் வேட்டையாடிச் சென்று உணவாக்கிக் கொண்டான்" என்றார். தேவி, “ஆனால், புண்ணியம் செய்தவர்கள் தானே, இந்த புனித வனத்தில் பிறப்பார்கள்" என்றார்.
இறைவன், "எனது சிறந்த பக்தரான உக்ரதபஸ், ஒருமுறை யாத்திரையாக இங்கு வந்து தங்கினார். என்னை பூஜிக்க அவருக்கு மலர்கள் கிடைக்க வில்லை. அப்போது, போன பிறவியில் சிறுவர்களாக இருந்த இந்த மான் குட்டிகளிடம், பூஜைக்கு மலர் வேண்டும் என்று கேட்டார். அந்த இரண்டு சிறுவர்களும் தொலைவில் இருந்த தோட் டத்தில் இருந்து மலர்களை பறித்து வந்து உக்ரதபஸிடம் கொடுத்தனர். உக்ரதபஸ், அந்த மலர்களால் என்னை பூஜித்து மகிழ்ந்தார். என்னை பூஜிக்க மலர் கொடுத்ததால், இந்த சிறுவர்களின் பாவங்கள் நீங்கி, இந்த புண்ணிய வனத்தில் மான் குட்டிகளாக பிறந்தனர். இவர்கள் செய்த புண்ணியத்தின் பயனாக அவர்களின் தாய், தந்தையரும் இங்கு பிறந்தனர்" என்றார்.
சிவபெருமானின் விளக்கத்தால் பார்வதி தேவி தெளிவு பெற்றார். பின்னர், இருவரும் மான் உருவம் கொண்டு மான் குட்டிகளிடம் சென்றனர். பார்வதி தேவி, தாயை பிரிந்த மான் குட்டிகளுக்கு பால் புகட்டி காத்தார் என்கிறது ஆலய தல வரலாறு.
'ஆம்ரம்' என்றால் மாமரம் என்று பொருள். இந்த தலம் மாமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் இத்தலத்து இறைவன் 'ஆம்பரவனேஸ்வரர்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
ஆலய அமைப்பு
இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. அதன் சுவரில் விநாயகர், ஆறுமுகன் காட்சி தருகின்றனர். ராஜகோபுரத்தின் எதிரில் நந்தி மண்டபம், பலிபீடம் உள்ளன. நந்தி மண்டபத்திற்கு வடக்கு பகுதியில் கருப்பண்ணசாமி, மதுரை வீரன், பண்டிதர் சாமி ஆகியோர் காட்சி தருகின்றனர். கோபுரத்தைக் கடந்ததும் அழகிய நீண்ட பிரகாரம் காணப்படுகிறது.
ஆலயம் ஒரு திருச்சுற்றுடன் விளங்குகிறது.திருச்சுற்றின் தெற்கில் தல விருட்சமான மாமரம் உள்ளது. தென் மேற்கில் விநாயகர் சன்னிதி, மயில் வாகனத்தில் சாய்ந்தபடி வள்ளி - தெய்வானை சமேத முருகன் சன்னிதி, கஜலட்சுமியின் சன்னிதிகள் உள்ளன. திருச்சுற்றின் வடக்கில் சண்டிகேசுவரர் சன்னிதி இருக்கிறது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர் கள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இங்கு நடுநாயகமாக சூரியன் தன் இரு தேவிகளுடன் மேற்கு நோக்கியபடி காட்சி அளிக்கிறார். மற்ற அனைத்து கிரகங்களும் அவரை பார்த்தபடி அமைக்கப்பட்டுள் ளன. இது ஒரு வித்தியாசமான தோற்றமாகும்.
ஆலயத்திற்குள் நுழைந்ததும் விசாலமான மகா மண்டபமும், வலதுபுறம் அன்னை வாலாம்பிகையின் சன்னிதியும் உள்ளது. அன்னை நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி புன்னகை தவ ழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள். அன்னையின் மற்றொரு திருநாமம் அழகம்மை என்பதாகும். மகா மண்டபத்தின் கிழக்கு திசையில் நால்வர் திருமேனி கள் உள்ளது.
மகாமண்டபத்தை அடுத்து கோவில் கருவறை அமைந்துள்ளது. கருவறையின் முன்பாக நந்தியும், இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் தண்டபாணியும் அருள்பாலிக்கிறார்கள். கருவறை நுழைவுவாசலில் - சுதை வடிவில் துவாரபாலகர்களின் திருமேனி காணப்படுகிறது. கருவறையில் மூலவர் ஆம்பரவ னேஸ்வரர் சுயம்புலிங்கமாகக் காட்சி அளிக்கின்றார். இவர் ஆதிரத்னேஸ்வார், சுந்தரத்னேஸ்வரர், மிருகண் டீஸ்வரர் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
அர்த்த மண்டபத்தின் வலதுபுறம் விநாயகர், சந்திர சேகரர், ஆம்பரவனேஸ்வரர், வாலாம்பிகை, நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர், பிரதோஷ நாயகர் ஆகி யோர் உற்சவ திருமேனியில் கிழக்கு திசைநோக்கி அருள்பாலிக்கின்றனர். இறைவனின் தேவக்கோட்டத் தின் தென்புறம் ஆதிசங்கரர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தியும், மேல் திசையில் மகாவிஷ்ணுவும், வடக்கில் பிரம்மா, துர்க்கையும் வீற்றிருக்கின்றனர். பைரவரும், சூரிய பகவானும் அருகருகில் நின்று காட்சி தருகின்றனர். வடக்குப் பிரகாரத்தில் பெரிய வில்வ மரம் உள்ளது.
விழாக்கள்
சித்திரை தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி சங்கர ஜெயந்தி விழா, ஆடி வெள்ளிக்கிழமைகள், ஆவணி யில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, தை மாதப் பிறப்பு, பொங்கல் விழா, மாசி மகம், மகா சிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது. பங் குனி மாதம் முதல் மூன்று நாட்கள் சூரியனின் ஒளிக் கதிர்கள் இறைவனின் மீது நேரடியாக விழும் என்பது தனிச்சிறப்பாகும்.
இக்கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால் கல்வியறிவு, தொழில் விருத்தி, வேலைவாய்ப்பு ஆகி யவை கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள் ளது. மூல நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அனைத்துவித தோஷங்களும் நீங்கி திருமணம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை.
கோவில், காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருச்சி - லால்குடி சாலையில் திருச்சியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் மாந்துறை திருத்தலம் அமைந்துள்ளது
0 கருத்துகள்