தமிழ் அறிவோம்!
" வணிக மேலாண்மை "
பழங்காலம் முதல் பண்டமாற்று முறையில் வணிகம் செய்தவர்கள் தமிழர்கள். பண்டத்தை மாற்றி விற்றாலும் தங்கள் பண்பாட்டை மாற்றாமல் வணிகம் செய்தவர்கள் தமிழர்கள். அதாவது, ஒருபோதும் தங்கள் நேர்மையை விற்காமல் வணிகம் செய்தார்கள். நுகர்வோரின் வயிற்றில் அடித்து வருவாய் ஈட்டவேண்டும் என்று அவர்கள் எப்போதுமே எண்ணியதில்லை. நுகர்வோரைத் தம் உறவினராய் எண்ணினார்கள். பிறர்பொருளைத் தம் பொருள்போல் எண்ணிப் பாதுகாத்தனர்.
" வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். "
( குறள் - 120)
" பிறர் பொருளையும் தம் பொருள்போல் போற்றிச் செய்தால் , அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும் " என்கிறார் வள்ளுவர். வள்ளுவர் சொன்ன வழியில்தான் தமிழர்கள் தங்கள் வாணிகத்தைப் போற்றிக் காத்தனர். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அன்பின் துணையால் அதிகரிக்கச் செய்தனர். தங்கள் வணிகத்தின் வளர்ச்சியைத் தன் அறிவின் துணையால் அதிகரிக்கச் செய்தனர்.
''புல்லிஓர் பண்டம் கொள்வார் வினவின் அப்பொருள் தம் பக்கல்,
இல்எனின் இனமாய் உள்ள பொருள் உரைத்து எதிர் மறுத்தும்;
அல்லதுஅப் பொருள் உண்டு என்னின், விலைசுட்டி அறுத்து நேர்ந்தும், சொல்லினும் இலாபம் கொள்வார் - தொன்மரபு இருக்கை சொல்வாம்'
( பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம்)
மளிகைக் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் வருகிறார், ‘பச்சரிசி இருக்கிறதா?’ என கடைக்காரரிடம் வினவுகிறார்.
வாடிக்கையாளர் கேட்ட அரிசி கடையில் இல்லாத நிலையிலும் கூட கடைக்காரர் ‘இல்லை’ என்று சொல்லமாட்டாராம்.
மாறாக, ‘புழுங்கல் அரிசிதான் உள்ளது’ என்று சொல்லி விற்பனையைத் தொடர்வாராம்.
மேலும் ‘பச்சரிசி இல்லை’ என்று எதிர்மறையாகச் சொல்வதால் நேரவிரயம்தான் ஏற்படும். தவிர இலாபம் என்று எதுவுமில்லை என்பதால் ‘புழுங்கல் அரிசிதான் உள்ளது’ என நேர்மறையாகச் சொல்லி அவரிடம் அதனை விற்க முயல்வாராம்.
அதே போல அவர் கேட்ட அரிசியே இருந்தால் கூட - ‘இருக்கிறது’ எனச் சொல்லமாட்டாராம், மாறாக ‘கிலோ இத்தனை ரூபாய்’ என்று உரைப்பாராம் .
‘பச்சரிசி இருக்கிறது’ என நேரடியாகப் பதிலுரைத்தால், வாடிக்கையாளர் அடுத்து, ‘என்ன விலை? ’ என்று கேட்பார். கடைக்காரர் ‘கிலோ இத்தனை ரூபாய்’ என்று பதில் சொல்லவேண்டும். அதனால் நேரம் விரயமாகும். எனவே, கேள்விக்கு விடையாக விலையையே நேரடியாகச் சொல்லிவிட்டால் நேரம் மிச்சமாகும், அந்த நேரத்தில் இன்னொரு வாடிக்கையாளரைக் கவனிக்கலாம் அல்லவா?.
இதுதான் அப்பாடல் உணர்த்தும் வணிக மேலாண்மையின் நுட்பமாகும்.
நம் முன்னோர்கள் எத்தனை அறிவாளிகள் என்பது இப்போது விளங்குகிறதா? காலங்காலமாக சிறிய பெட்டிக் கடைகளிலும் சந்தைகளிலும் பின்பற்றிய நுணுக்கங்களை வணிக மேலாண்மை படித்தவர்கள் கூட அறிந்திட மாட்டார்கள்.
சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லிப் பதில் பெற வேண்டுமே தவிர வளவளவென்று தேவையற்றதைப் பேசி காலவிரயம் செய்யாமல் வணிகம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் நம் முன்னோர்கள் பின்பற்றிய நுட்பங்களில் முதன்மையானது ஆகும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)
0 கருத்துகள்