.
"நமக்குப் பெரும்பாலான துன்பங்கள் பகைவர்களால் வருவதில்லை.
நம் பக்கத்தில் இருப்பவர்களால் தான் வருகிறது. "
இந்தக் கவிதையை நான் யாரை நினைத்து எழுதினேன் தெரியுமா ? தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை நினைத்துத்தான் எழுதினேன் . ஆம், நம் தாய் மொழியான தமிழ் மொழிக்கு வருகின்ற பெரும்பாலான துன்பங்கள் எல்லாம் பகைவர்களால் வருவதில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களாலேயே வருகிறது என்பதை உணர்த்தவே இந்தக் கவிதையை எழுதினேன். கடந்த நூற்றாண்டுவரை நம் தமிழ்மொழிக்கு அயலவர்களாலும் , வந்தேறிகளாலும் பல்வேறு இன்னல்கள் வந்தன. நம் இனத்தையும், மொழியையும் அவர்கள் அடியோடு அழிக்க நினைத்தார்கள். அதையெல்லாம் கண்டு கொதித்தெழுந்த பாவேந்தர் பாரதிதாசன், கவிதையால் வீர முழக்கமிட்டார்
"தாயின்மேல் ஆணை !தந்தைமேல் ஆணை ! தமிழக மேல் ஆணை
தூய என் தமிழின் மேல் ஆணையிட்டு நான் தோழரே உரைக்கின்றேன்
தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனைஎன் தாய்தடுத் தாலும் விடேன்
எமை நந்துவாயென எதிரிகள் கோடி இட்டழைத் தாலும் தொடேன் "
( பாரதிதாசன், இசையமுது )
தமிழ்ப்பகை அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் அனைவரும் இவ்வாறு ஆணையிட வேண்டுமென்று வேண்டுகிறார் பாவேந்தர் பாரதிதாசன். "தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே" என்பார்கள். ஆனால், பாவேந்தர் பாரதிதாசனோ ஒரு படி மேலேபோய் " தமிழைப் பழித்தவனைத் தாயே தடுத்தாலும் விடாதே " என்று உணர்ச்சிப் பொங்க பாடுகிறார். பாவேந்தர் பாரதிதாசன் வழியில் சென்று தாயே தடுத்தாலும் தமிழ்ப் பகைவர்களை கொன்றழிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், நாம் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களைத்தான் கொல்ல வேண்டியிருக்கும் . ஆம் இந்த உலகில் தமிழை மிகுதியாக பழிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள்தான். ஆங்கிலத்தின் மீதுள்ள அளவற்ற பற்றின் காரணமாக ஆங்கிலமே உலக மொழி என்றும் , உலகம் முழுக்க பயணிக்க வேண்டுமென்றால் ஆங்கில மொழி போதுமானது என்றும் எண்ணிக்கொண்டு தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்கிறார்கள். அதோடு நின்றுவிடாமல் தமிழ் படித்தால் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி செல்ல முடியுமா? என்று தமிழைத் தரக்குறைவாகப் பேசுகிறார்கள்.
தங்கள் தாய்மொழியில் கல்வி கற்பவர்கள்தான் உலக அளவில் மிகச்சிறந்த அறிவாளிகளாக இருக்கிறார்கள். இந்த உண்மையை உணராத தமிழர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை பழிப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். ஆம், தமிழைப் படிப்பதில் கவனம் செலுத்தாமல் தமிழைப் பழிப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். அதனால்தான் தற்போதுள்ள தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்குத் தனித்தமிழில் பேசவும் தெரியவில்லை. தவறின்றித் தமிழில் எழுதவும் தெரியவில்லை. தமிழர்களே! ஓர் உண்மையைச் சொல்கிறேன் . அதை நெஞ்சில் நிறுத்துங்கள் . நமக்குச் சோறுபோட்ட மொழி தமிழ்மொழி. நம் இனத்தை , பண்பாட்டை , மொழியை கூறுபோட்ட மொழிதான் ஆங்கிலம் . ஆகவே , ஆங்கில மொழியின் வால்பிடித்து வாழாதீர்கள். "ஆங்கிலம் படிப்பது தவறு என்று நான் சொல்லவில்லை . ஆங்கிலத்தை மட்டுமே படிப்பதுதான் தவறு " என்று சொல்கிறேன் . இந்த உலகத்தில் ஆங்கிலப் புலமையில் என்றுமே தமிழர்கள்தான் முதலிடத்தில் இருக்கிறார்கள். ஏனென்று தெரியுமா? எவனொருவன் தாய்மொழியில் முழுமையான புலமை பெற்று இருக்கிறானோ அவன் எந்த மொழியையும் எளிமையாகக் கற்றிடுவான். அம்மொழியில் புலமையைப் பெற்றிடுவான்.
தமிழீழ நாட்டிலுள்ள யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்தான் ஆறுமுக நாவலர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்று பல மொழிகளில் புலமை பெற்றவர் இவர். தமிழ் நூல்களை முதன்முறையாக செவ்வையான முறையில் அச்சிட்டவர் இவர்தான். நூல்கள் அச்சிடுவதற்கான அச்சு இயந்திரம் வாங்குவதற்கு ஒருமுறை சென்னை வந்தார் ஆறுமுக நாவலர். அப்போது ஒருநாள் காலையில் சென்னை கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது கடற்கரை ஒட்டிய பகுதியில் இருந்த குடிசைகளில் எதிர்பாரா வகையில் தீப்பிடித்தது. இதை நேரில் பார்த்தவர் ஆறுமுக நாவலர் என்ற காரணத்தினால் சான்று ( சாட்சி) சொல்லும் பொருட்டு இவ்வழக்கு விசாரணைக்காக அவரை அழைத்தது நீதிமன்றம்..
