Ad Code

Ticker

6/recent/ticker-posts

நந்தி சீறியபின்

 


பகைமன்னர்களின் செறுக்கினைக் கண்டு, சினம்கொண்டு நந்தி வர்மன் தன் படைகளோடு பகைநாட்டில் புகுந்தால்,  அப்பகை நாட்டின் நிலை என்னவாகும் தெரியுமா? ஒன்றும் ஆகிவிடாது. அப்படியேதான் இருக்கும். அதன் நிலை மாறிவிடும். அதாவது, நிலைகுலைந்து போய்விடும் என்பதை ஒரு பாடலில்  இருபொருள்பட ( இரட்டுற மொழிதல் ) பாடி அந்நாட்டின் இருவேறு நிலைகளையும் விளக்கியிருக்கிறார் நந்திக் கலம்பகத்தை இயற்றிய புலவர்.  நயமிக்க அப்பாடலை இங்குக் காண்போம். 


" ஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர்வனமும் 

தேரும் உடைத்தென்பர் சீறாதநாள் நந்தி சீறியபின் 

ஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர்வனமும் 

தேரும் உடைத்தென்பரே தெவ்வர் வாழும் செழும்பதியே " 


( நந்நிக் கலம்பகம் - 95)


நந்திவர்மன் படையெடுக்காமல் இருந்த காலத்தில்  பகைவரது நாட்டில் ஊரும், அரவமும் ( மக்கள் ஆரவாரமும்), தாமரைக் காடும் , உயர்வனமும்  தேரும் இருந்தன. அதாவது , வளமிக்க ஊர்களும்,  எங்கும் விழா ஒலியும், தாமரைக் காடு நிரம்பிய நீர்நிலைகளும் , உயர்ந்த ( அழகிய) வனங்களும், தேர்களும்  இருந்தன.


 நந்திவர்மன் சீறிப் ( சினம்கொண்டு) படையெடுத்துப் பகைவர் நாட்டை அழித்த பின்பும் ஊரும், அரவமும், தாமரைக் காடும்,  உயர்வனமும், தேரும் இருக்கின்றன. ஆனால், இப்போது இருப்பவை,  ஊரும் அரவமும் ( ஊர்ந்து செல்லும் பாம்புகள் வாழும் பகுதியாக அது உள்ளது. ), தாமரைக் காடும் ( தா + மரை,  தாவுகின்ற மான்கள் செல்லுகின்ற இடமாக இருக்கிறது.  அதாவது மனிதர்கள் வாழத் தகுதியற்ற  பகுதியாக அது மாறிவிட்டது. விலங்குகள் வாழும் பகுதியாக அது உள்ளது.) , உயர் வனமும் ( உயர்ந்த மரங்கள் கொண்ட  காடுகளாக உள்ளன) ,  தேரும் ( பேய்த்தேர் என்று சொல்லக் கூடிய கானல்நீர் தோன்றும்  பகுதியாக இருக்கிறது. அதாவது, பாலைவனமாக அது மாறிவிட்டது. ) உடைத்து ( உடையதாக)  தெவ்வர் ( பகைவர்) வாழும் செழும்பதி ( செழிப்பான நாடு) இப்போது செழிப்பற்ற நாடாக மாறிவிட்டது. 


பகை மன்னனின் அறிவற்ற செயல்களைக் கண்டு நந்திவர்மன் சினம்கொண்டு பகை நாட்டின் மீது  படையெடுத்து சென்றபின்,  செழிப்பான நாடு கூட காடாகவும், பாலைவனமாகவும் மாறி மனிதர்கள் வாழத் தகுதியற்ற நாடாக அது மாறிவிடும் என்பதையே இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது. 

 

இவண் 

ஆ.தி.பகலன், 

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

செங்கல்பட்டு மாவட்டம்.

( அலைப்பேசி - 9965414583)

கருத்துரையிடுக

0 கருத்துகள்