தமிழ்நாட்டில் எண்ணற்ற மிகவும் பிரபலமான குடவரைக் கோவில்கள் உள்ளன. இதில் மகாபலிபுரம், பிள்ளையார்பட்டி, வெட்டுவான் கோவில், கழுகுமலை போன்றவை இருக்கின்றன. ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக முதன் முதலில் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட குடவரைக் கோவிலை பற்றிதான் இங்கே காண உள்ளோம்.
மண்டகப்பட்டு குடவரைக் கோவில்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு என்னும் கிராமத்தில் தான் உள்ளது இந்த குடவரைக் கோவில் மண்டகப்பட்டு பகுதியிலுள்ள மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள இக்கோவில் 12 அடி வரை பாறையை குடைந்து உருவாக்கப்பட்டது. இக்கோவில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்காகவும் கட்டப்பட்டதாகும்.
இது கி.பி. 590 முதல் 630 வரை ஆட்சி புரிந்த விசித்திரசித்தன் என்னும் பல்லவ மன்னனால் கட்டப்பட்ட கோவிலாகும். இந்த குடவரைக் கோவிலை இலகசிதன கோவில் என்றும், மண்டகப்பட்டு திருமூர்த்தி கோவில் என்றும் அழைப்பார்கள். காஞ்சீபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்த முதலாம் மகேந்திரவர்மனே இந்த விசித்திரசித்தன். மகேந்திரவர்மனுக்கு பலபட்டப்பெயர்கள் உண்டு. அதில் இலக்சிதன் என்னும் பெயரை இக்கோவிலுக்கு வைத்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதல் குடவரைக் கோவில்
இக்கோவில் தமிழ்நாட்டின் முதல் குடவரைக் கோவில் மற்றும் ஆண்டு குறிப்பிடப்பட்ட பழமையான கற்கோவில் என்று கருதப்படுகிறது. இது ஒரு குடவரைக் கோவில் என்பதால், கோவிலின் அமைப்பு மலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அழகிய குடவரைக் கோவிலை மலைப்பகுதியிலிருந்து செங்குத்தான இடத்தில் காண முடிகிறது. தரைப்பகுதியிலிருந்து 4 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலை பார்ப்பதற்கு அழகிய மண்டபம்போல காட்சியளிக்கிறது. கோவிலின் இருபக்கமும் துவார பாலகர்கள் இருக்கிறார்கள் கோவிலின் வலது பக்கத் தில் மழுஉடையாரும், இடதுபுறத்தில் சூலத்தேவரும் இருக்கிறார்கள்.
சமஸ்கிருத கல்வெட்டு
இக்கோவிலை விசித்திரசித்தன் கல், மரம், உலோகம், கலவை எதுவும் இன்றி உருவாக்கியுள்ளார். கோவில் உயரமான மேடை போன்று காட்சி தருகிறது. மேலும் குகையின் மேல் முகப்பு சற்று நீண்டு அமைந்திருப்பதால் மழைநீர் உள்ளே செல்லாதவண்ணம் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமின்றி இக்கோவில் அர்த்தமண்டபம், முகமண்டபம், கருவறை ஆகிய அமைப்புகளுடன் விளங்குகிறது. அர்த்தமண்டபத்தில் 2 அரைத்தூண்களும், 2 முழுத்தூண்களும் உள்ளன. 2 முழுத்தூண்களும் தரையில் இருந்துசதுரம், கட்டு, சதுரம் என உள்ளது. அவ்வாறேமுகமண்டபமும் அமைக்கப்பட் டுள்ளது. முகப்பின் இருபுறமும் அமைந்து உட்குழிவு வளைவில் இருபுறமும் வாயிற் காவலர்கள் நிற்கின்றனர்.மேற்குப்புறத்தில் உள்ள அரைத்தூணில் பல்லவ கிரந்தத்தில் வடமொழி கல்வெட்டில் இக்குடவரை கோவில் லக்ஷிதாயனம் என பெயரிடப்பட் டுள்ளது.