தன் மாணவர்களுடன் நீதிமன்றத்திற்குச் சென்றார் ஆறுமுக நாவலர்.. தான் நேரில் கண்ட காட்சிகளை ஆங்கிலத்தில் மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார். ஆறுமுக நாவலரின் ஆங்கிலப் புலமையைக் கண்டு நீதிபதி வியப்படைந்தார். பின் தமிழர் ஒருவர், இந்தளவுக்கு ஆங்கில மொழியைப் புலமையோடு பேசுகிறாரே என்று வெறுப்படைந்தார் . அதனால் ஆறுமுக நாவலரைப் பார்த்து, " நீங்கள் தமிழிலேயே பேசுங்கள். நீங்கள் பேசுவதை என் உதவியாளர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து என்னிடம் கூறுவார் " என்றார் நீதிபதி. . சரி என்று ஒப்புக்கொண்ட ஆறுமுக நாவலர் , "அஞ்ஞான்று எல்லிஎழ நானாழி போதின்வாய் ஆழிவரம் பனைத்து காலேற்றுக் காலோட்டப் புக்குழி" என்று தான் கண்ட காட்சிகளைச் செந்தமிழில் விளக்கத் தொடங்கினார். ( எல்லி - ஞாயிறு , நானாழி - நான்கு நாழிகை, ஆழிவரம்பு - கடற்கரையோரம், கால் ஏற்று - காற்று வாங்க , கால் ஓட்டம் - சிறுநடை , புக்குழி - புறப்பட்டபோது அதாவது, " ஞாயிறு உதிப்பதற்குச் சில மணித்துளிகளுக்கு முன்னால் கடற்கரையோரம் காற்று வாங்க நான் சிறுநடைக்குப் புறப்பட்டபோது அங்கே குடிசைகள் தீப்பற்றி எரிவதைக் கண்டேன் " என்றார். )
இதை மொழிபெயர்க்க முடியாமல் ஆங்கிலேய மொழிபெயர்ப்பாளர் திணறிப் போனார். இதைக்கண்டு சினம்கொண்ட நீதிபதி மீண்டும் ஆங்கிலத்திலே விளக்கும்படி ஆறுமுக நாவலரிடம் வேண்டினார். ஆனால் , ஆறுமுக நாவலரோ செந்தமிழிலேயே தன் பேச்சைத் தொடர்ந்தார் . செய்வதறியாது நின்றார் நீதிபதி . சிறிது நேரம் கழித்துத் தன் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நீதிபதியிடம் விளக்கும்படி தன் மாணவரிடம் கூறினார் ஆறுமுக நாவலர் . உடனே ஆறுமுக நாவலரின் மாணவர் , ஆறுமுக நாவலரின் செந்தமிழ்ப் பேச்சை ஆங்கிலத்தில் மிக அழகாக மொழிபெயர்த்து விளக்கினார். இதைப் பார்த்து வாயடைத்து போனார் நீதிபதி. . தான் மட்டுமல்ல, தன் மாணவர்களும் ஆங்கிலத்தில் புலமை மிக்கவர்கள் என்பதை செருக்குற்ற அந்த ஆங்கிலேய நீதிபதிக்கு எடுத்துக்காட்டினார் ஆறுமுக நாவலர். தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த புலமைப்பட்டிருந்த ஆறுமுக நாவலரின் திறமையைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் , தங்களின் புனித நூலான திரு விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டினார்கள். ஆம் இன்று தமிழ்நாட்டில் உள்ள கிறித்தவர்கள் அனைவரும் படிக்கின்ற திரு விவிலியத்தை ( பைபிள் ) தமிழில் மொழி பெயர்த்தவர் ஆறுமுக நாவலர்தான். தாய்மொழியாம் தமிழ் மொழியில் புலமை பெற்று இருந்ததால்தான் ஆறுமுக நாவலரால் ஆங்கிலத்திலும் புலமை பெற முடிந்தது. ஆம், எவன் ஒருவன் தன் தாய்மொழியில் புலமை பெறுகிறானோ, அவனால்தான் மற்ற மொழிகளை எளிமையாகக் கற்றுக் கொள்ளவும், புலமை பெறவும் முடியும். அதனால் தாய்மொழியான தமிழை முறையாக கற்றுக் கொள்ளுங்கள். தமிழ் வழியில் கல்வி பயிலுங்கள்.
"தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே" என்று ஒரு பழமொழி உண்டு. அதைப்போல,
"தாயைப் பழித்தாலும் தமிழைப் பழிக்காதே " என்று ஒரு புதுமொழியை உருவாக்குங்கள்.
எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. தமிழ் வழியில் கல்வி கற்பதை எள்ளி நகையாட வேண்டாம் என்றுதான் நான் சொல்கிறேன்.
"தமிழா!
அனைத்து மொழிகளையும்
கற்று வை!
அன்னைத் தமிழ் மீது பற்று வை! "
இவண்
ஆ.தி. பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
(அலைபேசி 9965414583 )
0 கருத்துகள்