ஓர் ஊரில் விறகுவெட்டி ஒருவன் இருந்தான். அவனிடம் இறைப்பற்று மிகுதியாக இருந்தது. அதனால், அவன் அடிக்கடி கோவிலுக்குச் செல்வான்.கடவுளை மனமுருக வேண்டுவான். அதன் பின்புதான் காட்டுக்குப் போவான். விறகு வெட்டுவான்.அதைக் கொண்டுவந்து விற்பனை செய்வான். அதன் மூலமாக அவனுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. அதை வைத்து அவன் நிம்மதியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான். ஒருநாள் வழக்கம்போல அவன் காட்டுக்குப் போகும்போது அங்கே ஒரு நரியைப் பார்த்தான். அந்த நரிக்கு முன்னங்கால் இரண்டுமே இல்லை . எங்கோ அடிபட்டு இரண்டு கால்களையும் இழந்திருந்தது. அதுவொரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருந்தது. அதை இந்த விறகுவெட்டி பார்த்தான். அவன் மனதில் ஓர் ஐயம் ஏற்பட்டது. " இந்த நரிக்கு இரண்டு கால்களும் இல்லை . அப்படியிருக்கும்போது இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியைப் போக்கிக்கொள்ள முடியும் ?" என்று சிந்தித்தான்.
இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் பக்கமாக ஒரு புலி வந்தது அதைப் பார்த்த உடனே ஓடிப்போய் ஒரு மரத்துக்குப் பின்னாடி அவன் ஒளிந்துகொண்டான் , அங்கே என்ன நடக்கிறது என்று கவனித்தான். அந்தப் புலி என்ன செய்தது தெரியுமா ? ஒரு பெரிய மானை அடித்து இழுத்துக்கொண்டு வந்தது .அதைத் தன் பசி தீர உண்டது. தான் உண்டது போக மீதியை அங்கேயே போட்டுவிட்டு சென்றது. புலி சென்றபின், கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்துகொண்டே அந்த மானின் இறைச்சித் துண்டுகளுக்கு அருகே சென்றது . அங்கே மிச்சம் இருந்ததை உண்டது . இவ்வளவையும் மரத்துக்குப் பின்னால் நின்றுகொண்டு அந்த விறகுவெட்டி பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது அவன் சிந்தித்தான். " இரண்டு கால்களும் இல்லாத இந்த நரிக்கே இறைவன் உணவளிக்கும்போது நாள்தோறும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கும் நமக்கு உணவளிக்காமல் இருப்பானா ? அதுவும் இல்லாமல் நமக்கு இறைப்பற்று மிகுதியாக இருக்கிறது. நாம் எதற்காகத் தேவையில்லாமல் வெயிலிலும், மழையிலும் துன்பப்பட வேண்டும் ? எதற்காக வியர்வை சிந்தி விறகு வெட்ட வேண்டும் ? இப்படியாக அவன் சிந்தித்தான். அன்றுமுதல் அவன் காட்டுக்கே செல்லவில்லை .
கோடரியைத் தூக்கி எறிந்தான். பேசாமல் ஒரு மூலையிலே உட்கார்ந்து கொண்டான். நாள்தோறும் கோவிலுக்கு மட்டும் சென்று வருவான். " கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் . அவர் நமக்கு வேண்டிய உணவைக் கொடுப்பார் " என்று நம்பினான், கண்ணை முடிக்கொண்டு. கோவில் மண்டபத்திலேயே ஒரு தூணில் சாய்ந்து கொண்டான். ஒவ்வொரு நாளும் அவன் இப்படியே இருந்தான். உணவின்றி அவன் பசியால் வாடினான். அவன் உடம்பு இளைத்தது. எலும்பும் தோலுமாகக் காணப்பட்டான்.
ஒருநாள் இரவுநேரம். கோவிலில் யாருமே இல்லை.. இவன் மெதுவாகக் கண்ணைத் திறந்து இறைவனிடம் வேண்டினான் . " இறைவா! என்னுடைய அன்பிலே உனக்கு நம்பிக்கை இல்லையா ? நான் இப்படியே பட்டினி கிடந்து சாக வேண்டியது தானா ? காட்டில் இருந்த அந்த நரிக்கு மட்டும் புலி மூலமாக உணவு கொடுத்தாய் அல்லவா? , அதைப் பார்த்துவிட்டுத் தானே நான் இங்கே வந்தேன். என்னை மட்டும் இப்படி தவிக்க விட்டுவிட்டாயே இது முறையா ?" என்று கேட்டான். இப்போது கோவிலில் இருந்த கடவுள் மெதுவாகக் கண்ணைத் திறந்து, "முட்டாளே ! நீ பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது நரியிடம் இருந்து இல்லை . புலியிடம் இருந்து. தன் உழைப்பால் ( வேட்டையாடி) ஈட்டிய உணவைத் தான் உண்டது போக மற்ற உயிர்களுக்குக் கொடுத்து உதவவேண்டும் என்ற உயர்ந்த உள்ளத்தை புலியிடம் இருந்து நீ கற்றுக்கொள்ள வேண்டும் " என்றார் . உண்மையை உணர்ந்து கொண்ட விறகுவெட்டி வீடு திரும்பினான். நமக்கான தேவைகளை நம் உழைப்பால் நாம்தான் நிறைவேற்றிக் கொள்ளவேண்டும். அடுத்தவர்களையோ , ஆண்டவனையோ எதிர்பார்த்து கொண்ருக்கக் கூடாது. அது என்றைக்கும் ஏமாற்றத்தையே கொடுக்கும்.
"கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
தாளாளர்க்கு உண்டோ தவறு? "
( நாலடியார் - 191)
வரும் நீரை மிகுதியாகக் கொள்ளாத நீர் பெருகியுள்ள குளத்தின் கீழ் உள்ள பயிரானது, அந்தக் குளத்துப் பாய்ச்சலில் செழித்து வளர்வதுபோல எந்தவொரு முயற்சியுமின்றி சிலர், தம் உறவினர் தருவதை உண்டு வாழ்வர். அவ்வுறவினர் வறுமையுற்றபோது வேறு வழியின்றிச் சாவர். ஆனால் வாளின்மேல் கூத்தாடும் மகளிருடைய கண்ணைப்போல் இயங்கி, ஓடி ஆடிச் சுறுசுறுப்பாக உழைக்கும் முயற்சியுடையார்க்கு இத்தகைய பிழைபட்ட வாழ்வு உண்டாகுமோ? ஒருநாளும் உண்டாகாது. நாம் எப்போதுமே மற்றவர்களுக்கு எடுத்துக் கொடுக்கும் நிலையில் இருக்க வேண்டும். மற்றவர்களை எதிர்பார்த்து வாழும் நிலையில் இருக்கக் கூடாது.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)
Key words
நாலடியார் 191, தாளாளர்க்கு உண்டோ தவறு, நாலடியார் விளக்கம், தமிழ் பழமொழிகள், நாலடியார் அர்த்தம், Tamil moral poems, Naladiyar explanation, Tamil ethics, தமிழ் தத்துவக் குறள்நாலடியார், நாலடியார் 191, தாளாளர்க்கு உண்டோ தவறு, நாலடியார் விளக்கம், தமிழ் நாலடியார், நாலடியார் உரை, Tamil Naladiyar, Naladiyar Explanation in Tamil, Tamil moral poems, Tamil classic literature
0 கருத்துகள்