இக்குடவரைக்கோலியில் உள்ள மகேந் திரவர்மனின் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, பல்லவ கிரந்த எழுத்தில் உள்ள சமஸ்கிருத கல்வெட்டு, இந்த கோவிலை அழியும் பொருட்களான கல், மரம், உலோகம், சுதை(கலவை) போன்றவையின்றி நான் முகன்(பிரம்மன்), திருமால்(விஷ்ணு), சிவபெருமான ஆகிய 3 தெய்வங்களுக்கும் விசித்திர சித்தனாகிய நான் தோற்றுவித்தேன் என்று மகேந்திரவர்மன் கூறுவ தாக குறிப்பிடுகிறது. பல்லவகாலத்து கல்வெட்டு என்பதால் கிரந்த எழுத்தில் 'லக்ஷிதாயனம் என்று கலவெட்டில் குறிப் பிடப்பட்டுள்ளது.
3 கருவறைகள்
கோவிலுக்குள் செல்லும்போது தடித்த நேர்த்தியான தூண்களைகாணாலாம் ஆரம்ப காலக்கட்டத்தில் உருவாக்கிய குடவரைக்கோவில் என்பதால் அதன் தூண்களும் எளிமையாகவே இருக்கிறது. வளைந்த போதிகைகள் உத்திரத்தை அழகாக தாங்கி நிற்கிறது. இக்கோவிலின் முகப்பு நீண்டிருப்பது தனிச்சிறப்பாகும். இன்னொரு விஷயம் அரத்தமண்டபம். முகமண்டபத்தைவிட கொஞ்சம் மேலோங்கியிருக்கிறது.கருவறை, அர்த்தமண்டபத்தை விட கொஞ்சம் மேலோங்கியிருக்கிறது. இதை பார்ப்பதற்கு படி போன்ற அமைப்பை தருகிறது.
இக்கோவிலின் பின்புறத்தில் 3 கருவறைகள் உள்ளன. அவற்றில் இறைவன் திருமேனியை வைக்க ஏதுவாக குழிகளும் காணப்படுகின்றன. ஆனால் தற்போது சிலை ஏதுமில்லை. கருவறை சுவரின்மேல் சுண்ணாம்பு பூசியபூச்சு காணப்படுவதால் இறைவன் வடிவங்கள் ஓவியங்களாகவும் தீட்டப்பட்டிருக்கலாம் என கருத முடிகிறது. மகேந்திரவர்மனுக்கு சித்திரகாரப்புலி என்ற சிறப்பு பெயரும் உண்டு என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.
கட்டிடக்கலைக்கு திருப்புமுனை
ஆய்வுத்துறையால் பாதுகாக்கப்பட்டு இந்த கோவில் கட்டிடக்கலைக்கு திருப்புமுனையாக இருந்ததாக சொல்லக் கூடிய கல்வெட்டு இருப்பதை காணலாம். பல்லவர்கால சிறப்பான கலைப்படைப்பாக விளங்கும் மண்டகப்பட்டு குடவரைக் கோவில், மத்திய அரசின் தொல்பொருள் பராமரிக்கப்பட்டு வருகிறது. முதன் முதலாக கட்டப்பட்ட இந்த குடவரைக் கோவில்காலத்தை வென்று இன்றும் கம்பீரமாக நிற்கிறது என்பது ஆச்சரியமாகவே உள்ளது.
எப்படி செல்வது?
இக்கோவிலானது விழுப்புரத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும், செஞ்சியில் இருந்து 17 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்குள்ள முதன்மை சாலையில் இருந்து குடவரைக் கோவிலுக்கு செல்ல பஸ் வசதி இல்லை என்பதால் ஒரு கி.மீ. தொலைவுக்கு நடந்தேதான் செல்ல வேண்டும்.
Source
தினத்தந்தி,7/8/2025,9 பக்கம்
0 கருத்துகள்